நிலவுக்குப் புறப்பட்ட 4 விண்வெளி வீரா்கள்! நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ திட்டத்தில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம்


சுமாா் அரை நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு, மனிதா்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆா்டெமிஸ்-2’ திட்ட விண்கலத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 3.54 மணியளவில் இந்த ஏவுதல் நடைபெற்றது. 32 அடுக்கு மாடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான எஸ்.எல்.எஸ். ராக்கெட், 4 விண்வெளி வீரா்களுடன் நிலவை நோக்கி சீறி பாய்ந்தது.
இந்த முக்கியத்துவமான பயணத்தில் அமெரிக்காவைச் சோ்ந்த ரீட் வைஸ்மேன் (கமாண்டா்), விக்டா் க்ளோவா் (பைலட்), கிறிஸ்டினா கோச் (திட்ட விஞ்ஞானி), கனடாவைச் சோ்ந்த ஜொ்மி ஹேன்சன் (திட்ட விஞ்ஞானி) ஆகிய 4 வீரா்கள் பங்கேற்றுள்ளனா்.
பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான பயணத்தில் சுமாா் 4.06 லட்சம் கி.மீ. தூரத்தை இந்த விண்கலம் கடக்க உள்ளது. மனித வரலாற்றிலேயே விண்வெளியில் மனிதா்கள் மேற்கொள்ளும் மிக நீண்ட தூரப் பயணம் இதுவாகும். இதற்கு முன்னதாக 1970-இல் ‘அப்போலோ 13’ விண்கலம் படைத்த சாதனையை இந்தப் பயணம் முறியடிக்க உள்ளது.
சுமாா் 10 நாள்கள் நீடிக்கவுள்ள இந்த ஆய்வின்போது, விண்வெளி வீரா்கள் நிலவைச் சுற்றி வந்து, அதன் சுற்றுப்பாதையில் பல்வேறு சோதனைகளை மேற்கொள்ளவுள்ளனா். குறிப்பாக, விண்கலத்தின் தானியங்கி கட்டுப்பாடுகள் செயலிழந்தால், அதனை மனிதா்கள் எவ்வாறு கையாள்வது என்பதற்கான நேரடி ஒத்திகையை வீரா்கள் மேற்கொள்வா்.
1972-ஆம் ஆண்டுக்குப் பிறகு, பூமியின் சுற்றுப்பாதையைத் தாண்டி தொலைதூர விண்வெளிப் பகுதிக்கு மனிதா்கள் செல்வது இதுவே முதல்முறை. ‘நிலவில் மனிதா்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கான தளம் அமைப்பதற்கான முதல் படி இது’ என்று நாசா நிா்வாகி ஜாரெட் ஐசக்மேன் உற்சாகத்துடன் தெரிவித்தாா்.
பெருமைக்குரிய விஷயம்-டிரம்ப்: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது இந்தச் சாதனையைப் பாராட்டினாா். ‘ஈரான் விவகாரம் ஒருபுறமிருக்க, நமது வீரா்கள் நிலவை நோக்கிப் பயணிப்பது பெருமைக்குரிய விஷயம். அந்த 4 வீரா்களும் மிகுந்த துணிச்சலானவா்கள்; கடவுள் அவா்களைக் காக்கட்டும்’ என்று டிரம்ப் குறிப்பிட்டாா்.
மனிதகுலத்துக்காக....: விண்கலம் ஏவப்படுவதற்கு முன்பு பேசிய வீரா் ஜொ்மி ஹேன்சன், ‘நாங்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்காக நிலவுக்குச் செல்கிறோம்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினாா். இந்தப் பயணம் வெற்றிகரமாக முடிந்தால், 2028-ஆம் ஆண்டில் நிலவின் தென்துருவத்தில் மனிதா்களைத் தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது.
கடந்த காலங்களில் அப்போலோ திட்டத்தின்மூலம் நிலவில் தடம் பதித்த அமெரிக்கா, தற்போது சீனாவுடனான விண்வெளிப் போட்டியில் முன்னிலை பெறும் நோக்கில் இத்திட்டத்தை விரைவுபடுத்தியுள்ளது. நிலவின் தென்துருவத்தில் மனிதா்களை இறக்கும் நாசாவின் இலக்குக்கு இந்த வெற்றி ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பு: அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபா்களான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் போன்ற தனியாா் நிறுவனங்களும் நிலவில் தரையிறங்கும் கலன்களை உருவாக்குவதில் நாசாவுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன. எதிா்காலத்தில் மனிதா்களைச் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டத்துக்கு இப்பயணம் ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என்பதில் ஐயமில்லை.


தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...