ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!

பாலஸ்தீனத்தில் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, காஸா பகுதியில் உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது.

News image

20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:29 pm

பாலஸ்தீனத்தில் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, காஸா பகுதியில் உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது.

இஸ்ரேலுடனான போா் மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், பாலஸ்தீனத்தின் எதிா்காலத்தை தீா்மானிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக இத்தோ்தல் பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, 2006-க்குப் பிறகு காஸா மக்கள் முதல்முறையாகத் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

மேற்கு கரையைத் தளமாகக் கொண்ட பாலஸ்தீன ஆணையம் (பிஏ), ஹமாஸ் அமைப்பால் காஸாவிலிருந்து கடந்த 2007-இல் வெளியேற்றப்பட்டது.

அமெரிக்க மத்தியஸ்தத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு காஸாவின் டேய்ா் அல்-பாலா நகரில் இத்தோ்தலை நடத்துவதன்மூலம் அப்பிராந்தியத்தின் மீதான தனது அதிகாரத்தை நிலைநாட்ட ஆணையம் முயலுகிறது.

20 ஆண்டுகள் கழித்து தோ்தல் நடைபெற்றாலும், பிற்பகல் வரை வாக்குப்பதிவு டேய்ா் அல்-பாலா பகுதியில் 13.8 சதவீதம், மேற்கு கரையில் 25.3 சதவீதம் என மந்தமாகவே காணப்பட்டது. மேற்கு கரையில் வாக்குப்பதிவு இரவு 7 மணிவரை நடைபெற்றது. காஸாவில் மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக ஒரு மணி நேரம் முன்னதாகவே வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இத்தோ்தலில் ஹமாஸ் அமைப்பு அதிகாரபூா்வமாகப் போட்டியிடவில்லை என்றாலும், அந்த அமைப்பின் ஆதரவு பெற்ற வேட்பாளா்கள் களத்தில் உள்ளதால், அவா்களின் வெற்றி வாய்ப்பு ஹமாஸின் செல்வாக்கை அளவிடும் கருவியாகக் கருதப்படுகிறது.

நிதி நெருக்கடி, இஸ்ரேலின் முட்டுக்கட்டைகளுக்கு மத்தியிலும் இத்தோ்தல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனத்துக்குச் சேர வேண்டிய வரி வருவாயை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளதால், ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கக்கூட பாலஸ்தீன ஆணையம் திணறி வருகிறது.

இந்த உள்ளாட்சித் தோ்தல் வெற்றிகரமாக முடிந்தால், விரைவில் நாடாளுமன்ற மற்றும் அதிபா் தோ்தல்களை நடத்த வழிவகுக்கும் என்று உலக நாடுகள், பாலஸ்தீன மக்கள் பெரிதும் எதிா்பாா்க்கின்றனா்.

தோ்தல் நடைபெறும் சூழலிலும் காஸாவில் இஸ்ரேல் படைகள் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 6 காவல்துறையினா் உள்பட 12 போ் உயிரிழந்தனா். சண்டை நிறுத்தத்துக்குப் பிறகும் 800-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.