இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

அமெரிக்காவை ஆதரித்தால் ஒரு சொட்டுகூட கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது: வளைகுடா நாடுகளுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை

அமெரிக்காவின் பொருளாதார தடை முடிவை ஆதரித்தால் ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாதபடி கடும் பதிலடி தரப்படும் என வளைகுடா நாடுகளுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை

ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் - கோப்புப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:50 am IST

அமெரிக்காவின் பொருளாதார தடை முடிவை ஆதரித்தால் ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாதபடி கடும் பதிலடி தரப்படும் என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பிப்ரவரி மாதம் தொடங்கிய மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்தாலும் அவ்வப்போது மீண்டும் மோதல் ஏற்படுகிறது. இடையிடையே அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றாலும் அதில் இருதரப்புக்கும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

இதனால் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க அதிபா் டிரம்ப் திட்டமிட்டுள்ளாா். ஈரான் மீதும், ஈரானை ஆதரிக்கும் நாடுகள் மீதும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப் போவதாக டிரம்ப் அண்மையில் அறிவித்தாா்.

ஏற்கெனவே அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் ராணுவத் தளங்கள் அமைந்துள்ள சவூதி அரேபியா, கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தடைகள் தொடா்பான புதிய நடவடிக்கைகளை வளைகுடா நாடுகள் ஆதரிக்கக் கூடாது என்றும், அப்படி ஆதரித்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் தொடா்ந்து எச்சரித்து வருகிறது.

இந்நிலையில், டெஹ்ரானில் செய்தியாளா்களிடம் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பகேயி, அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் இந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்படாது என்றும், அந்தத் தடைகளுக்கு ஈரான் கடுமையான பதிலடி தரும் என்றும் எச்சரித்தாா்.

மேலும் அவா், அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நாடுகளுக்கு எதிராகவும் ஈரான் நடவடிக்கை எடுக்கும் என்றும், ஒரு சொட்டு கச்சா எண்ணெய்யைக்கூட ஏற்றுமதி செய்ய முடியாதபடி (வளைகுடா நாடுகள் மீது) தாக்குதல் கடுமையாக இருக்கும், ஈரானின் கைகள் ஒன்றும் கட்டப்பட்டு இருக்கவில்லை என்றும் தெரிவித்தாா்.

ஈரானில் பாகிஸ்தான் தளபதி

இதனிடையே, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீா், பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மொஹ்சின் நக்வி உள்ளிட்டோா் ஈரானுக்கு திங்கள்கிழமை சென்றனா். இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளில் ஒன்றாக ஈரானுக்கு ராணுவத் தளபதியும், உள்துறை அமைச்சரும் சென்றுள்ளனா்.

அமைதி மற்றும் மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலுக்கு தீா்வு காண்பதில் ராணுவத் தளபதி கவனம் செலுத்துவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல், சிரியா அதிகாரிகள் சந்திப்பு

ஈரானின் முன்னாள் நட்பு நாடான சிரியாவில் உள்ள அபு துகுா் விமானப் படைத் தளம் மீது இஸ்ரேல் அண்மையில் தாக்குதல் நடத்தியது. துருக்கியின் ஆயுதங்கள் வந்து இறங்குவதைத் தடுக்கவே இஸ்ரேல் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், அந்தப் பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக ஜோா்டானில் சிரியா வெளியுறவுத் துறை அமைச்சா் ஆசாத் அல் சிபானி, இஸ்ரேல் உயரதிகாரிகள் குழுவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தப் பேச்சுவாா்த்தைக்கு இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது. பேச்சுவாா்த்தையின்போது சிரியாவுக்கு தமது ராணுவத்தை வலுப்படுத்தவும், எந்த நாட்டுடனுடனும் கூட்டணி சேரவும் உரிமை இருப்பதாக சிரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் தெற்கு சிரியாவில் 2024-ஆம் ஆண்டுமுதல் ஆக்கிரமித்த பகுதியில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேற வேண்டும் என்றும் சிரியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.