ரஷியாவின் எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியா சம்மதம்.. மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்கா!
ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியா உறுதியளித்திருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்தியா மீதான 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் கடந்த திங்கள்கிழமை தெரிவித்தார்.
அப்போது, ‘ ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய மோடி ஒப்புக்கொண்டார். இதன்மூலம் ரஷியா - உக்ரைன் போர் முடிவுக்கு வரும்’ என்றும் கூறியிருந்தார். ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்தியா தரப்பில் எவ்வித அதிகாரபூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கு மத்தியில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்திய தரப்பில் இருந்து ரஷியாவுக்கு இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. இந்தியாவுடன் அனைத்து நிலைகளிலும் உறவை மேம்படுத்த ரஷியா எப்போதும் தயாராகவே இருக்கிறது என க்ரெம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தில் ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியா உறுதியளித்திருப்பதாக வெள்ளை மாளிகை செயலர் கரோலின் லியாவிட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கரோலின், “ரஷிய எண்ணெய் இறக்குமதியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிப்பதற்கும் இந்தியா உறுதிகொண்டுள்ளது.
வெனிசுவேலாவின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தையும் அமெரிக்கா நிர்வகிப்பதால், இந்தியா வெனிசுவேலாவிலிருந்து எண்ணெய் வாங்க முடியும். இது அமெரிக்கா தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும்” எனத் தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாள்களாக ரஷியா - இந்தியா இடையேயான நட்புறவில் அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து தலையிட்டு வரும் நிலையில், மத்திய அரசுத் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னிச்சையாக இந்தியாவுடன் வா்த்த ஒப்பந்தத்தை அறிவித்தது மூலம் அவரிடம் பிரதமர் மோடி முழுமையாக சரணடைந்துவிட்டதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
White House Press Secretary Karoline Leavitt also claimed that India could buy oil from Venezuela, which she believes would be beneficial to American workers and industries, as Washington currently oversees key aspects of Venezuelan oil trade.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

