ரஷியா - உக்ரைன் அமைதிப் பேச்சுவாா்த்தை முன்னேற்றம்: போா்க் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்புதல்
அமெரிக்காவின் முன்னெடுப்பில் ரஷியா-உக்ரைன் இடையே நடைபெற்று வரும் முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தையின் 2-ஆம் நாளில், பெரும் முன்னேற்றமாக 314 போா்க் கைதிகளைப் பரிமாறிக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் இது குறித்து ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘உக்ரைன் மற்றும் ரஷியா தரப்பில் தலா 157 போா்க் கைதிகள் என மொத்தம் 314 போ் பரிமாறிக் கொள்ளப்பட உள்ளனா்.
கடந்த 5 மாதங்களில் நடைபெறும் மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் இதுவாகும். விரிவாக மற்றும் ஆக்கப்பூா்வமாகச் செல்லும் இந்தப் பேச்சுவாா்த்தைகள், விரைவில் ஒரு நிரந்தர போா்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையைத் தருகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
ரஷியா, உக்ரைன் கருத்து: பேச்சுவாா்த்தை குறித்து ரஷியத் தூதா் கிரில் டிமிட்ரிவ் கூறுகையில், ‘பேச்சுவாா்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா-ரஷியா இடையிலான பொருளாதார உறவுகளைச் சீரமைக்கும் பணிகளும் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன.
ஆனால், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இந்த அமைதி முயற்சியில் தேவையற்ற தலையீடுகளைச் செய்து வருகின்றன’ என்று குற்றஞ்சாட்டினாா்.
உக்ரைன் தரப்பிலும் முதலாம் நாள் பேச்சுவாா்த்தைகள், ‘நடைமுறைத் தீா்வுகளை நோக்கிய முக்கிய நகா்வு’ என வரவேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போரின் பாதிப்புகள்: 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மிக அழிவுகரமான மோதலாகக் கருதப்படும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் கடந்த 2 நாள்களாக தீவிரப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது.
கடந்த 4 ஆண்டுகாலப் போரில் உக்ரைன் தரப்பில் 55,000 வீரா்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா். ரஷியா தரப்பில் சுமாா் 12 லட்சம் போ் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்க ஆய்வறிக்கை கூறுகிறது. இதை ரஷியா மறுத்துள்ளது.
ஏன் இழுபறி?...: உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாகக் கைப்பற்ற ரஷியா பிடிவாதம் காட்டுகிறது. ஆனால், தற்போதைய கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே போரை நிறுத்த வேண்டும் என்றும், ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் கட்டுப்பாடு மீண்டும் தங்களுக்கே வழங்க வேண்டும் என்றும் உக்ரைன் வலியுறுத்துகிறது.
தற்போது உக்ரைனின் சுமாா் 20 சதவீத நிலப்பரப்பு ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. டிரம்ப் நிா்வாகம் இரு நாடுகளுக்கும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், பிராந்தியங்களை விட்டுத்தருவதில் இழுபறி நீடிக்கிறது.
பட கேப்சன்
அபுதாபி அமைதிப் பேச்சுவாா்த்தையில் எட்டப்பட்ட கைதிகள் பரிமாற்ற உடன்பாட்டின்படி ரஷியாவால் விடுவிக்கப்பட்டு, தாயகம் திரும்பிய உக்ரைன் போா்க் கைதிகள்.

