

கின்னஸ் சாதனையாளர் காலமானார்: உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிகோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
மெக்சிகோ மருத்துவமனையில் கடுமையான சிறுநீரகத் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பிராங்கோ, சிகிச்சைப் பலனின்றி கடந்த டிச. 24 ஆம் தேதி உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என்று கின்னல் சாதனை புத்தகத்தில் பிராங்கோ இடம்பிடித்தார். அப்போது 32 வயதான பிராங்கோவின் எடை 600 கிலோவாக இருந்தது.
இந்த சாதனையின் போது, “என் உடல் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் அதன் போக்கில் தானாகச் சென்றது. நான் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க முயன்றேன். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. அதனால் நான் விரக்தியடைந்தேன்.” என்று பிராங்கோ குறிப்பிட்டிருந்தார்.
பிராங்கோவால் தானாக எழுந்து கழிப்பறைக்குகூட செல்ல முடியாத நிலையில், அவரை நகர்த்துவதற்கு 8 பேர் கொண்ட குழு தேவைப்பட்டது.
இதனிடையே, கடும் உணவுக் கட்டுப்பாடுகள், இரண்டு முறை அறுவைச் சிகிச்சை எனப் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, தனது உடல் எடையை பாதிக்கும் குறைவாக 260 கிலோவாக குறைத்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கரோனா தொற்றில் இருந்தும் வெற்றிகரமாக பிராங்கோ மீண்டிருந்தார்.
இருப்பினும், சக்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த பிராங்கோவுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னதாக கடுமையான சீறுநீரகத் தொற்று ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், 41 வயதில் பிராங்கோ உயிரிழந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.