

(குல்தீப் நய்யார்)
புதுடில்லி, ஜன. 1 - புது காங்கிரஸ் கட்சிக் கட்டளையை (“மாண்டேட்”டை) ஏற்று மத்திய அரசு லோக்சபைத் தேர்தலை ஓராண்டு காலத்துக்கு ஒத்திவைப்பதற்கான மசோதா ஒன்றை பார்லிமெண்டின் மாரிக்காலக் கூட்டத்தில் கொணரும்.
அந்த மசோதா பார்லிமெண்டின் இரு சபைகளிலும் சாதாரண மெஜாரிட்டியால் நிறைவேற்றத்தக்க சாதாரண மசோதாவாக இருக்கும்.
லோக்சபை காலத்தை நீடிக்கும் நடைமுறைப் பற்றி குறிப்பிடும் அரசியல் சட்டத்தின் 83வது ஷரத்து பின்வருமாறு:-
“அவசர நிலைமை பிரகடனம் அமலில் இருக்கும்போது பார்லிமெண்டின் ஆயுட்காலம் ஒவ்வொரு தடவையும் ஓராண்டுக்கு மேற்படாமல் சட்டம் மூலம் நீடிக்கப்படலாம்.”
தமிழ்நாடு அசெம்பிளி நிலைமை என்ன?
தமிழ்நாடு அசெம்பிளியின் ஆயுட்காலமும் 1976 பிப்ரவரியில் முடிவடைகிறது. ஆனால் தமிழ்நாடு அசெம்பிளி விஷயத்தில் என்ன செய்ய உத்தேசம் என்பது இன்னும் எதுவும் தெரியவில்லை.
கேரள அசெம்பிளியின் ஆயுட்காலம் முன்பே நீடிக்கப்பட்டது. அதுவும் 1976 பிப்ரவரியில் முடிகிறது. அது விஷயத்திலும் என்ன செய்ய உத்தேசம் என்று எதுவும் தெரியவில்லை.
காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில் லோக்சபைத் தேர்தல் ஒத்திவைப்பு மட்டுமே குறிப்பால் புலப்படுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு கட்டளை அவசர நிலைமை நீடிப்பு; அதற்கு புது சட்டமெதுவும் இயற்றத் தேவையில்லை. ராஷ்டிரபதி பிரகடனம் பார்லிமெண்டால் அங்கீகரிக்கப்பட்டாலே போதும். பின்னர் அமல் ரத்துச் செய்யப்படும் காலம் வரை அது அமலில் இருந்துவரும். “ஒரு பிரகடனம் பின்னர் வெளியிடப்படும் மற்றொரு பிரகடனத்தால் ரத்துச் செய்யப்படலாம்” என்று அரசியல் சட்டத்தின் 352வது ஷரத்து குறிப்பிட்டுள்ளது.
புதுடில்லி, ஜன. 1 - அக்டோபரில் அவசரச் சட்டம் மூலம் அறிவிக்கப்பட்ட ஒளிப்பு வருமானம் - செல்வத்தை சுயமாக அறிவிக்கும் திட்டம் நேற்று நள்ளிரவுடன் காலாவதியாகியதால் 1973 வரி விதிப்பு (திருத்த) சட்டத்திலுள்ள தண்டனை ஷரத்துக்கள் இன்றிலிருந்து அமலுக்கு வருகின்றன. பார்லிமெண்டின் சென்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டப்படி, வரி ஏய்ப்பாளர்களுக்கு 2 வருடம் வரையில் சிறைத் தண்டனை விதிக்க இடமுண்டு. சிறைத் தண்டனை மற்றும் அபராத விதிப்பை குறைப்பதற்கு கோர்ட்டுகளுக்கு அதிகாரம் கிடையாது.
நேற்று நள்ளிரவுடன் முடிந்த ஒளிக்கப்பட்ட வருமான சுய அறிவிப்பு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள வருமானம் மற்றும் செல்வம் மொத்தம் ரூ. 1313 கோடியைத் தாண்டி இருக்கிறது.
இத்திட்டத்தை வருமான வரி அதிகாரிகளும் ஊழியர்களும் வெற்றிகரமாக அமல் செய்திருப்பதாக மத்திய நிதி மந்திரி திரு. சி. சுப்ரமண்யம் பாராட்டி அவர்களுக்கு ஒருமாத அடிப்படை ஊதியம் “விசேஷதொகையாக” வழங்கப்படும் என இன்று அறிவித்தார். வருமான வரி ஊழியர்களுக்கான வீட்டு வசதித் திட்டங்களுக்கு இவ்வருடத்தில் ரூ. 2 கோடியும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ. 5 கோடியும் ஒதுக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.
இதுகாறும் ஒளித்த வருமானத்தையும் செல்வத்தையும் தாமாக முன்வந்து அறிவித்தவர்களது “துணிச்சலையும் மன உறுதியையும்” மந்திரி பாராட்டினார். திட்டம் வெற்றியடைவது அவர்களது ஒத்துழைப்பால் தான் சாத்தியமாகியது என்றார். அவர்களுக்குச் சட்டப்பூர்வமான முழுப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி கூறினார்.
தமிழ்நாட்டின் ஒளிப்பு வருமான சுய அறிவிப்பு திட்டத்தின் கீழ் ரூ. 154 கோடி வெளியாகி இருக்கிறது.
நாகர்கோவில், ஜன. 1 - குமரி ஜில்லாவில் அரிசி, நெல் விலையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. கோட்டாறு மார்க்கெட்டில் 1 கிலோ நல்ல சம்பா அரிசி 2 ரூபாயாகவும், நெல் 75 படி கொண்ட கோட்டை 1க்கு 100 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.
கோட்டாறு மார்க்கெட்டை சுற்று வட்டாரமாகக் கொண்ட கடுக்கரை, அழகியபாண்டிபுரம், திட்டுவிளை, தாழாக்குடி ஆகிய கிராமங்களில் 75 படி கொண்ட 1 கோட்டை நெல்லுக்கு 85 முதல் 90 ரூபாய் வரைதான். நெல்லுக்கு விலை நாளுக்கு நாள் இறங்குமுகமாகத்தானிருக்கிறது. ஆனால் மேற்படி கிராமங்களிலிருந்து கோட்டாறு மார்க்கெட்டுக்கு நெல் கொண்டு வரவேண்டுமானால் அனுமதி பெற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.