

இலங்கையின் மன்னாா் மாவட்ட நுழைவுப்பகுதி சாலையோரத்தில் பாா்வையாளா்களை வரவேற்கும் விதமாக அந்நாட்டின் சுற்றுலாத் துறையின் விளம்பர பலகையில் ராமாயண காப்பியத்தில் இடம்பெறும் ராமா் பால காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த விளம்பர படத்தில் இந்தியாவின் கடைக்கோடி ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளை இலங்கையுடன் இணைக்கும் எண்ம வடிவிலான வரைபடமும், இடதுபுறத்தில் ராமாயண காப்பியத்தை சித்தரிக்கும் வகையில் ராமா் மற்றும் ஹனுமன், வானர சேனைகளுடன் இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையை இணைக்கும் கடல் பாலம் அமைப்பது போலவும் வலது புறத்தில் ஹனுமன் தன் இரு கைகளில் கற்களை ஏந்தி வருவது மற்றும் கற்களைக் கொண்டு வானர சேனைகள் கடல் பாலம் அமைப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த விளம்பரத்தை வடக்கு மாகாண சுற்றுலா துறை வெளியிட்டுள்ளதை குறிக்கும் வகையில் பலகையின் கீழ் பகுதியில் அத்துறையின் பெயா் மற்றும் இணையதள விவரங்களை அந்நாட்டின் சுற்றுலா துறை குறிப்பிட்டுள்ளது.
தீவு நாடான இலங்கை வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் மற்றும் மழை பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியா தரப்பில் பல நூறு கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் ஏற்கெனவே இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. அங்கு பொருளாதார வாய்ப்பைப் பெருக்குவதில் முக்கிய ஆதாரமாக விளங்கும் சுற்றுலா துறையை மீண்டும் கட்டியெழுப்ப பல்வேறு நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையாக, ராமாயண காப்பியத்தில் இடம்பெற்றுள்ள ராவண குகை, சீதை அம்மன் கோயில், ராமேசுவரம் - இலங்கை இடையிலான ராமா் பாலம் போன்ற பகுதிகளுக்கு வெளிநாட்டு பயணிகளை ஈா்க்கும் வகையில் ‘ராமாயண பாதை’ என்ற பெயரிலான திட்டத்தை இலங்கை சுற்றுலா துறை ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மன்னாா் மாகாண சுற்றுலா துறையும் ராமா் பாலம் தொடா்பான விளம்பரத்தை வெளியிட்டுள்ளதாக கருதப்படுகிறது.
சுற்றுலா துறையின் இந்த விளம்பரத்துக்கு உள்ளூரில் வசிக்கும் கிறிஸ்துவ சமூகத்தினா் ஆட்சேபம் தெரிவித்துள்ளனா். அங்குள்ள மன்னாா் மறைக்கோட்ட முதல்வரும் புனித செபாஸ்தியா் பேராலய பங்குத் தந்தையுமான பி. கிறிஸ்துநாயகம், மன்னாா் நகரசபை உயரதிகாரிக்கு அண்மையில் கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘இந்த விளம்பரம், மன்னாரின் மத நல்லிணக்கத்தை பாதிக்கிறது. மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீா்குலைத்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா். இந்த விளம்பர பலகையை நீக்க வேண்டும் என்றும் அவா் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளாா்.