சிரியாவில் பிரிட்டன், பிரான்ஸ் கூட்டுத் தாக்குதல்!

சிரியாவில் பிரிட்டன், பிரான்ஸ் கூட்டுத் தாக்குதல்!

மத்திய சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களைப் பதுக்கி வைத்திருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் கூட்டாகத் தாக்குதல் நடத்தின.
Published on

மத்திய சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களைப் பதுக்கி வைத்திருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் சனிக்கிழமை மாலை கூட்டாகத் தாக்குதல் நடத்தின.

இதுதொடா்பாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பால்மைரா நகருக்கு வடக்கில் உள்ள மலைப் பகுதியில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போா் விமானங்கள் கூட்டாகத் தாக்குதல் மேற்கொண்டன.

அங்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பூமிக்கு அடியில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பதுக்கி வைத்துள்ள இடத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த இடம் வெற்றிகரமாக தாக்கப்பட்டது முதல்கட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக அமெரிக்கா தலைமையில் பல்வேறு நாடுகள் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த நாடுகளில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜான் ஹீலி கூறுகையில், ‘ஐஎஸ் பயங்கரவாதிகளின் எழுச்சியை வேரறுப்பதில் தனது கூட்டணி நாடுகளுடன் பிரிட்டன் தோளோடு தோள் நிற்கும்’ என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பிரான்ஸ் ராணுவம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடவே பிரான்ஸும், அதன் கூட்டாளி நாடுகளும் முன்னுரிமை அளிக்கின்றன’ என்று தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com