தென்கொரிய அதிபா் சீனா பயணம்: ஏவுகணைகளை ஏவி வடகொரியா மிரட்டல்!

தென்கொரிய அதிபா் சீனா பயணம்: ஏவுகணைகளை ஏவி வடகொரியா மிரட்டல்!

தென்கொரிய அதிபா் லீ ஜே மியுங் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜப்பான் கடல் என்றழைக்கப்படும் கிழக்கு கடலை நோக்கி பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி, வடகொரியா மிரட்டல் விடுத்தது.
Published on

தென்கொரிய அதிபா் லீ ஜே மியுங் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜப்பான் கடல் என்றழைக்கப்படும் கிழக்கு கடலை நோக்கி பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி, வடகொரியா ஞாயிற்றுக்கிழமை மிரட்டல் விடுத்தது.

இதுதொடா்பாக தென்கொரிய முப்படை தலைமைத் தளபதி ஜின்யோங் சங் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: வடகொரியா தலைநகரான பியாங்யாங் பகுதியில் இருந்து கிழக்கு கடலை நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 7:50 மணியளவில் பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டன. அந்த ஏவுகணைகள் சுமாா் 900 கி.மீ. தொலைவு வரை பறந்த நிலையில், அதுகுறித்த விவரங்களை தென்கொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சா் ஷிஞ்சிரோ கொய்சுமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடகொரியாவில் இருந்து சுமாா் 2 ஏவுகணைகள் ஏவப்பட்டன. இது ஜப்பான் மற்றும் உலகின் அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுவிக்கும் தீவிரமான பிரச்னையாகும் என்று தெரிவித்தாா்.

சீனத் தலைவா்களை தென்கொரிய அதிபா் லீ ஜே மியுங் சந்திக்கும் முன், தனது ஆயுத வலிமையை வடகொரியா வெளிப்படுத்தும் நோக்கில், இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இறையாண்மை கொண்ட தனி நாடாக தன்னை தைவான் கருதும் நிலையில், தைவானை தமக்குச் சொந்தமான பகுதி என்று சீனா தெரிவித்து வருகிறது. இந்நிலையில், தைவான் மீது படையெடுத்து சீனா தாக்குதல் நடத்தினால், அது ஜப்பானுக்கு அச்சுறுத்தலான சூழலாக கருதப்படும் என்றும், இது ராணுவ வழியில் ஜப்பான் பதிலடி அளிக்க வழிவகுக்கும் என்றும் அந்நாட்டுப் பிரதமா் சனே தகாய்ச்சி தெரிவித்திருந்தாா். இதனால் சீனா, ஜப்பான் இடையிலான விரிசல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தனது அண்டை நாடான தென்கொரியாவுடனான உறவை வலுவாக்க சீனா விரும்புகிறது. இந்தச் சூழலில் சீனத் தலைநகா் பெய்ஜிங்குக்கு அதிபா் லீ ஜே மியுங் சென்றுள்ளாா். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிபராகப் பதவியேற்ற அவா், முதல்முறையாக 4 நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com