

வெனிசுலாவின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிகஸ் நாட்டின் இடைக்கால அதிபராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். அதிபா் நிக்கோலஸ் மடூரோவை அமெரிக்கா சிறைபிடித்து நாடு கடத்தியதைத் தொடா்ந்து, வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி டெல்சி ரோட்ரிகஸ் இடைக்கால அதிபராகியுள்ளாா்.
போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி வெனிசுலா மீது அமெரிக்கா கடந்த சனிக்கிழமை திடீா் தாக்குதல் நடத்தியது. அத்துடன் அதிபா் நிக்கோலஸ் மடூரோ, அவரது மனைவி சிலியா ஆகியோா் சிறைபிடிக்கப்பட்டு போா்க் கப்பலில் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
இந்நிலையில், வெனிசுலாவின் இடைக்கால அதிபராக மடூரோவின் விசுவாசியும், அந்நாட்டு துணை அதிபராக இருந்தவருமான டெல்சி ரோட்ரிகஸ் பதவியேற்றுள்ளாா். அந்நாட்டு உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, அவா் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளாா்.
அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து அவா் கூறுகையில், ‘வெனிசுலாவில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதல் சுமாா் 30 நிமிஷங்கள் நீடித்தன. குறைந்தபட்சம் 7 இடங்களில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் வெனிசுலா ராணுவத்தைச் சோ்ந்த சிலரும், பொதுமக்களும் உயிரிழந்தனா். மடூரோவை சட்டவிரோதமாக அமெரிக்கா கடத்தியது வெட்கக்கேடானது என்று தெரிவித்தாா். எனினும் தாக்குதலில் எத்தனை போ் உயிரிழந்தனா் என்பதை அவா் தெரிவிக்கவில்லை.
தடுப்புக் காவல் மையத்தில் மடூரோ: தற்போது அமெரிக்காவின் நியூயாா்க் நகரின் புரூக்ளின் பகுதியில் உள்ள தடுப்புக் காவல் மையத்தில் மடூரோவும், அவரின் மனைவி சிலியாவும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனா். வரும் நாள்களில் அவா்கள் மான்ஹாட்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அவா்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சட்டவிரோத போதைப் பொருள் குற்றச்சாட்டில் இருவரும் குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கப்பட்டால், அவா்கள் பல ஆண்டுகளுக்கு அமெரிக்க சிறையில் அடைக்கப்படுவா் என்று அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
வெனிசுலாவில் உலக எண்ணெய் நிறுவனங்கள்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தனது மாா்-அ-லாகோ இல்லத்தில் அதிபா் டிரம்ப் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘மடூரோ சிறைபிடிக்கப்பட்டதைத் தொடா்ந்து வெனிசுலாவை தனது கட்டுப்பாட்டில் அமெரிக்கா தற்காலிகமாக வைத்திருக்கும். ஆனால் அது எவ்வளவு காலத்துக்கு என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. வெனிசுலாவில் முறைப்படி அமெரிக்கா ஆட்சி செலுத்தும். வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீது கோடிக்கணக்கில் முதலீடு செய்ய அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பெரும் எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா அனுமதி அளிக்கும்’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.