

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு அமெரிக்கா வருவதாகவும் பல நாள்களாக குற்றஞ்சாட்டி வந்த அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்கு கடல் வழியாக போதைப் பொருள்கள் கடத்திவரும் கப்பல்களையும் தாக்கி அழிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஜன. 3 ஆம் தேதி காலை வெனிசுவேலாவின் தலைநகர் காரகஸ் உள்ளிட்டப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக அத்துமீறி வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்தது.
அங்கு தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ்ஸையும் அமெரிக்க படைகள் கைது செய்து, நாடுகடத்தி அமெரிக்காவின் நியூயாா்க் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தியது. அவர்கள் மீது போதைப் பொருள் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் சதி, ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரும், கடந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோ, அதிபர் மதுரோ பிடிப்பட்ட சில மணிநேரங்களிலேயே “சுதந்திரத்துக்கான நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்திருந்தார்.
இவருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்து தலைமையேற்க அழைப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், “மச்சாடோவுக்கு உள்நாட்டில் போதிய மரியாதை இல்லை” எனக் கூறியதும் அவரின் நம்பிக்கைகள் தகர்ந்தன.
இதுகுறித்து மரியா மச்சாடோ பேசுகையில், “எனக்கு நோபல் பரிசு கிடைத்தபோது அதை அதிபர் டிரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக அப்போதே அறிவித்திருந்தேன்.
அவர் அந்த விருதுக்குத் தகுதியானவர். ஜனவரி 3-ல் அவரின் நடவடிக்கையை யாரும் நம்பவில்லை. ஆனால், அவர் அனைத்துக்கும் தகுதியானவர் என்று கருதுகிறேன்.
அவர் என்ன நினைக்கிறார் என்பதை உலகத்துக்கு நிரூபித்துவிட்டார். ஜனவரி 3 ஆம் தேதி கொடுங்கோல் ஆட்சியை முடித்து கொண்டுவந்த வரலாற்றில் இடம்பெறும். இது மைல்கல் சாதனை. இது வெனிசுவேலா மக்களுக்கு மட்டுமல்ல; மொத்த மனித குலத்திற்கானது” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.