

காஸாவில், போர்நிறுத்தம் பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 11 வயது பாலஸ்தீன சிறுமி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனக் கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையில், கடந்த 2025 ஆம் ஆண்டு அக்.10 அன்று போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து, போர்நிறுத்தம் அமலுக்கு வந்தவுடன் அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான இடம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள தங்களது வீடுகளுக்குத் திரும்பினர்.
இந்த நிலையில், காஸாவின் ஜபாலியா பகுதியில் இன்று (ஜன. 8) காலை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹம்ஸா ஹவுசோ எனும் 11 வயது பாலஸ்தீன சிறுமி கொல்லப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்காத நிலையில், ஜபாலியா பகுதியில் பாலஸ்தீன குடியிருப்புகளின் மீது இஸ்ரேலிய வீரர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இருதரப்புக்கும் இடையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 424 ஆக அதிகரித்துள்ளதாக, காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரில் 71,391 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 1,71,279 பேர் படுகாயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.