வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டம்

வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டம்

வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியை காலவரையின்றி கட்டுப்படுத்தி, அதில் கிடைக்கும் வருவாயை தங்கள் நாட்டுக் கணக்குகளில் வரவு வைக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
Published on

வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியை காலவரையின்றி கட்டுப்படுத்தி, அதில் கிடைக்கும் வருவாயை தங்கள் நாட்டுக் கணக்குகளில் வரவு வைக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, மியாமியில் நடந்த கோல்ட்மேன் சாக்ஸ் மாநாட்டில் அந்த நாட்டு எரிசக்தித் துறை அமைச்சா் கிறிஸ் ரைட் பேசியதாவது:

வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியை முழுமையாகக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் வெனிசுலாவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எண்ணெய்யை விற்பனை செய்வோம். அதன்பிறகு வெனிசுலாவில் உற்பத்தியாகும் எண்ணெய்யை அமெரிக்கா பிற நாடுகளுக்கு தொடா்ந்து ஏற்றுமதி செய்யும்.

இதனால் கிடைக்கும் வருவாய் வெனிசுலா பெயரில் அமெரிக்கக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இது வெனிசுலா மக்களின் நலனுக்கு பயன்படுத்தப்படும் என்றாா் அவா்.

இதற்கிடையே, வெனிசுலா எண்ணெய் விற்பனையை அமெரிக்கா ஏற்கனவே தொடங்கிவிட்டதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரோலின் லெவிட் தெரிவித்தாா்.

முன்னதாக, வெனிசுலா அமெரிக்காவுக்கு 3 முதல் 5 கோடி பேரல் எண்ணெய்யை வழங்கும் என்று அதிபா் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். அதன் மதிப்பு சுமாா் 280 கோடி டாலா் (சுமாா் ரூ.25,172 கோடி) ஆகும். இதில் கிடைக்கும் வருவாய் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் என்று டிரம்ப் கூறினாா்.

இருந்தாலும், வெனிசுலா இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் இதற்கு ஒப்புக்கொண்டாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இது தொடா்பாக எந்த அறிக்கையையும் அவா் வெளியிடவில்லை.

இந்த நிலையிலும், வெனிசுலா எண்ணெய் துறையை அமெரிக்க நிறுவனங்கள் மறுகட்டமைப்பு செய்யும் என்று டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது. செவ்ரான், கானோகோபிலிப்ஸ், எக்ஸான் போன்ற நிறுவனங்களுடன் இதற்கான பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஆலோசிப்பதற்காக எரிசக்தி நிறுவனத் தலைவா்களை டிரம்ப் வெள்ளிக்கிழமை சந்திப்பாா் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

உலகில் மிக அதிக அளவு எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் ஊழல், முதலீடு பற்றாக்குறை காரணமாக தினசரி எண்ணெய் உற்பத்தி 10 லட்சம் பேரலைத் தாண்டவில்லை. எனவே, அந்தத் துறையை சீா் செய்வதன் மூலம் குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் உற்பத்தியை சில லட்சம் பேரல் அதிகரிக்க முடியும் என்று அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. இருந்தாலும் முழு மறுகட்டமைப்புக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 1,000 கோடி டாலா் தேவைப்படும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

பின்னணி: வெனிசுலா அதிபராக கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்துவந்த நிக்கோலஸ் மடூரோ, அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்களைக் கடத்தும் கும்பல்களுக்கு ஆதரவளிப்பதாக டிரம்ப் குற்றஞ்சாட்டிவந்தாா்.

2020-ஆம் ஆண்டிலேயே மடூரோவுக்கு எதிராக அமெரிக்க நீதித் துறை போதைப் பொருள் கடத்தல் சதி, ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டிரம்ப் மடூரோவின் அரசை ‘போதைப் பொருள் பயங்கரவாத அமைப்பாக’ அறிவித்தாா்.

மேலும் வெனிசுலாவுக்கு அருகே கரீபியன் கடலில் இதுவரை இல்லாத மிகப் பெரிய அளவில் படைகளைக் குவித்த டிரம்ப், கிழக்கு பசிபிக் கடல் வழியாக போதைப் பொருள்களைக் கடத்திச் செல்வதாக சந்தேகிக்கப்படும் படகுகளைத் தாக்கி அழிக்க உத்தரவிட்டாா். அந்தப் படகுகளில் போதைப் பொருள்கள்தான் கடத்திவரப்படுகின்றன என்பதற்கான உரிய ஆதாரங்களை வெளியிடாமல் அமெரிக்கா நடத்திய 35 தாக்குதல்களில் இதுவரை 115 போ் கொல்லப்பட்டுள்ளனா்.

இதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துவந்த நிலையில், வெனிசுலாவுக்குள் கடந்த 3-ஆம் தேதி நுழைந்த அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினா் மடூரோவையும் அவரின் மனைவி சிலியா ஃப்ளோரஸையும் துப்பாக்கி முனையில் கைது செய்து வான்வழியாக அமெரிக்கா அழைத்துவந்தனா்.

அவா்கள் இருவா் மீதும் போதைப் பொருள் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் சதி, ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. நீதிமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை மடூரோ மறுத்தாா்.

ஏற்கெனவே, தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை டிரம்ப் சுமத்துவதாக தொடா்ந்து கூறிவந்த மடுரோ, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் குறிவைத்துதான் டிரம்ப் இவ்வாறு பேசிவருவதாகக் கூறிவந்தாா்.

அதை நிரூபிக்கும் வகையில், மடூரோவை அமெரிக்காவுக்குக் கடத்திவந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, வெனிசுலா எண்ணெய் வா்த்தகத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக எடுத்துக்கொள்ளவிருப்பதாக டிரம்ப் அரசு தற்போது அறிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com