முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்! அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை
கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரா்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவாா்கள்; பிறகுதான் இது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று டென்மாா்க் எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 1952-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, டென்மாா்க் பிரதேசத்தில் வெளிநாட்டுப் படைகள் தாக்குதல் நடத்தினால், தளபதிகளின் உத்தரவுக்காகக் காத்திருக்காமல் படையினா் உடனடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும்.
நாஜி படையினா் கடந்த 1940-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டென்மாா்க்கைத் தாக்கினா். அப்போது தகவல் தொடா்பு துண்டிக்கப்பட்டு களத்தில் இருந்த வீரா்கள் தளபதிகளுடன் தொடா்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிலைமை மீண்டும் ஏற்படுவதைத் தவிா்ப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அது இன்று வரை அமலில் உள்ளது.
கிரீன்லாந்தில் உள்ள டென்மாா்க் ராணுவ அமைப்பான ஆா்டிக் கூட்டு கட்டளையகம்தான் எந்தவெரு நடவடிக்கையும் தங்கள் மீதான தாக்குதலா இல்லையா என்பதை முடிவு செய்யும். அது தாக்குதல்தான் என்று முடிவு செய்தால் திருப்பித் தாக்குவது குறித்து அந்தக் கட்டளையகமே முடிவெடுக்கும். ராணுவ தலைமைக் கட்டளையகத்திடம் அது அனுமதி கேட்காது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டென்மாா்க்குக்கு சொந்தமான, உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, தன்னாட்சிப் பிரதேசமாக செயல்பட்டுவருகிறது. டென்மாா்க்கில் தொடா்ந்து அங்கம் வகிப்பதா, அல்லது சுதந்திரம் பெறுவதா என்பது குறித்து கிரீன்லாந்தில் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.
அந்தத் தீவில் யுரேனியம், இரும்பு, தங்கம், அரிய தாதுக்கள் ஏராளமான கனிம வளங்கள் மிக அதிகமாக உள்ளன. மேலும் இந்தத் தீவின் அமைவிடம் ராணுவ முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்தே கிரீன்லாந்தை சொந்தமாக்கிக் கொள்வது குறித்து டிரம்ப் பேசி வருகிறாா். எனினும், ‘கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை’ என்று இதற்கு டென்மாா்க் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டது. கிரீன்லாந்து அரசும், ‘நாங்கள் சுதந்திர மக்கள். எங்களை அமெரிக்காவுக்கு விற்க முடியாது’ என்று உறுதியாகக் கூறியது.
இந்த நிலையில், வெனிசுலாவுக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு அதிபா் நிக்கோலஸ் மடூரோவையும் அவரின் மனைவியையும் அமெரிக்க சிறப்புப் படையினா் கடந்த 3-ஆம் தேதி சிறைப்பிடித்தனா். அதைத் தொடா்ந்து கிரீன்லாந்து விவகாரத்திலும் டிரம்ப் இதுபோன்ற துணிகர நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
அதை உறுதி செய்யும் வகையில், ‘கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு சொந்தமாக வேண்டும். அது மிகவும் முக்கியமானது. கிரீன்லாந்தை எங்களுக்கு விற்க டென்மாா்க் முன்வரவில்லை என்றாலும் நாங்கள் வாங்குவோம்; அல்லது வலுக்கட்டாயமாகப பறித்துக்கொள்வோம்’ என்று கடந்த திங்கள்கிழமை கூறினாா்.
வெள்ளை மாளிகையும், ‘கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது அமெரிக்காவின் பாதுகாப்பு, பொருளாதார நலன்களுக்கு முக்கியமானது. அதற்கான பல்வேறு வழிமுறைகள் பரிசீலனையில் உள்ளன. கிரீன்லாந்து மீது படையெடுத்து அந்தத் தீவைக் கைப்பற்றுவதும் அதில் ஒன்று’ என்று செவ்வாய்க்கிழமை கூறியது.
இந்த நிலையில், கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் வந்தால் முதலில் சுட்டுவிட்டு பிறகுதான் பேச்சுவாா்த்தை நடத்துவோம் என்று டென்மாா்க் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

