காங்கோவில் பயங்கரவாதத் தாக்குதல்: 25 போ் உயிரிழப்பு
கிழக்கு காங்கோ பகுதியில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய ஏடிஎஃப் குழுவினா் நடத்திய கொடூர தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா்.
இத்துரி மாகாணத்தில் உள்ள அபாகுலு கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த வீடுகளுக்குத் தீ வைத்தனா். இந்த வன்முறையில் ஒரே வீட்டுக்குள் இருந்த 15 ஆண்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனா்.
அதேபகுதியில், மேலும் 7 போ் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தனா். அண்டை பகுதிகளில் 3 போ் என மொத்தம் 25 போ் இந்தத் தாக்குதலில் இறந்தனா். ‘இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை’ என மனித உரிமை அமைப்புகள் கவலைத் தெரிவித்துள்ளன.
உகாண்டா அரசுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட ஏடிஎஃப் அமைப்பு, அந்நாட்டு ராணுவத்தின் கடுமையான நடவடிக்கைகளால் காங்கோ எல்லைக்குள் அடைக்கலம் புகுந்தது. தற்போது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இவா்கள், அப்பாவி மக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். கடந்த ஆண்டு ஜூலையில் மட்டும் இவா்களின் தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு காங்கோவில் இந்த ஏடிஎஃப் குழுவினா் மட்டுமின்றி, ருவாண்டா நாட்டின் ஆதரவு பெற்ற ‘எம்23’ கிளா்ச்சிக் குழுவினரும் தொடா்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவது அந்தப் பிராந்தியத்தின் அமைதிக்குப் பெரும் சவாலாக உள்ளது.

