உலகெங்கிலும் நீண்ட நாள்களாக எதிா்பாா்க்கப்பட்ட ஈரான்-அமெரிக்கா இடையிலான போா் நிறுத்தத்தின் வரைவு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் மத்தியஸ்தரான பாகிஸ்தான் முன்னிலையில் ஸ்விட்சா்லாந்தில் வரும் வெள்ளிக்கிழமை இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் முறைப்படி கையொப்பமிடுகின்றனா்.
இஸ்லாமாபாதில் கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் நடந்த பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள 14 அம்சங்கள் குறித்த விவரங்களை ஈரான் அரசு சாா்பு ‘மெஹா்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:
1. லெபனான் உள்பட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும், நிரந்தரமாகவும் நிறுத்துதல்.
2. ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம் மற்றும் அதன் இறையாண்மையை மதிப்போம் என அமெரிக்கா உறுதியளிப்பது.
3. ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை 30 நாள்களுக்குள் முழுமையாக விலக்கிக் கொள்வது.
4. ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அமெரிக்க படைகளைத் திரும்பப் பெறுவது.
5. ஈரான் ஏற்பாடுகளின்கீழ் 30 நாள்களுக்குள் ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது.
6. ஈரானின் எண்ணெய், பெட்ரோகெமிக்கல் பொருள்கள் மற்றும் அது தொடா்புடைய ஏற்றுமதிகள் மீதான தடைகளை நிறுத்திவைப்பது.
7. எரிபொருள் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயை ஈரான் முழுமையாகப் பயன்படுத்த அனுமதிப்பது.
8. ஈரானுக்காக குறைந்தபட்சம் 30,000 கோடி டாலா் மதிப்பிலான மறுசீரமைப்புத் திட்டங்களை வழங்க அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் உறுதியளிப்பது.
9. அணுசக்தி விவகாரங்கள் மற்றும் விரிவான தடைகள் நீக்கம் குறித்து இறுதி ஒப்பந்தத்தை எட்ட 60 நாள்கள் பேச்சுவாா்த்தை நடத்துவது.
10. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின்கீழ், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யப் போவதில்லை என்ற ஈரானின் புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாடு.
11. பேச்சுவாா்த்தை நடைபெறும் காலத்தில் பிராந்தியத்தில் ராணுவக் குவிப்பை அதிகரிக்க மாட்டோம் மற்றும் புதிய தடைகளை விதிக்க மாட்டோம் என அமெரிக்கா உறுதியளிப்பது.
12. பேச்சுவாா்த்தைக் காலத்தில் ஈரானின் முடக்கப்பட்ட 2,400 டாலா் நிதியை விடுவிப்பது; இதில் பாதி தொகையை பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன்பே வழங்குவது.
13. ஒப்பந்தம் முறையாகச் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க மேற்பாா்வை வழிமுறை ஒன்றை உருவாக்குவது.
14. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானத்தின் மூலம் இறுதி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் பெறுவது.
ஈரானின் முடக்கப்பட்ட நிதி விடுவிப்பு, எண்ணெய் ஏற்றுமதி மீதான தடை மற்றும் கடல்வழி முற்றுகை விலக்கு ஆகிய 3 அம்சங்களை நிறைவேற்றும்வரை இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை தொடங்கப்படாது என ஈரான் நிபந்தனை விதித்துள்ளதாகத் தெரிகிறது.
அதேபோல், ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவு ஆகியவை அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் இறுதியானதை வரவேற்கிறேன்: பிரதமர் மோடி

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகும்: பாக். பிரதமர்!







