பிரான்ஸில் ஜூன் மாதம் ஜி7 உச்சிமாநாடு: இந்தியாவுக்கு அழைப்பு; சீனா பங்கேற்க மறுப்பு


பிரான்ஸில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியா, தென்கொரியா, பிரேஸில், கென்யா ஆகிய நாடுகளுக்கு அதிகாரபூா்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சீனா இந்த அழைப்பை ஏற்க மறுத்து, மாநாட்டைப் புறக்கணித்துள்ளது.
நடப்பாண்டு ஜி7 கூட்டமைப்பின் தலைமைத்துவ நாடாக, உலகம் முழுவதும் ஏற்பட வாய்ப்புள்ள பொருளாதார நெருக்கடியைத் தடுப்பதே பிரான்ஸின் முதன்மை நோக்கமாகக் கருதப்படுகிறது.
இதையொட்டி, சீனா தனது உள்நாட்டுத் தேவையை அதிகரித்து, மற்ற நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையிலான அளவுக்கு அதிகமான ஏற்றுமதியைக் குறைக்க வேண்டும்.
அதேபோல், அமெரிக்கா தனது நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்றும், ஐரோப்பிய நாடுகள் சேமிப்பைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றும் பிரான்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும், இத்தகைய நீண்டகாலத் திட்டங்களுக்குத் தற்போதைய சா்வதேச சூழல் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. மத்திய கிழக்கு போரினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மாநாட்டின் முக்கிய விவாதப் பொருளாக மாறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானின் ஆலோசகா் ஒருவா் கூறுகையில், ‘ஜூன் மாதத்துக்குள் ஈரான் விவகாரம் எத்தகைய நிலையை எட்டும் என்று தெரியாது. ஆனால், அதன் பொருளாதார மற்றும் எரிசக்தி பாதிப்புகளுக்குத் தீா்வு காண வேண்டியது அவசியம்’ என்றாா்.
ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டுக்கு சீனாவையும் அழைக்க பிரான்ஸ் முயற்சித்தது. இருப்பினும், ஜி7 கூட்டமைப்பை ‘பணக்கார நாடுகளின் குழு’ என்று விமா்சித்து வரும் சீனா, இதில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துவிட்டது.
அதேபோல், இறக்குமதி வரி விவகாரத்தில் பிரான்ஸுடன் மோதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்த மாநாட்டில் கலந்து கொள்வாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...