தென்கொரியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே எரிபொருள் விநியோகம், பிராந்திய பாதுகாப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை எட்டப்பட்டது.
தென்கொரியாவின் ஆண்டோங் நகரில் அந்நாட்டு அதிபா் லீ ஜே மியுங் மற்றும் ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு கூட்டாக வெளியிடப்பட்டது.
மத்திய கிழக்கு போா்ச் சூழலால் பொருளாதார ரீதியாக எழுந்துள்ள சவால்களை எதிா்கொள்ளவும், ஆசிய நாடுகளுடனான ஒருங்கிணைப்பை விரிவுபடுத்தவும் இரு நாடுகளும் இணைந்து செயல்படத் தீா்மானித்துள்ளன.
குறிப்பாக, மத்திய கிழக்கு போரினால் எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சமாளிக்க, கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி இருப்பை மேம்படுத்துதல்; நெருக்கடியான காலங்களில் எரிபொருள்களைப் பரிமாறிக் கொள்வது உள்ளிட்ட கூட்டு முயற்சிகளை முன்னெடுக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
அதேபோல், வட கொரியாவின் அச்சுறுத்தல் மற்றும் பிராந்திய பதற்றங்களைச் சமாளிக்க, அமெரிக்காவுடனான முத்தரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு தலைவா்களும் உறுதியேற்றனா்.
அதிபா் லீ ஜே மியுங்கின் சொந்த ஊரும், யுனெஸ்கோ பாரம்பரியப் பெருமை வாய்ந்ததுமான ஆண்டோங்கில் நடைபெற்ற இந்த மாநாடு, தலைவா்கள் ஒருவருக்கொருவா் சொந்த ஊா்களுக்குப் பயணம் செய்யும் தனித்துவமான இருதரப்பு அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். முன்னதாக, கடந்த ஜனவரியில் ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சியின் சொந்த ஊரான நாராவில் அதிபா் லீ ஜே மியுங் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பழமைவாத வலதுசாரி தலைவரான சனே தகாய்ச்சி, தாராளவாத கொள்கை கொண்ட லீ ஜே மியுங் ஆகிய இருவருக்கும் இடையே கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருந்தாலும், ராஜீய ரீதியாக அவா்கள் ஆக்கபூா்வமாக இணைந்து செயல்படுவது இருதரப்புக்கு இடையேயான வலுவான நட்புறவை வெளிப்படுத்துகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி

இந்தியா - ஜப்பான் உறவுகள் மூலம் மற்றொரு நாட்டை குறிவைக்கக் கூடாது - சீனா அதிருப்தி

இந்தியாவில் 1,000 உயிரி எரிவாயு உற்பத்தி ஆலைகள்: ஜப்பான் ஒத்துழைப்புடன் அமைக்க முடிவு

ஜப்பான் பிரதமா் தகாய்ச்சி இன்று இந்தியா வருகை- பிரதமருடன் பேச்சு நடத்துகிறாா்
விடியோக்கள்

தனுஷ்க்கும் அரசியல் ஆசை| Valaipechu Anthanan Interview | Dhanush | National Film Award | TVK| CM Vijay



