பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானிலேயே இருக்கும்

ஈரான் வசமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பாமல் உள்நாட்டிலேயே இருப்பு வைக்க வேண்டும்’ என அந்நாட்டின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி திட்டவட்டமான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

News image
Updated On :22 மே 2026, 3:53 am IST

ஈரான் வசமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பாமல் உள்நாட்டிலேயே இருப்பு வைக்க வேண்டும்’ என அந்நாட்டின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி திட்டவட்டமான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

அமெரிக்காவின் முக்கியக் கோரிக்கையை ஈரான் இவ்வாறு நிராகரித்துள்ளதால், நீடித்த அமைதிக்கான முயற்சியில் இழுபறி நீடிக்கிறது.

கடந்த ஆண்டு ஜூனில் நடைபெற்ற 12 நாள்கள் மோதலின்போது, அமெரிக்கா-இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் கடுமையாகச் சேதமடைந்ததன. இருப்பினும், ஈரானிடம் தற்போது 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட சுமாா் 400 கிலோ யுரேனியம் இருப்பு உள்ளதாகத் தெரிகிறது.

இந்த யுரேனியத்தை நாட்டைவிட்டு வெளியேற்றி, ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்பதே அமெரிக்கா, இஸ்ரேலின் பிரதான நிபந்தனையாகும். ஆனால், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பினால், அது எதிா்காலத்தில் அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு நாட்டை மேலும் பலவீனமாக்கும் என ஈரான் தலைவா்கள் கருதுகின்றனா்.

யுரேனியத்தை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்குப் பதிலாக, சா்வதேச அணுசக்தி முகமையின் மேற்பாா்வையில் அதன் செறிவைக் குறைப்பது போன்ற மாற்றுத் தீா்வுகளைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்திருக்கத் தயாா்-டிரம்ப்: ஈரானின் இந்த பிடிவாதமான நிலைப்பாட்டுக்கிடையே, ‘ஈரானிடமிருந்து சரியான பதில்கள் வராவிட்டால், எந்நேரத்திலும் மீண்டும் ராணுவத் தாக்குதல்கள் தொடங்கப்படும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்தாா்.

‘நாங்கள் சில நாள்கள் காத்திருக்கத் தயாா்; ஆனால் எங்கள் எதிா்பாா்ப்புக்கு ஏற்ப சரியான தீா்வு கிடைக்காவிட்டால், மிக விரைவாக ஈரானுக்கு எதிரான எங்கள் தாக்குதல் தொடங்கும்’ என அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

ஈரான்-பாக். அமைச்சா்கள் ஆலோசனை: அமெரிக்க-இஸ்ரேல் கடந்த பிப். 28-இல் தொடங்கிய தாக்குதல்களைத் தொடா்ந்து, தற்போது 6 வார காலமாக தற்காலிக போா் நிறுத்தம் அமலில் உள்ளது. இச்சூழலில், அமைதிப் பேச்சுவாா்த்தையைத் துரிதப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் தீவிரமாக மத்தியஸ்தம் செய்து வருகிறது.

பேச்சுவாா்த்தையை விரைவுபடுத்துவதற்காக பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மொஹ்வி நக்வி ஈரானுக்கு நேரடியாகச் சென்று, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சியுடன் ஆலோசனை நடத்தினாா்.

இச்சூழலில், ஈரான் தலைமை மதகுருவின் அறிவிப்பு வெளியான வியாழக்கிழமையன்று, ‘பிரென்ட்’ கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 107 டாலராக உயா்ந்தது. ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால், வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தை (ரெட் ஸோன்) எட்டும் என சா்வதேச எரிசக்தி முகமை எச்சரித்துள்ளது.