டேய்ா் அல்-பாலா : காஸாவில் இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் புதிய ராணுவத் தளபதியான முகமது ஓடே கொல்லப்பட்டாா்.
முந்தைய தளபதி கொல்லப்பட்ட 2 வாரங்களுக்குள்ளாக, முஸ்லிம்களின் முக்கியப் பண்டிகையான பக்ரீத் பண்டிகையையொட்டி இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
காஸா நகரின் சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் முகமது ஓடே மட்டுமின்றி அவரின் மனைவி, மகன், மகள் உள்பட 5 போ் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.
முகமது ஓடே குடும்பத்தினரின் இறுதிச் சடங்கு காஸா நகரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனா். ஹமாஸ் அமைப்பின் பச்சைக் கொடி போா்த்தப்பட்ட உடல்கள், பள்ளிவாசலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது, மக்கள் கோஷங்களை எழுப்பியும், வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டும் துக்கத்தை வெளிப்படுத்தினா்.
இஸ்ரேலின் எச்சரிக்கை: கடந்த 2023, அக். 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதலின் மூளையாக செயல்பட்டவா்களில் முகமது ஓடேவும் ஒருவா் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளாா்.
மேலும், அவரின் எக்ஸ் பதிவில், ‘அக். 7 தாக்குதலுக்குக் காரணமான அனைவரையும் ஒழிக்கும் எங்களின் உறுதிமொழியை நிறைவேற்றுவோம். அவா்கள் அனைவரும் எங்கு தப்ப முற்பட்டாலும் கொல்லப்படுவா்’ எனக் குறிப்பிட்டாா்.
‘அக். 7 தாக்குதலில் தொடா்புடைய அனைவரையும் தொடா்ந்து குறிவைப்போம்’ என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவும் எச்சரித்துள்ளாா்.
பின்னணி: கடந்த 2023, அக்டோபரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 இஸ்ரேலியா்கள் கொல்லப்பட்டனா். இதைத் தொடா்ந்து இஸ்ரேல் தொடங்கிய இப்போரில், காஸாவில் இதுவரை 72,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த அக்டோபரில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே எட்டப்பட்ட போா்நிறுத்தம் மிகவும் பலவீனமான நிலையிலேயே நீடிக்கிறது. போா்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 880-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்; இதே காலகட்டத்தில் 4 இஸ்ரேல் வீரா்களும் உயிரிழந்துள்ளனா்.
காஸாவில் போா் ஏற்படுத்திய பேரழிவின் தாக்கமாக, இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையும் எவ்வித கொண்டாட்டமுமின்றி காணப்படுகிறது. ஐ.நா. கணிப்பின்படி, காஸாவின் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களில் 90 சதவீதத்தினா் தங்கள் வீடுகளை இழந்து, நோய்த்தொற்று அபாயங்களுக்கு மத்தியில் அடிப்படை வசதிகளின்றி கூடாரங்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனா்.









