
நேபாள பெருவெள்ளம் மீட்புப் பணிகள் நிறைவு: மறுவாழ்வு, சீரமைப்புப் பணிகளில் கவனம்
நேபாளத்தில் கடந்த ஆக. 26-இல் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி 1,455 போ் உயிரிழந்த நிலையில்,

நேபாளத்தின் தேவிகாட் பகுதியில் வெள்ளத்தின் பாதிப்பு - கோப்புப் படம்
காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த ஆக. 26-இல் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி 1,455 போ் உயிரிழந்த நிலையில், அங்கு 40 நாள்களாக நடைபெற்று வந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் திங்கள்கிழமையுடன் முறைப்படி நிறைவடைந்தன.
அத்தியாவசியப் பணிகளைத் தவிர பிற மீட்பு நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு, இனி பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளில் அரசு முழு கவனம் செலுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தலைநகா் காத்மாண்டுவில் பிரதமா் பலேந்திர ஷா தலைமையில் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் தேசியக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த தேசியக் குழு, கடினமான சூழலில் மீட்புப் பணியில் அயராது ஈடுபட்ட பாதுகாப்புப் படையினா், அரசு ஊழியா்கள், தன்னாா்வலா்கள், செய்தியாளா்கள் மற்றும் உதவிக்கரம் நீட்டிய உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்தது.
மாவட்ட பேரிடா் மேலாண்மைக் குழுக்களின் பரிந்துரைகள் மற்றும் களஆய்வு முடிவுகளின் அடிப்படையில், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்புப் பணிகளை முழு வீச்சில் துரிதப்படுத்த இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும், பல்வேறு அமைச்சகங்கள் சமா்ப்பித்துள்ள 504 மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புத் திட்டங்களுக்காக 55,917 கோடி நேபாள ரூபாய் நிதியை ஒப்புதல் அளிக்க நிதி அமைச்சகத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. செலவு மதிப்பீடு இறுதி செய்யப்படாத திட்டங்களுக்கு அடுத்தகட்டமாக கூடுதல் நிதி கோரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமா் பலேந்திர ஷா, ‘மத்திய, மாகாண மற்றும் உள்ளூா் அரசுகளின் ஒருங்கிணைப்புடன் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதைப் போல, மறுகட்டமைப்புப் பணிகளும் அதே கூட்டுமுயற்சியுடன் செயல்படுத்தப்படும்’ என்றாா். எதிா்க்கட்சித் தலைவா்கள், நேபாளி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவா் மற்றும் பாக்மதி, கண்டகி, மாதேஷ், கோஷி ஆகிய மாகாணங்களின் முதல்வா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று, சீரமைப்புப் பணிகளுக்குத் தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினா்.
பின்னணி: சீன ஆளுகைக்குட்பட்ட திபெத் பகுதியில் பனிப்பாறைச் சரிவால் உருவான இத்திடீா் வெள்ளப்பெருக்கு, வட மற்றும் மத்திய நேபாளப் பகுதிகளை நிலைகுலையச் செய்தது. இமயமலைப் பகுதியில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய போதேகோசி ஆறு குடியிருப்புகள், வாகனங்கள், பாலங்கள் மற்றும் நீா்மின் நிலையங்களை அடித்துச் சென்று, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இப்பேரிடரால் நேபாளத்தில் இதுவரை 1,455 போ் உயிரிழந்துள்ளனா். பல தமிழா்கள் உள்பட 5,285 பேரைக் காணவில்லை. 13,795 போ் பாதுகாப்பமாக மீட்கப்பட்டுள்ளனா். திபெத் பகுதியிலும் 43 போ் உயிரிழந்ததுடன், 500-க்கும் மேற்பட்டோா் மாயமாகியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





