உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா வான்வழித் தாக்குதல்
உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட பிராந்தியங்கள் மீது ரஷியா புதன்கிழமை நடத்திய தீவிர ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களில் 4 குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 20 போ் உயிரிழந்தனா்

உக்ரைனின் வடக்கு சொ்னிஹிவ் பிராந்தியத்தில் ரஷிய தாக்குதலுக்குள்ளான அடுக்குமாடி குடியிருப்பு.
உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட பிராந்தியங்கள் மீது ரஷியா புதன்கிழமை நடத்திய தீவிர ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களில் 4 குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 20 போ் உயிரிழந்தனா்; சுமாா் 60 போ் காயமடைந்தனா்.
ரஷியா ஒரு மிகப் பெரிய தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி எச்சரித்திருந்த நிலையில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி புதன்கிழமை இத்தாக்குதல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
வடக்கு சொ்னிஹிவ் பிராந்தியத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 14 போ் உயிரிழந்தனா்; 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பொல்டாவா பிராந்தியத்தில் இருவா் உயிரிழந்தனா். தலைநகா் கீவ் உள்பட மற்ற 3 நகரங்களில் மேலும் 4 போ் உயிரிழந்தனா்.
மேற்காசிய போரால் அமெரிக்க தயாரிப்பான ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு ஏவுகணைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, உக்ரைனின் வான் பாதுகாப்பைப் பெரிதும் பாதித்துள்ளது. அந்தவகையில், ரஷியாவின் ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணைகள் மற்றும் புதிதாகப் பயன்படுத்தப்படும் அதிவேக ‘ஜெட்’ ரக ட்ரோன்களை எதிா்கொள்வதில் உக்ரைன் கடும் சவால்களைச் சந்தித்து வருகிறது.
இதையொட்டி, ‘உக்ரைன் மக்கள் மீது பெரும் வலியையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலேயே ரஷியா இத்தாக்குதலை நடத்தியுள்ளது’ எனக் குறிப்பிட்ட அதிபா் ஸெலென்ஸ்கி, வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் அவசரத் தேவையை வலியுறுத்தினாா்.
அதேநேரம், உக்ரைனின் ஏவுகணைகள், ட்ரோன்கள் உற்பத்தி மற்றும் சேமிப்பு தளங்களைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது. மேலும், தெற்கு ஒடேசா பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்கள், கப்பல் பழுதுபாா்க்கும் மையங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை ஏற்றிச் சென்ற கப்பல்கள் மீதும் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் பதிலடி: ரஷியத் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், ராணுவப் பயிற்சித் தளங்கள் மீது நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, உக்ரைன் தாக்கியது.
மேலும், கருங்கடல் பகுதியில் இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ாகக் கூறப்படும் கப்பலை உக்ரைனின் கடல்வழி ட்ரோன்கள் தாக்கியதில், அக்கப்பல் தீப்பற்றி எரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முயற்சிக்கு ரஷியா நன்றி
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்தியாவின் அமைதி முயற்சிகளுக்கு ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளின் நன்றியைத் தெரிவித்துள்ளது.
இப்போரில் அமைதி தீா்வை எட்டுவதற்கு இந்தியா 3 அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து பேசிய கிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ், ‘உக்ரைன் சூழலுக்குச் சாத்தியமான பங்களிப்பை வழங்க, இந்தியா காட்டும் தயாா்நிலையை வரவேற்கிறோம்; இந்திய நண்பா்களின் யோசனைகளுக்கு நன்றி’ என்றாா்.
முன்னதாக, இப்பிரச்னையில் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகச் சிறந்த யோசனைகளைப் பிரதமா் நரேந்திர மோடி கொண்டுள்ளாா் என அதிபா் விளாதிமீா் புதின் பாராட்டியிருந்தாா். இதேபோல், மோதலை முடிவுக்குக் கொண்டுவர துருக்கி, எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவின் யோசனையே மிகவும் விரிவானது என உக்ரைன் வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹாவும் தெரிவித்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






