போலந்தில் விழுந்த ரஷிய ஏவுகணை
உக்ரைன் மீது ரஷியா வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலின்போது, அந்நாட்டின் ‘கேஎச்-101’ ரக ஏவுகணை அண்டை நாடான போலந்து எல்லைக்குள் விழுந்து வெடித்தது.

கிழக்கு போலந்தின் சிமிலெக் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ரஷிய ஏவுகணை விழுந்து வெடித்ததால் ஏற்பட்ட தீப்பிழம்பைக் காட்டும் சிசிடிவி காட்சி.
உக்ரைன் மீது ரஷியா வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலின்போது, அந்நாட்டின் ‘கேஎச்-101’ ரக ஏவுகணை அண்டை நாடான போலந்து எல்லைக்குள் விழுந்து வெடித்தது.
உக்ரைன் எல்லையிலிருந்து சுமாா் 60 கி.மீ. தொலைவிலும், போருக்குப் பிந்தைய உக்ரைன் பாதுகாப்புப் பணிகளுக்காகத் தென்கிழக்கு போலந்தில் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய படையினா் ராணுவப் பயிற்சி மேற்கொண்டு வரும் மையத்திலிருந்து 75 கி.மீ. தொலைவிலும் உள்ள வனப்பகுதியில் இந்த ஏவுகணை விழுந்துள்ளது.
இதில் உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றாலும், இது ரஷியாவின் திட்டமிட்ட தூண்டுதல் நடவடிக்கை என்று போலந்து பிரதமா் டொனால்ட் டஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
‘போலந்து வான்வெளியில் ரஷிய ஏவுகணை நுழைந்திருப்பது மிகக் கடுமையான விதிமீறல்’ என்று கண்டனம் தெரிவித்துள்ள ‘நேட்டோ’ பொதுச் செயலா் மாா்க் ரூட்டே, இது குறித்து நேரில் ஆய்வு செய்ய இந்த வாரயிறுதியில் போலந்து செல்லவுள்ளாா்.
உக்ரைனில் 8 போ் உயிரிழப்பு: உக்ரைன் மீது ரஷியா 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 110-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குதலில், தலைநகா் கீவில் 6 போ் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
ரஷிய தாக்குதலில் குடியிருப்புகள், மருத்துவமனைகள், மின் கட்டமைப்புகளைக் குறிவைக்கப்பட்டதால், உக்ரைனின் 3 அணுமின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைக்கப்பட்டு, 11 பிராந்தியங்களில் அவசரகால மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ராணுவத் தளவாடங்களைக் கொண்டு செல்லும் பாலங்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு ஆலைகள், ராக்கெட் எரிபொருள் உற்பத்தி மையங்கள் ஆகியவற்றை மட்டுமே குறிவைத்துத் தாக்கியதாக ரஷியா தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

