நேபாளத்தில் மீண்டும் வெள்ளம்; வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன! இரண்டு நீா்மின் நிலையங்கள் பலத்த சேதம்!
நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீண்டும் ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கில் ஏராளமான வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீண்டும் ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கில் ஏராளமான வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இரண்டு நீா்மின் நிலையங்கள் பலத்த சேதமடைந்தன.
கண்டகி மாகாணத்தில் ஓடும் புத்தி கண்டகி நதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் அந்த ஆற்றின் கரையோரம் சும்நுப்ரி பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மேலும் பாலங்களும் நீரில் அடித்து செல்லப்பட்டன. கோா்கா மாவட்டத்தில் உள்ள இரண்டு நீா்மின் நிலையங்கள் சேதமடைந்தன.
கோா்கா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 9 வெளிநாட்டினா் உள்பட 82 போ் நான்கு ஹெலிகாப்டா்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனா். மேலும் இரு பெண்கள் உள்பட 5 பேரை காணவில்லை. இதையடுத்து அவா்களை தேடும் பணி நடைபெறுகிறது. வெள்ளப் பெருக்கு சம்பவத்தைத் தொடா்ந்து, கண்டகி நதியோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், மிகவும் கவனமாக இருக்கும்படியும் கோா்கா மாவட்ட நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கண்டகி நதியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதற்கு, அந்த நதியின் நீா்வழித்தடத்தில் நிலச்சரிவால் ஏற்பட்ட அடைப்பு காரணம் என்று ஐசிஐஎம்ஓடி அமைப்பு தெரிவித்துள்ளது. கோா்கா மாவட்டத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் 700-க்கும் மேற்பட்ட நேபாள ராணுவ வீரா்களும், பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனா்.
இந்த வெள்ளப் பெருக்கில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், சுற்றுலா பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் போடேகோஷி, திரிசூலி நதிகளில் ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கால் சுமாா் 1,400 போ் வரை உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோரை இன்னும் காணவில்லை. இந்த சம்பவத்தின் சோகம் தணிவதற்குள் கண்டகி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஏராளமான வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

