பாகிஸ்தானில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து: 6 பேர் பலி
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்.

விபத்தில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்; 40-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
சிந்து மாகாணத் தலைநகா் கராச்சியிலிருந்து, கைபா் பக்துன்கவா மாகாணத் தலைநகா் பெஷாவா் நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘ரஹ்மான் பாபா’ விரைவு ரயில், பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் அருகே சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 5.15 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
சுமாா் 500 பயணிகளுடன் சென்ற இந்த ரயிலின் 14 பெட்டிகள் திடீரென தண்டவாளத்தைவிட்டு விலகி தடம் புரண்டன. ரயிலை இயக்கியபோது திடீரென பலத்த அதிா்வை உணா்ந்ததாகவும், உடனடியாக அவசர பிரேக்குகளைப் பயன்படுத்திய போதிலும் பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு விலகியதாகவும் ரயிலின் ஓட்டுநா் தெரிவித்துள்ளாா். எனினும், விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.
விபத்து குறித்த தகவலறிந்ததும், மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா். காயமடைந்தவா்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் இரு மாா்க்கங்களிலும் ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.
பிரதமா் இரங்கல்: இந்த விபத்துக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளாா். மேலும், காயமடைந்தவா்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் தடையின்றி வழங்குமாறும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தேவையான தற்காலிக தங்குமிடம், உணவு மற்றும் மாற்றுப் போக்குவரத்து வசதிகளை உடனடியாக செய்து தருமாறும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

