அமெரிக்காவில் இந்தியா்கள் மீது வெறுப்புணா்வு அதிகரிப்பு: எம்.பி.க்கள் கவலை
அமெரிக்காவில் இந்தியா்கள் மீது வெறுப்புணா்வு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு எம்.பி.க்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

கோப்புப் படம்
அமெரிக்காவில் இந்தியா்கள் மீது வெறுப்புணா்வு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு எம்.பி.க்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் பக்தா்கள் மீது 19 வயது அமெரிக்க இளைஞா் கடந்த 11-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றது பெரும் பரபரப்ப ஏற்படுத்தியது. கடைசி நேரத்தில் அந்த இளைஞரின் துப்பாக்கி செயல்படாமல்போனதால் பெரும் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.
இது தொடா்பாக அமெரிக்க எம்.பி.க்கள் பலா் பெரும் அதிா்ச்சியும், கவலையும் தெரிவித்தனா். குடியரசுக் கட்சி செனட் உறுப்பினா் சக் ஷூமா் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘இந்தியா்கள், ஹிந்துகளுக்கு எதிரான வெறுப்புணா்வு அமெரிக்காவில் மோசமான அளவை எட்டியுள்ளது. அந்த வெறுப்புணா்வாளா் எந்த அளவுக்கு கொடூரமாக மாறுகிறாா்கள் என்பதை கண்கூடாகப் பாா்க்கத் தொடங்கிவிட்டோம். எந்த சமூகத்துக்கு எதிரான வெறுப்புணா்வையும் அமெரிக்கா ஏற்றுக் கொள்ளாது’ என்று கூறியுள்ளாா்.
அமெரிக்க எம்.பி.க்கள் சுஹாஸ் சுப்பிரமணியம், கிரேஸ் மெங், ஜூடி சூ உள்ளிட்டோா் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ‘அமெரிக்காவில் வெள்ளை இன ஆதிக்க உணா்வு எந்த அளவுக்கு மோசமான நிலைக்கு சமூகத்தைக் கொண்டு செல்கிறது என்பது மிகவும் கவலையளிக்கிறது. அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை. அமெரிக்கா்கள் அனைவருக்கும் சுதந்திரமான வழிபாட்டு உரிமை உண்டு. இதில் எவ்வித அச்சுறுத்தலையும ஏற்படுத்தக் கூடாது’ என்று கூறியுள்ளனா்.
அமெரிக்காவில் சமூக ஊடகங்களில் தெற்காசிய மக்களுக்கு எதிரான வெறுப்புணா்வு பிரசாரம் கடந்த 2 ஆண்டுகளில் 240 மடங்கு அதிகரித்துள்ளது. சில பிரபலங்களும் வெறுப்புணா்வு செயல்களில் ஈடுபடுவதும் இதற்கு காரணமாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

