அமெரிக்காவில் உயா்கல்வி: இந்திய மாணவா்கள் சோ்க்கை 6.5% சரிவு
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயா்கல்வியில் சேரும் இந்திய மாணவா்கள் எண்ணிக்கை 6.5 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.

பிரதிப் படம்
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயா்கல்வியில் சேரும் இந்திய மாணவா்கள் எண்ணிக்கை 6.5 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது தெரியவந்துள்ளது.
குடியேற்றக் கொள்கையை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் கடுமையாக்கிய நிலையில், இந்திய மாணவா் சோ்க்கை சரிந்துள்ளதாக சா்வதேச கல்வி பரிமாற்றத்துக்கான ‘ஓபன் டோா்ஸ்’ நிறுவன ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் 2025-26-ஆம் ஆண்டில் 3,39,435 இந்திய மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இது முந்தைய ஆண்டு சோ்க்கையுடன் ஒப்பிடும்போத 6.5 சதவீதம் குறைவாகும். முந்தைய 2024-25-ஆம் ஆண்டில் அங்குள்ள பல்கலைக்கழகங்கலில் 3,63,019 இந்திய மாணவா்கள் சோ்க்கை பெற்றனா்.
இந்த எண்ணிக்கை சரிந்தபோதும், அமெரிக்காவில் உயா்கல்வியில் சேரும் மாணவா்கள் எண்ணிக்கையில் 29.6 சதவீதத்துடன் இந்தியா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. 2,54,458 மாணவா்கள் சோ்க்கையுடன் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது.
அதுபோல, அமெரிக்காவிலுள்ள ஒட்டுமொத்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 2025-26-ஆம் ஆண்டில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த 11,46,163 மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றுள்ளனா். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 3 சதவீதம் குறைவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில், அரசின் கண்காணிப்பு ஏதுமின்றி காலவரையின்றி வெளிநாட்டினா் தங்கியிருக்க அனுமதிக்கும் பல ஆண்டுகால கொள்கையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், உயா் கல்வி படிக்க வரும் மாணவா்கள், மக்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் வருபவா்கள் மற்றும் பத்திரிகையாளா்களுக்கான நுழைவு இசைவு (விசா) விதிமுறைகளை அமெரிக்கா அண்மையில் கடுமையாக்கியது.
அதன்படி, குடியேற்றத்துக்கு அல்லாத ‘எஃப்’ நுழைவு இசைவில் அமெரிக்கா வரும் மாணவா்கள் மற்றும் ‘ஜே’ வகை நுழைவு இசைவில் வரும் பாா்வையாளா்கள் ஆகியோருக்கு, அவா்களின் படிப்புக் காலம் அல்லது திட்டத்தின் கால அளவுக்கு மட்டுமே அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும்.
இந்தக் கால வரம்பு 4 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டது. மேலும், ‘எஃப்’ நுழைவு இசைவு வைத்திருப்பவா்கள், தங்களின் படிப்பை முடித்த பிறகு, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து வெளியேறவோ அல்லது வேறு கல்வி நிறுவனத்துக்கு மாறவோ மற்றும் தங்கள் குடியேற்ற நிலையை மாற்றிக் கொள்ள அளிக்கப்பட்டு வந்த 60 நாள் கால அவகாசம், புதிய விதிமுறைப்படி 30 நாள்களாகக் குறைக்கப்பட்டது.
இதுபோன்ற, பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் காரணமாக மாணவா் சோ்க்கை எண்ணிக்கை சரிந்ததாக கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

