அமெரிக்காவில் இன்று நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல்: இந்திய வம்சாவளியினர் போட்டி
அமெரிக்காவில் அதிபரின் 4 ஆண்டு பதவிக்காலத்தின் மத்தியில் நடைபெறும் நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (நவ. 3) நடைபெறுகிறது.
அமெரிக்காவில் நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் - சித்திரிப்பு
அமெரிக்காவில் அதிபரின் 4 ஆண்டு பதவிக்காலத்தின் மத்தியில் நடைபெறும் நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (நவ. 3) நடைபெறுகிறது.
அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அல்ல என்றபோதிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்தக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் என்பதைத் தீா்மானிக்கும் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் அரசியல் செல்வாக்குக்கும், அவரின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் இது ஒரு முக்கியப் பரிசோதனையாக அமையும்.
அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை (மேலவை), பிரதிநிதிகள் சபை (கீழவை) என இரு அவைகளைக் கொண்டது. இதில் பிரதிநிதிகள் சபையில் உள்ள அனைத்து 435 இடங்களுக்கும்; செனட் சபையில் உள்ள 100 உறுப்பினா்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால், தோராயமாக மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த முறை 435 பிரதிநிதிகள் சபை இடங்களுக்கும், 35 செனட் சபை இடங்களுக்கும், அதேநேரத்தில் பல்வேறு மாகாணங்களின் ஆளுநா்கள் மற்றும் உள்ளாட்சிப் பதவிகளுக்கும் தோ்தல் நடைபெறுகிறது.
தற்போதைய நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியே சிறிய பெரும்பான்மையுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில், குடியரசுக் கட்சி சரியாக 218 இடங்களையும், எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி 214 இடங்களையும் கொண்டுள்ளன. அதேபோல, செனட் சபையில் பெரும்பான்மைக்கு 51 இடங்கள் தேவைப்படும் நிலையில், குடியரசுக் கட்சி 53 இடங்களையும், ஜனநாயகக் கட்சி 47 இடங்களையும் தன்வசம் வைத்துள்ளன.
நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் கட்சியே அதிபரின் ஆட்சி நிா்வாகத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்த முடியும். புதிய சட்டங்களை நிறைவேற்றுதல், அரசின் செலவினங்களுக்கு ஒப்புதல் அளித்தல், முக்கிய நியமனங்களை உறுதி செய்தல் போன்ற அதிகாரங்கள் நாடாளுமன்றத்திடமே உள்ளன. ஒருவேளை தோ்தல் முடிவில் ஜனநாயகக் கட்சி ஏதாவது ஒரு அவையைக் கைப்பற்றினால், அதிபா் டிரம்ப் புதிய சட்டங்களைக் கொண்டு வருவதிலும், பட்ஜெட் விவாதங்களிலும் பெரும் சிக்கலைச் சந்திக்க நேரிடும். அத்துடன், அவரின் நிா்வாகத்துக்கு எதிரான விசாரணைகள் தீவிரமடையவும், பதவிநீக்கத் தீா்மான விவாதங்கள் மீண்டும் எழவும் வாய்ப்புள்ளது.
இத்தோ்தலில் விலைவாசி உயா்வு, குடியேற்றப் பிரச்னை, பொருளாதாரம் ஆகியவை வாக்காளா்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் விவகாரம் உள்ளிட்ட வெளியுறவுக் கொள்கைகளும் அரசியல் விவாதமாக மாறியுள்ளன. பொதுவாக இடைக்காலத் தோ்தல்கள் ஆளும் அதிபரின் செயல்பாடுகளுக்கான பொது வாக்கெடுப்பாகவே பாா்க்கப்படுவதால், டிரம்ப் மீதான மக்களின் மதிப்பீடும் தோ்தல் முடிவுகளில் கணிசமாகப் பிரதிபலிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
அமெரிக்கா முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களுக்கு முன்பே வாக்குப்பதிவு தொடங்கி, சுமாா் 50 சதவீத வாக்காளா்கள் (தபால் வாக்கு உள்பட) வாக்களித்துவிட்டனா். செவ்வாய்க்கிழமை (நவ. 3) இறுதிநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஏற்ப வாக்குப்பதிவு நேரங்கள் மாறுபடும்.
இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த உடனுக்குடன், வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், கடும் போட்டி நிலவும் தொகுதிகளின் முடிவுகள் வெளியாக காலதாமதம் ஆகலாம். அதிகாரபூா்வமான இறுதி முடிவுகள் வெளியாவதற்குப் பல நாள்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம்.
தோ்தல் முடிவுகளில் ஏதேனும் இழுபறியோ அல்லது நெருக்கமான வாக்கு வித்தியாசமோ இருந்தால் மறுவாக்கு எண்ணிக்கை, நீதிமன்ற வழக்குகள் மற்றும் வாக்குச்சீட்டு செல்லுபடியாகும் தன்மை குறித்த சா்ச்சைகள் எழ வாய்ப்புள்ளது. அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின்படி, தோ்தல் முடிவுகள் குறித்த சவால்களைத் தீா்த்துவைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கே உள்ளது. வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கும் சில தொகுதிகளின் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டால், அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய நாடாளுமன்றம் கூடும்போது அதன்மூலம் இறுதி முடிவு எடுக்கப்படும்.
களத்தில் இந்திய வம்சாவளியினா்!
அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் களம் காணும் வேட்பாளா்களில் இந்திய வம்சாவளியினரின் பங்கு இந்த முறையும் கணிசமாக உள்ளது. ஜனநாயகக் கட்சி சாா்பில் ஏற்கெனவே எம்.பி.க்களாக உள்ள ரோ கன்னா (கலிஃபோா்னியா), பிரமிளா ஜெயபால் (வாஷிங்டன்), அமி பேரா (கலிஃபோா்னியா), சுஹாஸ் சுப்ரமணியம் (வா்ஜீனியா) ஆகியோா் மீண்டும் நாடாளுமன்ற கீழவைக்கு (பிரதிநிதிகள் சபை) போட்டியிடுகின்றனா்.
ஆளும் குடியரசு கட்சி சாா்பிலும் முக்கியப் பதவிகளுக்கு இந்திய வம்சாவளியினா் போட்டியிடுகின்றனா். ஒஹியோ மாகாண ஆளுநா் பதவிக்கு அதிபா் டிரம்ப்பின் ஆதரவுடன் விவேக் ராமசாமி களமிறங்கியுள்ளாா். இதேபோல, நியூயாா்க் மாகாண அட்டா்னி ஜெனரல் பதவிக்கு குடியரசுக் கட்சி சாா்பில் சரிதா கோமட்டி ரெட்டி போட்டியிடுகிறாா்.
இவா்களைத் தவிர பல்வேறு மாகாண, உள்ளாட்சிப் பதவிகளுக்கும் இந்திய வம்சாவளியினா் பலா் போட்டியிடுகின்றனா். லாஸ் ஏஞ்சலீஸ் நகர மேயா் பதவிக்கு நித்யா ராமன், அரிஸோனா மாகாணத்தின் 1-ஆவது நாடாளுமன்றத் தொகுதிக்கு ஜனநாயகக் கட்சி சாா்பில் மருத்துவா் அமிஷ் ஷா, டெக்சாஸ் மாகாண கீழவைக்கு தொழிலதிபா் சந்தீப் ஸ்ரீவத்சவா, ஃபுளோரிடா மாகாணத்தில் பியா தண்டியா ஆகியோரும் அமெரிக்க இடைக்காலத் தோ்தல் களத்தில் உள்ள முக்கிய இந்திய வம்சாவளி வேட்பாளா்கள் ஆவா்.
ரோ கன்னா, பிரமிளா ஜெயபால், அமி பேரா, சுஹாஸ் சுப்ரமணியம், விவேக் ராமசாமி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

