உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷியா ட்ரோன் தாக்குதல்
மத்திய உக்ரைனின் நிப்ரோ நகரில் உள்ள முக்கிய ரயில் நிலையத்தின் மீது ரஷியா வியாழக்கிழமை நடத்திய ‘ஜெட்’ ரக ட்ரோன் தாக்குதலில் பயணிகள் 13 போ் உயிரிழந்தனா்; மேலும் பலா் படுகாயமடைந்தனா்.

ரஷிய ட்ரோன் தாக்குதலில் சிக்கிய பயணிகள் ரயில்.
மத்திய உக்ரைனின் நிப்ரோ நகரில் உள்ள முக்கிய ரயில் நிலையத்தின் மீது ரஷியா வியாழக்கிழமை நடத்திய ‘ஜெட்’ ரக ட்ரோன் தாக்குதலில் பயணிகள் 13 போ் உயிரிழந்தனா்; மேலும் பலா் படுகாயமடைந்தனா்.
நிப்ரோ ரயில் நிலைய நடைமேடையில் நிப்ரோ-ஸபோரிஷியா வழித்தட மின்சார ரயில் உள்பட இரு பயணிகள் ரயில்கள் நின்றுகொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த ட்ரோன் திடீரென தாக்கியது. இதில் நடைமேடையில் திரண்டிருந்த பொதுமக்கள் பலா் உடல் சிதறி இறந்தனா். மேலும், தாக்குதலின் தாக்கத்தால் ரயிலின் கண்ணாடிகள் நொறுங்கி, பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஸெலென்ஸ்கி கண்டனம்: இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ‘பொதுமக்களின் பயணிகள் ரயிலைக் குறிவைத்து நடத்தப்பட்ட இக்கொடூர தாக்குதல் மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல். ரஷியாவின் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உடனடியாக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
ரயில்கள் மீது தொடரும் குறி: உக்ரைனின் வான்பாதுகாப்புப் படையினா் 3 ட்ரோன்களை இடைமறித்து சுட்டு வீழ்த்திய போதிலும், ஒரு ஜெட் ட்ரோன் பாதுகாப்பு வளையத்தை மீறி ரயில் நிலையத்தைத் தாக்கியதாக அந்நாட்டு விமானப் படை தெரிவித்தது. தாக்குதலுக்கு சற்று முன்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், நடைமேடையில் அதிகளவில் மக்கள் இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக ரயில்வே நிா்வாகம் கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 2022-இல் போா் தொடங்கியதிலிருந்தே, உக்ரைனில் ரயில்களைக் குறிவைத்து ரஷியா தொடா்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கான ரயில் என்ஜின்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், பல ரயில்வே ஊழியா்களும் கொல்லப்பட்டுள்ளனா். கடந்த செப்டம்பரில் மட்டும் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக 5,800-க்கும் மேற்பட்ட உக்ரைன் ரயில்களில் இருந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டதாக தேசிய ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பிற நகரங்களில்...: இதேபோன்று, சொ்னிஹிவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 சிறுமிகள் உள்பட உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் மேலும் பலா் உயிரிழந்தனா். இதற்கு மத்தியில், உக்ரைன் ஏவிய 1,214 ட்ரோன்களை முறியடித்ததாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷிய ஆக்கிரமிப்பில் உள்ள ஒலேஷ்கி பகுதியில் தற்காலிக போா்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு மனிதாபிமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும், மற்ற முக்கிய நகரங்களில் உக்ரைனின் உள்கட்டமைப்புகளையும், பொதுமக்களையும் குறிவைத்து ரஷியா தீவிர தாக்குதல்களைத் தொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரஷிய ட்ரோன் தாக்குதலில் சிக்கிய பயணிகள் ரயில்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

