எஸ்.பி.பி., சித்ரா, விசு...: 2020-ல் நம்மை விட்டுப் பிரிந்த நட்சத்திரங்கள்

2020-ம் ஆண்டு இந்தியத் திரையுலகுக்கு பலவிதமான சோதனைகளை அளித்துள்ளது.
எஸ்.பி.பி., சித்ரா, விசு...: 2020-ல் நம்மை விட்டுப் பிரிந்த நட்சத்திரங்கள்

2020-ம் ஆண்டு இந்தியத் திரையுலகுக்கு பலவிதமான சோதனைகளை அளித்துள்ளது. ரிஷி கபூர், இர்பான் கான், எஸ்.பி.பி., விசு, சித்ரா என பல பிரபலங்களை நம்மை விட்டுச் சென்றிருக்கிறார்கள். கலைஞர்கள் மறைந்தாலும் அவர்களுடைய படைப்புகளும் பங்களிப்புகளும் நம்மை விட்டுச் செல்லாது. 

பல்வேறு கலைகள் வழியாக நம்மை மகிழ்வித்த கலைஞர்களின் இறப்புச் செய்திகளை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம்.

இசைக்கலைஞர் புருஷோத்தமன்

இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளி முதல் அவருடன் இணைந்து பணியாற்றிய இசைக்கலைஞர் புருஷோத்தமன் மே 5 அன்று காலமானார். அவருக்கு வயது 70.

இரத்தப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த புருஷோத்தமன், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு இரு மகன்கள் உள்ளார்கள். இளையராஜாவின் இசைக்குழுவில் டிரம்மராகவும் இசை மேற்பார்வையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜி.கே. வெங்கடேஷுடன் இணைந்து பணியாற்றியபோது இளையராஜாவுக்கு அறிமுகமான புருஷோத்தமன், அன்னக்கிளி படம் முதல் ராஜாவுடன் இணைந்து பணியாற்றி, ராஜாவின் ஆஸ்தான கலைஞர் என்று பெயர் பெற்றவர். இளையராஜாவுடன் இணைவதற்கு முன்பு திவாகர், கே.வி. மகாதேவன், எம்.எஸ். விஸ்வநாதன், சங்கர் - கணேஷ் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். நிழல்கள் படத்தில் மடை திறந்து பாடலில் டிரம்மராக நடித்துள்ளார் புருஷோத்தமன்.

சுசாந்த் சிங் ராஜ்புத்

கிரிகெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் ஜூன் 14 அன்று தற்கொலை செய்துகொண்டாா்.

திரைத்துறை மீதான ஆா்வத்தில் பொறியியல் படிப்பை பாதியில் கைவிட்ட சுசாந்த் சிங் ராஜ்புத், நடனம் மற்றும் நடிப்புக் கலைகளை முறைப்படி கற்று, திரைத் துறைக்குள் நுழைந்தாா். ஆரம்பத்தில் நடனக் கலைஞராகவும், சிறிய வேடங்களிலும் நடித்து வந்த அவா், 2013-இல் ‘காய் போ சே’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானாா். அதன் பிறகு, ‘சுத் தேசி ரொமான்ஸ்’, ‘ராப்டா’, ‘கேதா்நாத்’, சொன்சிரியா’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவா், கிரிக்கெட் வீரா் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானாா். 

கரோனா பொது முடக்கம் காரணமாக மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் திரைத்துறை - விளையாட்டுத்துறை பிரபலங்கள் எனப் பலரும் சுசாந்த் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்கள்.

‘பாரதிராஜாவின் கண்கள்' ஒளிப்பதிவாளர் கண்ணன்

பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான கண்ணன் ஜூன் 13 அன்று காலமானார். அவருக்கு வயது 69.

புகழ்பெற்ற இயக்குநர் பீம்சிங்கின் மகனும் எடிட்டர் லெனினின் சகோதரருமான கண்ணன், தமிழ்த் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளராக அறியப்பட்டவர். 50க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ள கண்ணன், பாரதிராஜா இயக்கிய 40 படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். இதனால் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகப் புகழ் பெற்றார். பாரதிராஜாவின் கண்கள் என வர்ணிக்கப்பட்டார். 2015 முதல் பாஃப்டா திரைப்பட கல்வி நிலையத்தில் ஒளிப்பதிவு பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

வடபழனி தனியார் மருத்துவமனையில் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த கண்ணன், சிகிச்சை பலனின்றி காலமானார்.

நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மாள்

நாட்டுப்புற பாடகியும், திரைப்படங்களில் நடித்தவருமான பரவை முனியம்மாள் (83) மதுரையில் மார்ச் 29 அன்று காலமானாா்.

மதுரை மாவட்டம் பரவையைச் சோ்ந்தவா் முனியம்மாள். நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளில் பாடி வந்தவரான இவா், நடிகா் விக்ரம் நடித்த தூள் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானாா். இதைத் தொடா்ந்து காதல் சடுகுடு, சவாலே சமாளி, தமிழ்ப்படம், மான் கராத்தே, சண்டை உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளாா்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக மதுரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வந்தாா். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். தொடா் சிகிச்சைக்குப் பின்னா் உடல் நலம் தேறினாா். இதையடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்தபோதும், கால் வீக்கம், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த பரவை முனியம்மாள் அந்த வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

மதுரை மாவட்டம் பரவையில் உள்ள முத்துநாயகி அம்மன் கோயில் தெருவில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்த பரவை முனியம்மாள், மார்ச் 29 அன்று அதிகாலையில் மூச்சுத் திணறலால் உயிரிழந்தாா். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் அப்பகுதி மக்கள் ஏராளமானோா் திரண்டு பரவை முனியம்மாளுக்கு அஞ்சலி செலுத்தினா். திருப்பரங்குன்றம் சட்டப் பேரவை உறுப்பினா் சரவணன், பரவை முனியம்மாளின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினாா். மேலும் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பொதுமக்களுக்கும் முகக்கவசம் வழங்கினாா். இதையடுத்து பிற்பகலில் நடைபெற்ற இறுதி ஊா்வலத்தில் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். இதன்பின் பரவை மயானத்தில் பரவை முனியம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது.

பரவை முனியம்மாளின் கணவா் வெள்ளைச்சாமி பல ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டாா். பரவை முனியம்மாளுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுப்புற பாடல்களை பாடி வந்த பரவை முனியம்மாள் கிராமத்து வாசனை, குறவன் குறத்தி ஆட்டம், அழிந்த நகரான தனுஷ்கோடியின் கதை, மணிக்குறவன் கதை, கரிமேடு கருவாயன் கதை போன்ற இசை தொகுப்புகளையும் வெளியிட்டிருந்தாா்.


நடிகர் சிரஞ்சீவி சர்ஜா

மனைவி மேக்னா ராஜுடன் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா ((படம் - https://www.instagram.com/megsraj/))
மனைவி மேக்னா ராஜுடன் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா ((படம் - https://www.instagram.com/megsraj/))

காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். 

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை 2018 ஏப்ரலில் திருமணம் செய்துகொண்டார் மேக்னா. இந்நிலையில் ஜூன் 7 அன்று மாரடைப்பு காரணமாக சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்தார். அவருக்கு வயது 39. 

‘அய்யப்பனும் கோஷியும்’ இயக்குநர் சச்சி

அய்யப்பனும் கோஷியும் என்கிற மலையாளப் படத்தை இயக்கி, அதிக கவனம் பெற்ற இயக்குநர் சச்சி ஜூன் 18 அன்று காலமானார். அவருக்கு வயது 48.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மலையாளப் படமான அய்யப்பனும் கோஷியும் ஏராளமான ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. பிரிதிவிராஜ், பிஜூ மேனன் நடிப்பில் சச்சி இயக்கிய இப்படம் பல மொழிகளில் ரீமேக் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழிலும் இப்படம் ரீமேக் ஆகவுள்ளது.

கே.ஆர். சச்சினாந்தம் என்கிற சச்சி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருச்சூரில் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட 48 வயது சச்சிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதயத்துடிப்பு முடக்கம் (கார்டியாக் அரெஸ்ட்) ஏற்பட்டத்தால் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சச்சி அனுமதிக்கப்பட்டார். மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் தடை ஏற்பட்டதால் அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இயக்குநர் சச்சி காலமானார். அய்யப்பனும் கோஷியும் போன்ற பல தரமான படங்களைத் தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவருடைய திடீர் மரணம் அதிர்ச்சியை உருவாக்கியது. பிரிதிவிராஜ், நிவின் பாலி உள்ளிட்ட மலையாளப் பிரபலங்களும் ரசிகர்களும் சச்சியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்கள். 

பாடகர் ஏ.எல். ராகவன்

பழம்பெரும் நடிகை எம்.என். ராஜமின் கணவரும் பின்னணிப் பாடகருமான ஏ.எல். ராகவன் உடல்நலக்குறைவால் ஜூன் 19 அன்று காலமானார். அவருக்கு வயது 87.

அய்யம்பேட்டை லட்சுமணன் ராகவன் என்கிற ஏ.எல்.ராகவன் 1933-ல் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் பிறந்தார். 10 வயது முதல் பால கான விநோத சபாவில் பாடகராக இருந்த ஏ.எல். ராகவன், 1947-ல் கிருஷ்ண விஜயம் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் பால கிருஷ்ணன் வேடத்தில் நடித்தார். திரைப்படங்களின் பின்னணிப் பாடகராகவும் இருந்த ஏ.எல். ராகவன், ஆரம்பக் காலங்களில் பெண் குரல்களிலும் பாடியுள்ளார். பிறகு புதையல் படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து ‘ஹலோ மை டியர் ராமி’ என்கிற பாடலின் மூலம் ஆண் குரலில் பாட ஆரம்பித்தார். இதன்பிறகு இவர் பாடும் பாடல்களுக்கென்று தனியாக ரசிகர்கள் உருவானார்கள். சில படங்களையும் அவர் தயாரித்துள்ளார். எல்.ஆர். ஈஸ்வரி, கே. வீரமணி, மலேசியா வாசுதேவன் போன்ற பிரபல பாடகர்களை வைத்து மேடையில் மெல்லிசைக் கச்சேரி செய்த முதல் நபர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. 

மே 2, 1960-ல் ஏ.எல். ராகவனும் பிரபல நடிகை எம்.என். ராஜமும் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள். 1963-ல் பிரம்மலக்‌ஷ்மணனும் 1969-ல் நளினா மீனாக்‌ஷியும் பிறந்தார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த எம்..என். ராஜம் 2007 வரை துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

ஏ.எல். ராகவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25 அன்று காலமானார். அவருக்கு வயது 74.

கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில் எஸ்.பி.பிக்கு வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் தொடா்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் 51 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரசிகர்களைத் தவிக்க விட்டு மரணமடைந்தார்.  

நடனக் கலைஞர் சரோஜ் கான்

பாலிவுட்டின் பிரபல நடனக் கலைஞர் சரோஜ் கான் ஜூலை 3 அன்று காலமானார். அவருக்கு வயது 71.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சரோஜ் கானுக்குக் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலவிதமான உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட சரோஜ் கான், மாரடைப்பு ஏற்பட்டு 1.30 மணிக்கு உயிரிழந்தார். அவருடைய உடல், மலாத் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள். 

சிறுவயதில் ஒரு நடிகையாக பாலிவுட்டில் அறிமுகமான சரோஜ் கான், பிறகு 1950களில் நடனக் கலைஞராக மாறினார். நடன இயக்குநர் ஷோகன் லாலிடம் பணியாற்றினார். 1974-ல் வெளியான கீதா மேரா நாம் படத்தில் நடன இயக்குநராக அறிமுகமானார். சாந்தினி, நகினா ஆகிய படங்களில் ஸ்ரீதேவியின் நடனங்களுக்கு வடிவமைத்து பாராட்டுகளைப் பெற்றார்.

1980களின் இறுதிகளில் பாலிவுட்டின் பிரபல நட்சத்திரம் ஆனார். மாதுரி தீட்சித்துடன் பணியாற்றிய பிறகு அதிகப் புகழை அடைந்தார் சரோஜ் கான். இந்தியா முழுக்கப் புகழ்பெற்ற ஏக் தோ தீன் பாடலுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியவர் சரோஜ் கான் தான். தர், பாஸிகர், தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே, பர்தேஸ், தால், லகான், மணிகர்னிகா போன்ற ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார். 

40 வருடங்களாகக் கிட்டத்தட்ட 2000 பாடல்களுக்கு மேல் நடனம் வடிவமைத்துள்ளார் சரோஜ் கான். தேவ்தாஸ், ஜப் வீ மெட், ஸ்ரீரங்கம் (தமிழ்) ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளைப் பெற்றார். சில படங்களுக்குத் திரைக்கதை அமைத்துள்ள சரோஜ் கான், நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார். 

நடிகர் அனில் முரளி

பல தமிழ்ப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள அனில் முரளி ஜூலை 30 அன்று காலமானார். அவருக்கு வயது 56.

தனி ஒருவன், 6, கொடி, நாடோடிகள் 2, மிஸ்டர் லோக்கல் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்த அனில் முரளி கேரளாவைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். பிறகு 1993 முதல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு என 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 

கல்லீரல் பிரச்னைக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். 

தயாரிப்பாளர் சுவாமிநாதன்

புதுப்பேட்டை, அன்பே சிவம் படங்களைத் தயாரித்த வி. சுவாமிநாதன் கரோனா பாதிப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 62.

கோகுலத்தில் சீதை, பிரியமுடன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை நினைத்து, பகவதி, அன்பே சிவம், புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களை 90கள் முதல் தயாரித்து வருகிறது லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் திரைப்பட நிறுவனம். இந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் வி. சுவாமிநாதன். சில படங்களில் குணச்சித்திரை வேடங்களில்  நடித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றால் சுவாமிநாதன் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுவாமிநாதன் சிகிச்சை பலனின்றி காலமானார். 

இயக்குநர் பாபு சிவன்

விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தை இயக்கிய பாபு சிவன் செப்டம்பர் 16 அன்று காலமானார். அவருக்கு வயது 54.

விஜய் நடித்த குருவி படத்துக்கு வசனம் எழுதியதோடு பைரவா படக் கதை விவாதத்திலும் கலந்துகொண்ட பாபு சிவன், விஜய் நடிப்பில் வேட்டைக்காரன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். அப்படம் 2009-ல் வெளியானது. சன் தொலைக்காட்சித் தொடரான ராசாத்தி-யை அவர் இயக்கி வந்தார்.

பாபு சிவனின் மகள்கள் நீட் தேர்வு எழுதச் சென்றிருந்தார்கள். அவர்களுடன் பாபு சிவனின் மனைவியும் உடன் சென்றிருந்தார். மூவரும் வீடு திரும்பியபோது மயக்க நிலையில் பாபு சிவன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். உடனே அவரை முதலில் தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையிலும் பிறகு ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தார்கள். போதிய பண வசதி இல்லாததால் அரசு மருத்துமனைக்கு பாபு சிவனை மாற்றினார்கள். 

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பாபு சிவனுக்கு நுரையீரல், சிறுநீரகப் பிரச்னைகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

நடிகர் வடிவேல் பாலாஜி

நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி உடல்நலக்குறைவால் செப்டம்பர் 10 அன்று காலமானார். அவருக்கு வயது 42.

கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன்மூலம் புகழ்பெற்றவர் வடிவேல் பாலாஜி. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியைப் பின்பற்றி நடித்ததால் அதிகக் கவனம் பெற்றார். பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜி, சிகிச்சை பலனின்றி காலமானார்.  அவருக்கு மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளார்கள். 

நடிகர் துரை பாண்டியன்

பிரபல வழக்கறிஞரும் நடிகருமான துரை பாண்டியன் உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் காலமானார்.

தமிழ்த் திரையுலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் துரை பாண்டியன். இவர் நுரையீரல் பிரச்னை காரணமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.  

விக்ரம் நடித்த ஜெமினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த துரை பாண்டியன், குற்றவியல் வழக்குகளில் ஆஜராகி வந்தார். 

இயக்குநர் ஈரோடு செளந்தர் 

திரைப்பட இயக்குனர் ஈரோடு சௌந்தர் (63) உடல் நலக்குறைவால் டிசம்பர் 5 அன்று காலமானர்.              

ஈரோடு அருகே நாதகவுண்டன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஈரோடு சௌந்தர். இவரது இயற்பெயர் சௌந்தர் ராஜன். தமிழ் திரை உலகில் பெரும் வெற்றிகள் பெற்ற சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதி  பிரபல வசனகர்த்தாவாகத் திகழ்ந்தவர்.

சிம்ம ராசி என்ற திரைப்படத்தை சரத்குமாரை வைத்து இயக்கி இயக்குனராகவும் திறமையை வெளிப்படுத்தினார். அவரது வசனங்களில் வெளிவந்த சேரன் பாண்டியன், நாட்டாமை, சிம்ம ராசி படங்களுக்காக தமிழக அரசின் விருதுகளை பெற்று சாதனை படைத்தவர். இவர் 15 திரைப்படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார். தவிர முதல் சீதனம் என்ற திரைப்படத்தையும் இயக்கி வெளியிட்டார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அவருடைய பேரன் கபிலேஷ் என்பவரை கதாநாயகனாக நடிக்க வைத்து  அய்யா உள்ளேன் அய்யா என்ற திரைப்படத்தை இயக்கினார்.              

கடந்த சில ஆண்டுகளாக அவர் ஈரோட்டில் சொந்த ஊரான முள்ளாம்பரப்பு நாதகவுண்டன் பாளையத்தில் வசித்து வந்தார். சிறுநீரக தோய்தொற்றால் பாதுக்கப்பட்டிருந்த அவர் ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வளர்மதி என்ற மனைவியும், கலையரசி, காயத்திரி என்ற மகள்களும் உள்ளனர். 

நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி

படம் - twitter.com/MithranRJawahar
படம் - twitter.com/MithranRJawahar

பிரபல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் செப்டம்பர் 8 அன்று காலமானார். அவருக்கு வயது 74.

1988 முதல் தெலுங்குப் படங்களில் நடித்து வந்த ஜெயபிரகாஷ் ரெட்டி, 1999-ல் வெளியான சமரசிம்ஹா ரெட்டி படத்தின் மூலம் அதிகக் கவனம் பெற்றார். பெரும்பாலான படங்களில் வில்லன் வேடங்களில் நடித்த ஜெயபிரகாஷ் ரெட்டி, நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். மகேஷ் பாபு நடிப்பில் இந்த வருடம் வெளியான சரிலேறு நீகேவரு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தமிழில் இவர் நடித்த முதல் படம் - ஆஞ்சநேயா (2013). இதன்பிறகு ஆறு, சின்னா, தர்மபுரி, திரு ரங்கா, உத்தம புத்திரன் எனப் பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். 

மாரடைப்பு காரணமாக ஆந்திர மாநிலம் குண்டூரில் காலமானார். 

நடிகர் இர்பான் கான்

தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் உடல்நலக் குறைவால் ஏப்ரல் 29 அன்று காலமானார். அவருக்கு வயது 53. 

இர்பான் கான், 1988 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வந்தார். 2011-ல் பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். 2018-ல் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் இர்பான் கான். லண்டனில் இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இர்பான் கான், மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமாக இருந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, சிகிச்சை பலனின்றி இர்பான் கான் காலமானார். அவருக்கு சுதாபா சிக்தர் என்கிற மனைவியும் இரு மகன்களும் உண்டு.

நடிகர் ரிஷி கபூர்

பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் ஏப்ரல் 30 அன்று காலமானார். அவருக்கு வயது 67.

மறைந்த நடிகர் ராஜ் கபூரின் 2-வது மகன் ரிஷி கபூர். 1970ஆம் ஆண்டு மேரா நாம் ஜோக்கர் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரிஷி கபூர், 1973-ல் கதாநாயகனாக அறிமுகமானார். பாபி திரைப்படத்தில் டிம்பிள் கபாடியாவுடன் சேர்ந்து நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு கடந்த 2000ஆம் ஆண்டு வரை திரைத்துறையில் வெற்றிகளைக் குவித்தார். இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அவர் அறியப்பட்டார். பாலிவுட்டில் பிரபலமாக உள்ள ரன்பீர் கபூர், ரிஷி கபூரின் மகனாவார்.

2018-ல் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் ரிஷி கபூர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரிஷி கபூர் அமெரிக்காவின் நியூயார்க்கில் புற்றுநோய் சிகிச்சையை முடித்துக் கொண்டு, மும்பைக்கு திரும்பினார். மும்பையில் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து வந்த ரிஷி கபூர், சிகிச்சை பலனின்றி காலமானார்.

செளமித்ர சாட்டர்ஜி 

பிரபல வங்காள நடிகர் செளமித்ர சாட்டர்ஜி, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நவம்பர் 15 அன்று உயிரிழந்தார்.

பிரபல இயக்குநர் சத்யஜித் ரேயின் இயக்கத்தில் அறிமுகமாகி, அவருடன் 14 படங்களில் இணைந்து பணியாற்றிவர் செளமித்ர சாட்டர்ஜி. மிருணாள் சென் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களின் படங்களிலும் நடித்துள்ளார். 

85 வயது செளமித்ர சாட்டர்ஜி, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இருமுறை பெற்றுள்ளார். பத்ம பூஷண், தாதா சாகேப் பால்கே விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

சௌமித்ர சாட்டா்ஜியின் மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மேற்கு வங்க ஆளுநா் ஜக்தீப் தன்கா் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

நடிகர் தவசி

புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகா் தவசி நவம்பர் 23 அன்று காலமானார். 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையைச் சோ்ந்தவா் திரைப்பட நடிகா் தவசி (60). இவருக்கு, கடந்த ஆண்டு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சையைப் பெற்று வந்தாா். இருப்பினும், போதிய பொருளாதார வசதியின்றி சிகிச்சையைத் தொடர முடியாமல், உடல்நிலைப் பாதிக்கப்பட்டாா்.

இதையடுத்து, மதுரையில் தனியாா் மருத்துவமனையில் நடிகா் தவசி அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தாா். அவா், வறுமையில் வாடுவதை அறிந்த பல்வேறு நடிகா்கள், வெளிநாடுவாழ் தமிழா்கள், ரசிகா்கள் மற்றும் பல்வேறு அமைப்பினா் அவரது மருத்துவச் சிகிச்சைக்கு நிதியுதவி செய்தனா்.

மருத்துவமனையில் நாள்களாக இருந்த தவசி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இவருக்கு, அங்கம்மாள் என்ற மனைவியும், மகன் பீட்டர்ராஜ், மகள் முத்தரசியும் உள்ளனா்.

நடிகர் சேதுராமன்

நடிகரும், மருத்துவருமான சேதுராமன் சென்னையில் கடந்த மார்ச் 26 அன்று இதய செயலிழப்பால் உயிரிழந்தாா்.

கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சேதுராமன், அதைத் தொடா்ந்து, வாலிப ராஜா, சக்கபோடு போடு ராஜா உள்ளிட்ட 4 படங்களில் நடித்துள்ளாா். பிரபல தோல் மருத்துவரான அவா் இதய செயலிழப்பால் உயிரிழந்தது தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியடைய வைத்தது.

கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி 

தேசிய விருது பெற்ற கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி டிசம்பர் 13 அன்று காலமானார். அவருக்கு வயது 77.

நாடோடித் தென்றல், வண்ண வண்ணப் பூக்கள், இம்சை அரசன் 23-ம் புலிகேசி, நான் கடவுள் உள்ளிட்ட பல படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ள கிருஷ்ணமூர்த்தி, திரையுலகில் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் ஆடை வடிவமைப்பாளராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். பூம்புகாரில் பிறந்தவர். சென்னை கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றார். சிறந்த கலை இயக்குநராக மூன்று தேசிய விருதுகளும் சிறந்த ஆடை வடிவமைப்பாளராக இரு விருதுகளும் பெற்றுள்ளார். இறுதியாக, ராமானுஜன் படத்தில் கலை இயக்குநராகப் பணியாற்றினார். 

படத்தொகுப்பாளர் கோலா பாஸ்கர்

இயக்குநர் செல்வராகவனின் படங்களுக்குத் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய கோலா பாஸ்கர் ஹைதராபாத்தில் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 55. 

செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் போன்ற படங்களுக்குப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர் கோலா பாஸ்கர்.

தொண்டைப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கோலா பாஸ்கர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நவம்பர் 4 அன்று மரணமடைந்தார். 

விஜய் நடித்த போக்கிரி, வில்லு, தனுஷ் நடித்த குட்டி, 3 போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார். கீதாஞ்சலி செல்வராகவன் தயாரித்த மாலை நேரத்து மயக்கம் படத்தை அவர் தயாரித்துள்ளார். அந்தப் படத்தில் கோலா பாஸ்கரின் மகன் பாலகிருஷ்ணா கோலா கதாநாயகனாக நடித்தார்.

நடிகர் டி.எஸ். ராகவேந்திரா 

மூத்த நடிகரும் பாடகருமான டி.எஸ். ராகவேந்திரா உடல்நலக்குறைவால் ஜனவரி 30 அன்று காலமானார். அவருக்கு வயது 75.

வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக நடித்துப் புகழ் பெற்றார் டி.எஸ். ராகவேந்திரா. உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராகவேந்திரா, சிகிச்சை பலனின்றி காலமானார். 

வைதேகி காத்திருந்தாள் படத்துக்குப் பிறகு சிந்து பைரவி, சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அவருடைய மகள் கல்பனா ராகவேந்திரா, பின்னணிப் பாடகியாக உள்ளார்.

நடிகர் கே.கே.பி. கோபாலகிருஷ்ணன்

நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள குணச்சித்திர நடிகர் கே.கே.பி. கோபாலகிருஷ்ணன் பிப்ரவரி 5 அன்று காலமானார். அவருக்கு வயது 54.

2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த படம் - நாடோடிகள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பரவலான வரவேற்புகள் கிடைத்தன. இந்தப் படத்தில் நடிகை அனன்யாவின் தந்தையாக, சசிகுமார் - அனன்யா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் கோபாலகிருஷ்ணன்.

உடல்நலக்குறைவால் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோபாலகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி காலமானார்.

தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த்

தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் போன்ற படங்களைத் தயாரித்த கிருஷ்ணகாந்த் செப்டம்பர் 30 அன்று காலமானார். அவருக்கு வயது 52.

திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், விக்ரம் நடித்த கிங், சிம்பு நடித்த மன்மதன், துஷ்யந்த் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களைத் தயாரித்தவர் கிருஷ்ணகாந்த். தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பாளராக இருந்த கிருஷ்ணகாந்த் சமீபகாலமாக எந்தப் படங்களையும் தயாரிக்கவில்லை. இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார்.  

நடிகர் விசு

நடிகரும் பிரபல இயக்குநருமான விசு (75), உடல் நலக்குறைவால் சென்னையில் மார்ச் 22 அன்று காலமானாா்.

‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘மணல் கயிறு’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவா் விசு. குடும்ப கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இவா் இயக்கிய பல படங்கள் ரசிகா்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. 1945-ஆம் ஆண்டு பிறந்த விசு, திரைப்படம் தவிா்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடா் பலவற்றிலும் நடித்துள்ளாா். கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக இருந்து பின்னா் இயக்குநா் ஆனாா். இவா் இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் மிகவும் பிரபலமானதாகும். பெரும்பாலான இந்திய மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. இவருடைய திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சோ்ந்ததாகும். ‘உழைப்பாளி’, ‘மன்னன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளாா்.  வசனகா்த்தா, கதாசிரியராகவும் பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளாா்.   கடைசியாக 2013-ஆம் ஆண்டு வெளியான ‘அலெக்ஸ்பாண்டியன்’ படத்தில் விசு நடித்திருந்தாா். இவருக்கு மனைவி உமா, மகள்கள் லாவண்யா, சங்கீதா, கல்பனா உள்ளனா்.

சிறுநீரகப் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த விசு சென்னையில் காலமானாா்.

நடிகை சித்ரா

தனியாா் தொலைக்காட்சி தொடா்களில் நடித்து வந்தவா் சித்ரா (29). ‘பாண்டியன் ஸ்டோா்ஸ்’ தொலைக்காட்சி தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவா். சித்ராவுக்கும், ஹேம்நாத் என்பவருக்கும் சமீபத்தில் பதிவுத் திருமணம் நடைபெற்றது.

சித்ரா பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பு பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரில் தொடா்ச்சியாக நடைபெற்று வந்தது. இதற்காக அவா், தனது கணவா் ஹேமந்துடன் அந்த திரைப்பட நகரின் அருகே பழஞ்சூரில் உள்ள ஒரு தனியாா் நட்சத்திர விடுதியில் தங்கினாா். இந்நிலையில் டிசம்பர் 9 அன்று அதிகாலை படப்பிடிப்பு முடிந்து வந்த நடிகை சித்ரா, ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com