142. சித்ரான்னம்

இப்போது நான் நிராயுதபாணி. அநாதரவானவன். பணமற்றவன். பசியற்றவன். உறக்கமற்றவன். உறவற்றவன். உணர்வும் அற்றுப் போனவன்.

அவள் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதற்கு முன்பே வினய், ‘நீ சித்ராதானே?’ என்று கேட்டது சித்ராவுக்குச் சிறிது வியப்பாக இருந்தது. கால் நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக ஒருத்தி பேயாக அலைந்துகொண்டிருக்கிறாள் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும் என்று வினய்க்குத் தோன்றியது. அதை அவன் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை. அகால மரணம்தான் என்றாலும், சித்ராவின் தகப்பனார் அவளுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்யாமல் இருந்திருக்கமாட்டார். ஒன்றுமே இல்லாது போனாலும் கயாவில் ஒரு நீர்க்கடன். அனுஷ்டானங்களில் நம்பிக்கை கொண்ட மனிதர். நம்பிக்கைகளின்பால் பற்று கொண்ட மனிதர். சடங்குகளைச் சடங்காகவேனும் செய்து முடித்துவிட அவசியம் நினைத்திருப்பார். ஆயினும் அவள் இப்படியாக இருந்தது அவனுக்கு வருத்தமாக இருந்தது.

‘நான் உனக்குத் தெரிகிறேனா?’ என்று சித்ரா கேட்டாள்.

‘ஆம்’.

‘என்னால் உன் அருகே வர முடியவில்லை. நீ ஏதோ செய்கிறாய் என்று நினைக்கிறேன்’ என்று சித்ரா சொன்னாள்.

‘ஆம். பழக்கமில்லாத ஆவிகளை நான் பத்தடி தொலைவில் நிறுத்திவிடுவேன். அவை என்னை நெருங்க இயலாது’.

‘நீ சன்னியாசியாகப் போய்விட்டாய் என்று சொன்னார்கள்’.

‘அதில் சந்தேகமில்லை. நான் சன்னியாசிதான். நீ ஏன் இப்படி இருக்கிறாய்? அதைச் சொல்’ என்று வினய் கேட்டான்.

‘வேறெப்படி இருக்க முடியும்?’

‘நீ வைதரணியைக் கடந்து எமனுலகம் போகவில்லையா?’

‘இல்லை’.

‘ஏன் போகவில்லை?’

‘போக விரும்பவில்லை’.

‘உன் விருப்பத்துக்கெல்லாம் முக்கியத்துவம் இருக்காதே?’

‘இல்லை. நான் தவம் புரிந்து பேயாகவே உலவும் வரம் பெற்றவள்’.

‘யாரைக் குறித்துத் தவம் இருந்தாய்?’

‘தருமதேவன் எனக்கு இந்த வரத்தை அளித்தான்’.

‘நம்ப முடியவில்லை’.

‘ஆனால் அதுதான் உண்மை. எனக்கு மோட்சம் கிடையாது. நரகம் நிச்சயம். அதன்பின் நான் ஒரு பன்றியாகப் பிறப்பேன்’.

‘நல்லது. இங்கு எதற்கு வந்தாய்?’

‘நான் வரவில்லை. இங்கேயேதான் இருக்கிறேன்’.

‘அப்படியா?’

‘நீ சொன்ன கால் நூற்றாண்டுக் காலமாக’.

‘எதற்கு?’

‘சொன்னேனே. நான் தவத்தில் இருப்பவள்’.

‘வரம் கிட்டிவிட்டதாகச் சொன்னதாக ஞாபகம்’.

‘ஆம். அது என்றோ கிடைத்துவிட்டது. ஆனால் அந்த வரமே என் தவம் இடையூறின்றி நடந்து முடிவதற்காகத்தான்’.

வினய்க்கு அவள் மிகவும் விநோதமாகப் பட்டாள். இருபத்தைந்து ஆண்டுக் காலம் ஒரு ஆத்மா ஓரிடத்தில் நிலைகொண்டு தவம் புரியும் என்று அவன் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அவள் பொய் சொல்லக்கூடியவளாகவும் தெரியவில்லை. இறந்த பின்பு மேற்கொள்ளும் தவம் நிச்சயம் வாழ்வு சார்ந்ததாக இருக்க முடியாது என்று அவனுக்குத் தோன்றியது. ஒருவேளை, தனது தயாரின் இறுதிக் காலம் வரை இங்கேயே உலவிக்கொண்டிருந்துவிட்டுப் போக நினைத்திருப்பாளோ?

இருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. பத்மா மாமி தனி ஆள். உதவிக்கு யாருமற்றவள். ஒற்றைப் பெண் குழந்தையாகப் பிறந்த சித்ரா பாதியில் தன் வாழ்வை முடித்துக்கொண்டுவிட்டாள். ஆனால் பாசம் இல்லாது போகுமா? அவனறிந்த ஒரு பெண்ணின் ஆவி, தனது அடைப்புக் காலம் முடியும்வரை தனது குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் நினைத்ததையெல்லாம் செய்து கொடுத்ததை அவன் அறிவான். பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் அவள். அவளது தம்பிக்கு ஒருநாள் அதிகாலை பென்ஸ் காரில் போவதுபோல ஒரு கனவு வந்திருக்கிறது. அதை அவன் காப்பி குடிக்கும்போது வீட்டாரிடம் சொல்லிக்கொண்டிருந்ததை அந்தப் பெண்ணின் ஆவி கேட்டது. ஒரு மணி நேரத்தில் அந்தக் குடிசைப் பகுதிக்குள் ஒரு பென்ஸ் கார் வந்து நின்றது. ஓட்டுநர் ஒருவர் இருந்தார். சரியாக அந்த வீட்டுக்கு வந்து அவனை வெளியே அழைத்து, காரில் ஏற்றிக்கொண்டு போனார். நாள் முழுவதும் எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு மாலை வீட்டுக்குக் கொண்டு வந்து இறக்கிவிட்டுப் போய்விட்டார்.

‘நீங்கள் யார்? எனக்கு எதற்காக இதைச் செய்கிறீர்கள்?’ என்று அந்தப் பையன் முழு நாளும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தான். போகிறபோதுதான் அவர் பதில் சொல்லியிருக்கிறார், ‘தம்பி, உன் அக்கா ஒரு பெரிய அதிகாரி. உனக்கு இன்றொரு நாள் இந்த சந்தோஷத்தைக் காட்டச் சொல்லி என்னை அனுப்பிவைத்தார்’.

‘இந்த கார் அக்காவுடையதா?’

‘இல்லை. அரசாங்கத்துடையது’ என்று அந்த ஓட்டுநர் சொல்லியிருக்கிறார். மறுநாள் செய்தித்தாளில் முதலமைச்சரின் கார் காணாமல் போய், திரும்பக் கிடைத்த செய்தி வெளியாகியிருந்தது.

வினய்க்கேகூட அப்படியொரு வாகன யோகம் அமைந்திருக்கிறது. எளிய மனிதர்களின் அற்ப சந்தோஷங்கள். ஆவிகளால் இந்த விளையாட்டுகளை எளிதாக ஆடிக்கொடுக்க முடியும். ஆனால், இந்த அற்ப சந்தோஷங்களில் லயித்துப்போய் நோக்கம் திசைமாறிவிடுவதுதான் பெரிய சிக்கல். அவனுக்கு அப்படித்தான் ஆனது.

அவனுக்கு வாய்விட்டுச் சிரிக்க வேண்டும்போல் இருந்தது. சட்டென்று சித்ராவின் மீது பரிதாப உணர்வு ஏற்பட்டது. ‘எனக்கு எதிரே பன்னிரண்டடி தூரத்தில் உட்கார்’ என்று சொன்னான். அவள் பதில் பேசாமல் அதற்குக் கட்டுப்பட்டாள்.

‘நான் இங்கே எதற்கு வந்திருக்கிறேன் என்று தெரியுமா?’ என்று வினய் கேட்டான்.

‘தெரியும். உன் அம்மா மரணப் படுக்கையில் இருக்கிறாள்’.

‘ஆம். அவள் நாளை இரவு இறந்துவிடுவாள்’.

‘அது உனக்குத் தெரியுமா?’

‘தெரியும். அவளை எரித்ததும் நான் கிளம்பிவிடுவேன். அவளை கடைத்தேற்றி அனுப்புவதுதான் என் வருகையின் நோக்கம் என்று எண்ணியிருந்தேன். இப்போது புதிதாக ஒன்று தோன்றுகிறது. சொல்லவா?’

‘சொல்’.

‘நான் ஒரு துறவி. ஆனால் என் சிறு வயதுகளில் மனத்துக்குள் நான் நிறைய பிழைகள் புரிந்திருக்கிறேன். அதற்கெல்லாம் உன்னைத்தான் கருவியாகப் பயன்படுத்தினேன். இதை உன்னிடம் சொல்லி மன்னிப்புக் கேட்கலாம் என்று இப்போது தோன்றுகிறது’.

அவள் அமைதியாக இருந்தாள்.

‘நீ ஒரு பெண்ணாகவே இருந்திருந்தாலும் இந்தச் சந்திப்பில் நான் இந்தப் பாவ மன்னிப்பைக் கேட்டிருப்பேன். என் இப்போதைய மனநிலைக்குப் பெண்ணும் பேயும் நாயும் பூனையும் அனைத்தும் ஒன்றுதான்’.

அவள் இப்போதும் அமைதியாக இருந்தாள்.

‘அந்நாள்களில் திருவிடந்தையின் ஒரே அழகி நீதான் என்பது என் எண்ணம். உன்னை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். உன் கன்னம், உதடுகள், சிறிய மார்பகங்கள், தாவணிக்கு இடையே தெரியும் இடுப்பின் சிறு பகுதி என்று அங்கம் அங்கமாகக் கண்டு உறிஞ்சியிருக்கிறேன்’.

அவள் சற்று சங்கடப்பட்டாள். ‘இதையெல்லாம் ஏன் சொல்கிறாய்?’ என்று கேட்டாள்.

‘உனக்குப் புரியுமா என்று தெரியவில்லை. நான் ஒரு தோல்வியுற்ற சன்னியாசி. என் தோல்வியின் ஊற்றுக்கண் உன் நினைவுகள் சார்ந்த குற்ற உணர்வில் உள்ளது’.

‘ஓ. தோல்வியுற்ற சன்னியாசி என்று எதை வைத்துச் சொல்கிறாய்? உனக்கு உறவுகள் உண்டா? ரகசியமாக?’

‘இல்லை. நான் உறவற்றவன். அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. சன்யாசம் என்பது ஒரு மனநிலை. தோற்றமல்ல. அதற்கு மிகவும் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு மனநிலை’.

‘அதில் நீ இல்லையா?’

‘அதில்தான் உள்ளேன். ஆனால் இந்தக் குற்ற உணர்வு என்னை வாழ்வில் திரும்பத் திரும்பப் பலமுறை குற்றம் புரியவைத்துவிட்டது’.

‘புரியவில்லை’.

‘எனக்குச் சில பெண்களைப் பார்க்கும்போது அவர்கள் முகத்தில் உன் முகத்தைப் பொருத்திப் பார்க்கத் தோன்றும்’.

‘சரி’.

‘அப்படி எந்தப் பெண்ணின் மீது உன் முகத்தை ஒட்டவைக்கிறேனோ, அந்தப் பெண்ணை உடனே தொட்டுப் பார்க்கத் தோன்றும்’.

‘சரி’.

‘இது ஒரு மனநோய். இது ஒரு மனநோய்தான் என்பதை நான் மிகத் தெளிவாக அறிந்தும், இதில் இருந்து வெளிவர முயற்சி செய்ததில்லை’.

‘ஏன்? உன் சன்னியாசம் கூடவா உனக்குப் பெரிதாகப் படவில்லை?’

‘இல்லை. என் சன்னியாசத்தின் காரணமே நீதான் என்று நினைத்தேன். உன்னைத்தான் நான் காமாக்யா கோயிலில் கண்ட தேவியாக உணர்ந்தேன். மனத்துக்குள் உன்னைப் புணர்ந்தபோதெல்லாம், நான் தேவியின் திருப்பாதங்களில் மணல் துகளாகி மிதிபடுவதுபோல உணர்ந்தேன்’.

‘ஐயோ. நீ மிகவும் பாவம்’.

‘இல்லை. நான் ஒரு பாவி. பல பெண்களிடத்தில் உன்னைத் தேடத் தெரிந்தவனுக்கு உன்னிடம் அன்றைக்கு என் விருப்பத்தைச் சொல்லி மணம் முடித்து வாழத் துப்பில்லாமல் போய்விட்டது’.

‘எனக்கு நெருங்கி வந்து உன்னைத் தொட வேண்டும் என்று தோன்றுகிறது’.

‘வேண்டாம். தயவுசெய்து அதற்கு முயற்சி செய்யாதே. பத்தடி தூர இடைவெளி அவசியம்’.

‘என்ன காரணம்?’

‘நான் பெண்களை நினைப்பதை நிறுத்திப் பத்தாண்டுகள் ஆகின்றன. என்னிடம் ஒரு இடாகினி இருந்தாள். நான் என்ன சொன்னாலும் செய்யக்கூடிய அடிமை. அவளுக்கும் விடுதலை அளித்து அனுப்பிவைத்துவிட்டேன். விசுவாசமான ஆவிகள் பெண்களின் ஆவிகள்தான் என்று எனக்குச் சொல்லிக்கொடுத்தவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால், வாழ்நாள் முழுதும் பெண் ஆவிகளை மட்டுமே நான் என் பணிகளுக்குப் பயன்படுத்தினேன். ஆனால் எனது இந்த முடிவின் பிறகு, எனக்கு ஊழியம் செய்யத் தயாராக இருந்த அனைத்துப் பெண்களின் ஆவிகளையும் விடுவித்துவிட்டேன். இப்போது நான் நிராயுதபாணி. அநாதரவானவன். பணமற்றவன். பசியற்றவன். உறக்கமற்றவன். உறவற்றவன். உணர்வும் அற்றுப் போனவன். ஆவியாகவே இருந்தாலும் நீ ஒரு பெண் என்பதால் என்னை நெருங்க வேண்டாம் என்பது எனது எளிய வேண்டுகோள்’.

அவள் சிறிது நேரம் அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு, ‘சரி. உன் வேண்டுகோளை நான் மீறமாட்டேன். ஆனால் நீ இவ்வளவு வெளிப்படையாகப் பேசியதால் நானும் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். அந்த வயதில் எனக்கு உன் மீது விருப்பமெல்லாம் இருந்ததில்லை. இப்போது ஒருமுறை கட்டித் தழுவ விரும்பித்தான் கேட்டேன்’.

‘வேண்டாம்’ என்று அவன் மீண்டும் சொன்னான்.

‘இங்கே என்ன செய்துகொண்டிருந்தாய்?’

‘கிருஷ்ண ஜபம்’.

‘கிருஷ்ண ஜபமா? நீயா! படுத்துக்கொண்டல்லவா இருந்தாய்?’

‘ஆம். படுத்தபடி அதைத்தான் செய்தேன்’.

‘ஐயோ நான் கலைத்துவிட்டேனா?’

அப்போதுதான் வினய் அதை எண்ணிப் பார்த்தான். எப்படியும் ஒரு லட்சத்தை நெருங்கியிருப்போம் என்று தோன்றியது. கெட்டுவிட்டது. அதனால் என்ன? ஒரு லட்சம் சுலபம். இன்னொரு முறை தொடங்கலாம். அது பிரச்னை இல்லை. ஆனால் சித்ராவை இப்படி எதிர்பாராதவிதமாகச் சந்திக்க நேர்ந்தது பெரிது.

‘ஒரு சந்தேகம் கேட்கலாமா?’ என்று சித்ரா கேட்டாள்.

‘கேள்’

‘நீ ஆவிகளுடன் பரிச்சயமுள்ளவன் என்கிறாய். அதையே தொழிலாகக் கொண்டும் வாழ்ந்திருக்கிறாய். அப்படி இருக்க, கிருஷ்ணனிடம் உனக்கென்ன வேலை?’

இதையும் சொல்லிவிடலாம் என்று அவன் நினைத்தான். ஆனால் என்னவென்று சொல்வது? காமரூபிணியின் காற்சலங்கை என் சிரசின் மீது படுவதற்குக் கண்ணனின் உதவியை நாடுகிறேன் என்றால் இவளுக்குப் புரியுமா? சிரித்துவிட மாட்டாளா! இதென்ன அற்பத்தனம், இதென்ன சிறுபிள்ளைத்தனம் என்று தோன்றிவிடுமோ? சந்தேகமென்ன. சிறுபிள்ளைத்தனம்தான். ஆனாலும் இதில் ஒரு லலிதம் இருக்கிறது. ஒரு லயம் இருக்கிறது. புத்திக்குத் தென்படாத ஒரு சூட்சுமத்தின் மையப்புள்ளி நிலைகொண்ட தருணம்.

சரி போ, சிரித்தால்தான் என்ன என்று ஒரு கணம் தோன்றியது. அவனே ஒரு புன்னகையுடன் ஆரம்பித்தான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com