141. அடைப்பு

ஆறு மாத காலத்துக்கு மேல் ஆவியாக அலைந்துகொண்டிருப்பவற்றோடு சிநேகிதம் கூடாது. அந்தப் பழக்கம் வாழ்வை நசியச் செய்துவிடும்.

முதலில் அது ஒரு தோற்றப்பிழை என்று வினய்க்குத் தோன்றியது. உடனே அவமானமாகவும் குற்ற உணர்வு கூடியும் சட்டென்று ஒரு துக்கம் திரண்டெழுந்து நெஞ்சை மிதித்தது. அவன் கிருஷ்ணனை நினைத்துத் தவமிருந்தான். கிருஷ்ணனைத் தவிர வேறெதையுமே அந்நேரம் அவன் நினைக்கவில்லை. தன்னியல்பான பக்தி கூடாத மனத்தை ஒருமுகப்படுத்தவும் தன்னை அற்பமாக்கிக் கிடத்தவும் நாமஜபம் உதவும் என்று வினோத் சொல்லியிருந்தது சரிதான் என்று அவன் தனது முயற்சியைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே உணர்ந்திருந்தான். திரும்பத் திரும்ப உச்சரித்துக்கொண்டே இருந்தபோது கிருஷ்ணன் இனிக்கத் தொடங்கியிருந்தான். அவனது குழலின் ஓசையே நீல நிறமாகிப் பரவி வெளியெங்கும் நிறைந்திருந்ததாக அவனுக்குத் தோன்றியது. அதில் நீந்தித் திளைக்க சுகமாக இருந்தது. நோக்கத்தைக்கூடக் களைந்துவிட்டுக் கிருஷ்ணனில் கரைந்துவிடலாம் என்று அவனுக்கு ஒரு கட்டத்தில் தோன்றியது. ஒரு பிணத்தைப் போல அவன் மணல் வெளியில் விழுந்து கிடந்தான். சிந்தை ஒன்றைத் தவிர வேறெதுவும் இயங்கா நிலையை எய்திவிட்டிருந்தான். உடலெங்கும் ஏறிக் கடித்த சிற்றெறும்புகளும் அவனது சடையை ஒரு வலையென எண்ணி உள்நுழைந்து வெளியேறிய சிலந்திகளும் காற்றில் திரண்டெழுந்து முகமெங்கும் பரவிய மணல் துகள்களும் அவனுக்கு ஒரு பொருட்டாக இல்லை. அந்தக் குரல் வராதிருந்தால் அவன் நாளெல்லாம் ஜபத்தைத் தொடர்ந்திருப்பான். போதை கலைந்து நிதானம் ஏறும்வரை அது நீண்டு நிறைந்திருக்கும். லட்சம் என்பதெல்லாம் என்ன? தொடங்குவதற்கு ஓர் இலக்கு. அவ்வளவுதான். உள்ளே மூழ்கிய பின்பு எண்ணிக்கைகளுக்கு அர்த்தமில்லை. ராய்ப்பூரில் அவனது நண்பன் ஒருவன், ஒரு சமயம் நாற்பது நாள் தவம் என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்தான். எண்ணி இருபது நிமிடங்களில் அவனது தவம் முடிந்துவிட்டது. பெரும் பரவசக் கூச்சலோடு எழுந்து நின்று கூத்தாட ஆரம்பித்தான். என்ன விஷயம் என்று வினய் கேட்டதற்கு, ‘என் தவத்துக்குப் பலன் கிட்டிவிட்டது. எனக்கு இந்திர தரிசனம் சித்தித்துவிட்டது’ என்று சொன்னான்.

தனக்கு அம்மாதிரியான அதிர்ஷ்டங்களுக்கு வாய்ப்பில்லை என்று வினய்க்கு எப்போதும் தோன்றும். முட்டி மோதி உதிரம் உலர்ந்து நாடி நரம்புகள் தளரும் நேரத்தில்தான் பிழைத்துப் போ என்று சில பத்து காசுப் பிட்சைகள் விழும். ஆவிகளை அடையாளம் காணவும் அவற்றை இழுத்து நிறுத்திப் பேசவும் வசியப்படுத்தி வைத்துக்கொள்ளவும் அவன் பயின்றதும் தேர்ச்சியடைந்ததும் அவ்வாறு நிகழ்ந்ததுதான்.

வினய் அப்போது கேரளத்தில் இருந்தான். முகம்மது குட்டியையெல்லாம் மறந்து பன்னெடுங்காலமாகியிருந்தது அப்போது. எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு இறுதியில் ஒரு மலையாள நண்பனின் ஆலோசனையின் பேரில் எர்ணாகுளத்துக்கு வந்து தங்கியிருந்தான். தாந்திரிக விற்பன்னரான நம்பூதிரி ஒருவரிடம் சில காலம் தங்கிப் பயில அவனுக்கு அனுமதி கிடைத்திருந்தது. அது அந்த நண்பன் ஏற்பாடு செய்தது. குறிப்பிட்ட சில ஆவிகளை அடக்கியாள அவனுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. ஆனால் அவன் விரும்பியது வேறு. உலகெங்கும் சுற்றித் திரிந்துகொண்டிருக்கும் எந்த ஒரு ஆவியையும் நினைத்த கணத்தில் தன் புறம் ஈர்க்கவும் தனது பணியில் ஈடுபடுத்தவும் முடியுமா என்று அவன் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான். அது முடியக்கூடிய ஒன்றுதான் என்று கல்கத்தாவில் அவனுக்கு அறிமுகமான வயது முதிர்ந்த ஆவியுலக ஆய்வாளர் ஒருவர் சொன்னார். எப்படி முடியும், என்ன செய்ய வேண்டும் என்று வினய் கேட்டபோது அவர்தான் அந்தக் கேரள இளைஞனை அவனுக்கு அறிமுகப்படுத்தியது.

‘இவன் பெயர் குட்டப்பன். எர்ணாகுளத்தைச் சேர்ந்தவன். இவனது சித்தப்பாவால் உனக்கு அந்தக் கலையை போதிக்க முடியும்’ என்று அவர் சொன்னார்.

வினய் குட்டப்பனுக்கு வணக்கம் சொன்னான். தன் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டான். தன்னைப் போன்ற தேடலில் உள்ள இன்னொருவனைக் கண்டதும் குட்டப்பனுக்கும் மகிழ்ச்சி உண்டானது. அவன் சில வசிய மருந்துகளைச் செய்யும் விதத்தைக் கற்பதற்காகக் கல்கத்தாவுக்கு அப்போது வந்திருந்தான்.  அவன்தான் வினய்க்குத் தன் சித்தப்பா என்ன செய்கிறார் என்பதைப் பற்றிச் சொன்னான்.

‘இருபத்தி ஏழு நட்சத்திரங்களுள் பதிமூன்று நட்சத்திரங்கள் சிறிது சிக்கல் வாய்ந்தவை. அவை தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படும். அந்தப் பதிமூன்று நட்சத்திரங்களில் இறந்தவர்களை மட்டும்தான் நாம் நமது காரியங்களுக்குப் பயன்படுத்த முடியும்’ என்று அவன் சொன்னான்.

‘அப்படியா?’

‘ஆம். உதாரணமாக அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதியில் இறந்தவர்கள் என்ன முட்டி மோதினாலும் ஆறு மாதங்களுக்கு எமனுலகம் போக முடியாது. அந்த ஆறு மாத அடைப்பு அவர்களுக்கு இருந்தே தீரும்’.

‘ஓ!’

‘ரோகிணியில் இறந்தால் நான்கு மாத அடைப்பு. உத்திரத்தில் உயிர் போனால் மூன்று மாத அடைப்பு. மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திராடம் இதிலெல்லாம் இறந்தால் இரண்டு மாத அடைப்பு நிச்சயம். என் சித்தப்பா இன்னும்கூட நிறைய சொல்லுவார். பிரச்னை என்னவென்றால் ஒருவர் இறந்தால் உடனே நாம் திதியைத்தான் கவனிப்போம். நட்சத்திரத்தைப் பார்க்க மாட்டோம். ஆனால் நட்சத்திரத்தை கவனித்தால்தான் நமக்கு லாபம்’ என்று குட்டப்பன் சொன்னான்.

‘ஆனால் குறுகிய காலம்தான் அந்த ஆத்மாக்களைப் பயன்படுத்த முடியும் அல்லவா?’

‘அதில் சந்தேகமில்லை. ஆனால் ஆயிரம் பல்லாயிரம் ஆவிகளைக் கட்டிவைக்க முடியும் என்று என் சித்தப்பா சொல்லுவார். குறிப்பாகப் பூரட்டாதி, உத்திரட்டாதியில் இறந்தவர்கள் சுமார் இருபதாயிரம் பேர் என் சித்தப்பாவுக்கு சேவகம் செய்கிறார்கள்’.

இருபதாயிரம் பேர் வேலை செய்யும் ஒரு தொழிற்சாலையை வினய் கற்பனையில் விரித்துப் பார்த்தான். சிரிப்பு வந்தது. இது ஒரு சாகசம் அல்லவா! எத்தனை பேருக்கு சாத்தியமாகும்! ‘உன் சித்தப்பாவை நான் சந்திக்க வேண்டும்’ என்று வினய் சொன்னான்.

குட்டப்பன் வந்த காரியத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்பும்போது, வினய்யை உடன் அழைத்துச் சென்றான். ஆனால் அவனது சித்தப்பா வினய்யை ஏற்றுக்கொள்ள மிகவும் தயக்கம் காட்டினார். அவனுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தவற்றைக் குறித்து மிகவும் கவனமாக விசாரித்து அறிந்தார். அவன் கட்டை விரலுக்குள் அடைத்து வைத்திருந்த இடாகினியை வெளியே விடச்சொல்லி சிறிது நேரம் அதனோடு பேசிப் பார்த்தார். ‘இது ஒன்றுதானா?’ என்று கேட்டார்.

‘இல்லை. எனக்கு வேறு இரண்டு ஆவிகளின் சகாயம் உண்டு’.

‘என்ன செய்யும் அவை?’

‘தரிசன லாபங்கள் ஒன்றன் மூலம் கிட்டும். இன்னொன்றைக் கொண்டு காணாமல் போன பொருள்களை மீட்டெடுப்பேன்’.

‘அவ்வளவுதானா?’

அவன் சிறிது யோசித்துவிட்டு, ‘ஆமாம். அவ்வளவுதான்’ என்று சொன்னான்.

குட்டப்பனின் சித்தப்பாதான் முதல் முறையாக வினய்க்கு ஒரு விஷயத்தைச் சொன்னது. ஆறு மாத காலத்துக்கு மேல் ஆவியாக அலைந்துகொண்டிருப்பவற்றோடு சிநேகிதம் கூடாது. அந்தப் பழக்கம் வாழ்வை நசியச் செய்துவிடும். தனிஷ்டா பஞ்சமி காலம் முடிந்து எமனுலகம் கிளம்பும்போதே விடை கொடுத்துவிட வேண்டும். இன்னொரு முறை அதைத் திரும்பிக்கூடப் பார்க்கக் கூடாது.

‘அப்படியா?’

நீ உன்னுடைய இரண்டு சினேகிதங்களையும் தொலைத்துவிட்டு வந்து சேர்ந்தால், உனக்குக் கற்றுத் தருவதைக் குறித்து யோசிக்கலாம்’ என்று அவர் சொன்னார்.

வினய்க்கு இது மிகுந்த குழப்பம் அளித்தது. ஆனால் இடாகினியைப் பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை என்பது சற்று நிம்மதியாக இருந்தது. மறுநாள் ஒரு சிறிய சடங்குக்குப் பிறகு அவன் தன்னோடு தொடர்பில் இருந்த இரண்டு ஆவிகளையும் விடுவித்து அனுப்பிவைத்தான். குளித்துவிட்டு வழியில் தென்பட்ட ஒரு பகவதி கோயிலுக்குச் சென்று கும்பிட்ட பின்பு குட்டப்பனின் சித்தப்பாவைச் சென்று சந்தித்தான்.

‘உட்கார்’ என்று சொன்னார்.

அவன் உட்கார்ந்தான்.

‘உன் கட்டை விரலின் மீதுள்ள கட்டை அகற்று’.

‘எதற்கு?’ என்று வினய் கேட்டான்.

‘நீ எனக்குத் தரப்போகிற குரு தட்சிணை அதுதான்’ என்று அவர் சொன்னார்.

வினய் எழுந்துவிட்டான்.

‘ஏன் எழுந்துவிட்டாய்?’ என்று அவர் கேட்டார்.

‘இல்லை. நான் வாழ்வெங்கும் நிறைய இழந்தவன். மிச்சம் இருப்பது இது ஒன்றுதான். இதையும் குரு தட்சணையாகத் தர நான் விரும்பவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பும்போது, அவர் என்ன நினைத்தாரோ ‘சரி வந்து உட்கார்’ என்று சொன்னார். வினய்க்கு நம்பிக்கை வரவில்லை.

‘உன் இடாகினி எனக்கு வேண்டாம். ஒருவாரம் உனக்கு நான் சில பாடங்கள் சொல்லித் தருவேன். கற்று முடித்த பின்பு உன் இடாகினியைக் கொண்டு எனக்கு நீ ஒரு சகாயம் செய்து தர வேண்டும்’ என்று அவர் சொன்னார்.

அந்த ஒரு வாரத்தில் அவனுக்கு இரண்டு பாடங்கள் கிடைத்தன. எல்லா ஆவிகளையும் அவை உடலை விட்டுப் பிரியும்போதே கண்டறியும் ஆற்றல் சித்தித்தது. இரண்டாவது, தனிஷ்டா பஞ்சமி ஆவிகளைப் பிரித்தறியக் கற்றுக்கொண்டான்.

‘இன்னும் ஒன்று சொல்லித்தருவேன். எந்த ஆவியையும் உன் பணிக்குப் பயன்படுத்தும் வித்தை. ஆனால் அதற்குமுன் நீ எனக்கு ஒன்று செய்ய வேண்டும்’ என்று அவர் சொன்னார்.

‘சொல்லுங்கள்’.

அவர் சொன்னார். அவன் தனது இடாகினியின் உதவியுடன் அதைச் செய்து கொடுத்தான். குற்ற உணர்வில் அடுத்த நாற்பது தினங்கள் உண்ணாமல் விரதம் இருந்து உடல் நலிந்து படுத்தான். மீண்டு எழ மேலும் மூன்று மாதங்களாயின.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com