140. தவப் பயன்

உங்கம்மா உசிரு போன கொஞ்ச நேரத்துல உன் குடும்பத்துல இன்னொரு உசிரு போகும். ஆனா இயற்கையா இல்லே. ஒரு கொல விழப்போகுது..

வினய்க்கு அந்த வைத்தியர் சாமியுடன் உரையாட விருப்பமில்லாமல் இருந்தது. அவருடன் என்றில்லை. அவனது மனநிலை அப்போது கிருஷ்ண ஜபம் தொடங்குவதைத் தவிர வேறெதையும் விரும்பாததாகவே இருந்தது. ஒரு லட்சம் என்பது எளிய எண்ணிக்கை. ஒரு விளையாட்டுப் போலவே செய்து முடித்துவிட முடியும். ஒருவேளை வினோத் சொன்னது பலித்துவிட்டால் நல்லதுதானே. ஆனால் சாமி அவனைக் கிளம்ப விடமாட்டார் போலத் தெரிந்தது. ஒரு குத்து மதிப்பாகத்தான் அவர் தன்னை யாரென்று தெரிந்துகொண்டிருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். உன்னைப் பார்த்தால் சன்னியாசியாகத் தெரியவில்லை என்று அவர் சொன்னது சீண்டிப் பார்ப்பதற்காக இருக்கலாம் என்று தோன்றியது. என்னவானாலும் தன் கட்டுப்பாட்டை விட்டுவிடக் கூடாது என்று வினய் முடிவு செய்துகொண்டான். சிறிதளவு எரிச்சலுற்றாலும் அது தன் நோக்கத்தில் இருந்து நகரச் செய்துவிடும் என்று பட்டது. எனவே வைத்தியரே கிளம்பச் சொல்லும்படியாக அவரது கேள்விகளுக்கு பதில் சொல்வது என்று முடிவு செய்துகொண்டான்.

‘எனக்கு உங்கம்மாவ தெரியாது. உங்கப்பாவையும் தெரியாது. உங்க நாலு பேரையுங்கூடத் தெரியாதுதான். ஆனா உங்கள பத்தி ஒருத்தன் அடிக்கடி பேசுவான். நெறைய சொல்லுவான்’ என்றார் சாமி.

யார் அது என்று இப்போது கேட்க வேண்டும். வினய் அந்தக் கேள்வியைத் தவிர்க்க விரும்பி, ‘ஓஹோ, அப்படியா?’ என்று சொன்னான்.

‘உங்கண்ணன் எங்க இருக்கான்னு உனக்குத் தெரியுமா?’ என்று சாமி கேட்டார்.

தெரியும் அல்லது தெரியாது என்ற பதில் போதும் என்றாலும், வினய் ‘எனக்கு அண்ணன் தம்பிகளெல்லாம் இல்லை’ என்று சொன்னான்.

‘அம்மா மட்டும் இருக்காளாக்கும்’.

‘ஆமா’.

‘அந்தவரைக்கும் சந்தோசம். விடு, உன்னாண்ட ஒரு விசயம் சொல்லணும்’ என்று சாமி சொன்னார்.

தன்னிடம் பேச அவருக்கு என்ன இருக்க முடியும் என்று வினய்க்கு ஆச்சரியமாக இருந்தது. முன்பின் அறிமுகமில்லாத மனிதர். காவிதான் உடுத்தியிருக்கிறார். ஆனால் வீட்டில் ஒரு புராதனமான குடும்ப போட்டோ இருக்கிறது. அதில் அவர் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரது மனைவி பண்டைய நாகரிகத்தை ஒட்டி அருகே நின்று போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார். முழங்கால் உயரத்துக்கு ஒரு சிறுவனும் படத்தில் இருக்கிறான்.

பிரச்னை இல்லை. பிறகு சன்னியாசி ஆகியிருக்கலாம். அல்லது செய்யும் தொழிலுக்கு இது வசதி என்று நினைத்திருக்கலாம்.

‘என்ன, சொல்லுங்கள்’ என்று வினய் கேட்டான்.

‘இது ஒரு சூட்சுமம். ஆனா இத உனக்கு சொல்லணுன்னு எனக்கு விதி. உங்கம்மா உசிரு போன கொஞ்ச நேரத்துல உன் குடும்பத்துல இன்னொரு உசிரு போகும். ஆனா இயற்கையா இல்லே. ஒரு கொல விழப்போகுது’ என்று அவர் சொன்னார்.

வினய்க்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரம் ஏதும் பேசாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, ‘எனக்குக் குடும்பமெல்லாம் இல்லை. சாவு பத்தி நான் யோசிக்கறதில்லை’ என்று சொன்னான்.

‘நீதான் சாவேன்னு நான் சொல்லல. உங்க குடும்பத்துல ஒருத்தர்’.

‘எனக்குக் குடும்பமெல்லாம் இல்லை’ என்று மீண்டும் சொன்னான்.

அவர் அதைக் கண்டுகொள்ளாமல், ‘உனக்கு இதைச் சொல்லணுன்னு எனக்கு உத்தரவு. சொல்லிட்டேன்’.

‘யாரோட உத்தரவு?’

‘சொன்னா தெரியுமா. அவர் ஒரு சித்தர்’.

வினய் சிரித்தான். ‘பரவால்ல சொல்லுங்க தெரிஞ்சிக்கறேன்’.

‘தெரியாது ஒனக்கு. ஏன்னா எனக்கே தெரியாது அவரை. தேவைப்பட்டா இந்த மாதிரி உத்தரவு மட்டும் அனுப்புவாரு’.

‘ஓ. எங்கேருந்து?’

‘திருவானைக்கா. ஆனா இப்பம் அவரு இங்க வந்திருக்காரு’.

வினய் சட்டென்று எழுந்துவிட்டான். ‘சொரிமுத்துவா?’ என்று கேட்டான். சாமிக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. ‘தெரியுமா ஒனக்கு?’ என்று கேட்டார்.

‘இங்க வந்திருக்காரா? எங்க இருக்காரு?’

அவன் கேட்டதை அவர் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. ‘ஒரு நிமிசம் இரு’ என்று சொல்லிவிட்டு, எங்கோ ஒலிக்கும் ஏதோ ஒரு சத்தத்துக்குக் காது கொடுப்பவர்போலக் காதில் கைவைத்து எதன் மீதோ தனது கவனத்தை நிறுத்தினார். சட்டென்று கையை எடுத்துவிட்டு, ‘ஒண்ணுந்தெரியாத மாதிரி கேக்குற? நேத்து ராத்திரியே ஒன்ன பாத்துட்டாராமே?’ என்று சொன்னார்.

வினய் சிறிது நேரம் அமைதியாக யோசித்தான். ஏதோ நிகழ்கிறது என்று புரிந்தது. தொடர்பற்ற சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால் ஏதாவது புரியும். முந்தைய நாள் இரவு அவன் கடற்கரை மணலில் படுத்து உறங்கினான். சொரிமுத்துவை அவன் காணவில்லை. ஆனால் நடுவே உறக்கம் கலைந்து அவன் கண் விழித்துப் பார்த்தபோது அருகே படுத்திருந்த நான் அங்கே இல்லை. எனவே, சொரிமுத்து என்னைத் தான் சந்தித்திருக்க வேண்டும் என்று வினய்க்குத் தோன்றியது.

இந்த வைத்தியர் சாமி, சொரிமுத்துவுக்கு ஒரு வேலையாளாக இருக்கலாம். ஆனால் இவர் சித்தரல்ல. நிச்சயமாக அல்ல என்று வினய் நினைத்தான். சொரிமுத்து, கருவிகள் உதவியின்றித் தான் தெரிவிக்க நினைப்பதை இவர் செவிகளுக்குக் கடத்திவிடுகிறார் என்பது புரிந்தது. அது எப்படி நிகழ்கிறது என்பது இவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை என்றும் அவனுக்குத் தோன்றியது.

நான்கு பேரில் ஒருவனைச் சந்தித்தேன் என்று சொரிமுத்து சொல்லியிருக்கலாம். அல்லது விமல் என்று பெயர் சொல்லியே கூடத் தெரிவித்திருக்கலாம். வைத்தியர் சாமிக்கு எங்கள் நால்வரையுமே பரிச்சயம் கிடையாது என்பதால் வினய்யைத்தான் சொரிமுத்து சந்தித்திருக்கிறார் என்று நினைத்துவிட்டார்.

வினய்க்கு உடனே சொரிமுத்துவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. எத்தனை உன்னதமான மனிதர்! உடன் இருந்த நாள்களில் அவரது அருமையைத் தான் சரியாக உணரவில்லை என்று இப்போது நினைத்தான். எந்த சக்தி தன்னைத் திரும்ப சொரிமுத்துவிடம் போய்ச் சேராமல் தடுத்திருக்கும் என்று அவன் பல்லாண்டுக்காலம் யோசித்திருக்கிறான். விடை தெரியவில்லை. முடிந்தால் சொரிமுத்துவிடமே அதைக் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அவனுக்குச் சொரிமுத்து இன்னமும் உயிரோடு இருப்பதே அதிசயமாக இருந்தது.

‘கேட்டனே. உனக்கு அவர தெரியுமா?’ என்று சாமி கேட்டார்.

‘யாரை?’

‘நீ சொன்னவரைத்தான்’.

தெரியும் என்று சொல்வதா, தெரியாது என்று சொல்வதா என்று வினய்க்குக் குழப்பமாக இருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று ‘கேள்விப்பட்டிருக்கேன்’ என்று சொன்னான்.

‘செரி. சொல்லச் சொன்னாரு. சொல்லிட்டேன். பாத்துக்க’ என்று சொன்னார்.

உரையாடலை அங்கே முடித்துக்கொள்ளலாம் என்று வினய் தீர்மானித்தான். சட்டென்று கைகூப்பி, ‘நான் கெளம்புறேன்’ என்று சொல்லிவிட்டு பதிலுக்கு நிற்காமல் வேகமாக வெளியேறிச் சென்றான். நிகழவிருக்கும் கொலையில் சிக்கப்போவது யார் என யோசிக்க வேண்டாம் என்று வீட்டு வாசலை விட்டு இறங்கும்போதே அவன் முடிவு செய்தான். யாராக இருந்தால் என்ன? விதியின் செயல்பாடுகளை மாற்ற இயலாது. காரணம் வேண்டுமானால் தேடலாம். ஆனால் அதனால் மட்டும் என்ன பயன்? வாழ்வைக் குறித்தும் மரணத்தைக் குறித்தும் அவன் யோசிப்பதை நிறுத்தி வெகுகாலம் ஆகிவிட்டிருந்தது. இடையிடையே பசியைக் குறித்து யோசிக்கவேண்டி இருந்தது. பசியற்று அலைந்து திரிவதற்கான நிரந்தர வழி ஏதும் இருக்குமா என்று சிறிது காலம் ஆராய்ச்சி செய்திருக்கிறான். உணவைத் துறந்தாலும் அந்நினைவைத் துறக்க முடியாமல் போயிருக்கிறது. உண்மையில் பசியென்பது வயிற்றில் அல்ல; நினைவில் பிறப்பது என்று அவனுக்கு எப்போதும் தோன்றும். நினைவைத் துறக்கத் தவத்தினும் சிறந்த உபாயமில்லை. தவம் நடைபெறுவதற்குப் பசி மறக்க வேண்டியது அவசியம்.

என்ன அழகான மாய வளையம்! யோசித்தபடியே அவன் திருவிடந்தை சவுக்குக் காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வழியில் ஒரு பெட்டிக் கடையில் நின்று ஒரு காஜா பீடி மட்டும் வாங்கிக்கொண்டான். கடையில் இருந்த தீப்பெட்டியில் இருந்து இரண்டு குச்சிகளையும் ஒரு காலிப் பெட்டியையும் கேட்டு எடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினான். சவுக்குக் காட்டை அவன் சென்றடைந்தபோது வெயில் நன்றாக ஏறிவிட்டிருந்தது. கடலில் இருந்து வீசிய காற்று மிதமாகச் சுட்டது. அவன் காட்டை மெல்லச் சுற்றி வந்தான். பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்வதே அவனது அப்போதைய கவலையாக இருந்தது. பொதுவாக யாரும் வரமாட்டார்கள்தான். தப்பித்தவறி யாராவது வந்து தவத்தைக் கெடுத்துவிட்டால்தான் சிக்கல். ஆனால் வேறு வழியில்லை. இந்தப் பிராந்தியத்தில் இதனைக் காட்டிலும் வேறு சிறந்த இடம் இருக்கப் போவதில்லை என்று நினைத்தான்.

ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தான். சட்டென்று ஒரு யோசனை வந்தது. உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு ஜபிக்கத் தொடங்கினால் யாராவது வந்து குரல் கொடுக்கும் அபாயம் இருக்கிறது. இதுவே படுத்துக்கொண்டு ஆரம்பித்தால்? யாரோ பரதேசி தூங்குகிறான் என்று எண்ணிக்கொண்டு அப்பால் சென்றுவிட வாய்ப்புள்ளது அல்லவா? எனவே படுத்தபடி ஜபத்தை நிகழ்த்த அவன் முடிவு செய்தான். வாங்கி வந்திருந்த பீடியைப் பிரித்து புகையிலைத் தூளைக் கீழே கொட்டினான். சாமியிடம் இருந்து வாங்கி வந்த கஞ்சா இலைகளைக் கசக்கி அதனுள் திணித்தான். பற்ற வைத்து ஆழமாக இழுத்துப் புகைத்தான். மனத்தை ஓங்காரத்தில் நிறுத்த முயற்சி ஆரம்பித்தான். அது நெடுநாளாகிவிட்டது. ஒரு காலத்தில் ஏழெட்டு விநாடிகளுக்குள் அவனால் தன் மனத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். நாளெல்லாம் தன்னை மறந்து தவப்பொருளைச் சிந்தித்தபடி இருப்பான். வெறுப்பும் விரக்தியும் மேலோங்கத் தொடங்கியபின்பு அவன் தவம் புரிவதை நிறுத்திவிட்டான்.

பல்லாண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஒரு முயற்சியை ஆரம்பித்திருக்கிறோம் என்பதே அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. இதுவரை எண்ணிக்கூடப் பார்த்திராத கிருஷ்ணனின் வடிவத்தை மனத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தப் பார்த்தான். ஓங்கார வடிவத்துக்குள் கிருஷ்ணனைப் பொருத்தி அப்படியே தூக்கித் தன் புருவ மத்தியில் வைத்தான். இரு விழிகளையும் மனத்துக்குள் குவித்து அதை தரிசிக்க ஆரம்பித்தான். கஞ்சாவின் போதை சிரசைத் தொட்ட கணத்தில் சட்டென்று ஜபத்தைத் தொடங்கினான். கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண.

சிறிது நேரத்தில் அவனுக்கு இடம் காலம் அனைத்தும் மறந்து போனது. வெளிச்சமும் இருளுமற்றுப் போய் சிந்தை வெளியெங்கும் நீலமானது. ஒரு புள்ளியாகத் தோன்றிய நீலம் மெல்ல மெல்ல விரிந்து வானும் கடலுமாக வியாபித்தது. பிறகு அதுவே புவியானது. புவியில் இருந்து மெல்ல மெல்ல அவன் நகர்ந்து பிரபஞ்ச வெளியில் விழுந்தபோது அதுவும் நீலமாகவே காட்சியளித்தது. நட்சத்திரங்கள் நீலமாயின. கிரகங்கள் நீலநிறத் தோற்றம் கொண்டன. நிலவு நீலமானது. நீலம் ஒரு நாகமாக உருப்பெற்று கதிரவனைத் தீண்டுவதற்காக ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்து போனது. நீண்டு நெளிந்த அதன் நாவும் நீலமாகவே இருந்தது. சூரியனை அது தொட்டு நீலம் அதனுள்ளும் பரவும்போது தனக்குக் கிருஷ்ண தரிசனம் கிட்டிவிடும் என்று அவன் நினைத்தான். அதனையே இலக்காக வைத்து அவன் நகர்ந்து நகர்ந்து போய்க்கொண்டே இருந்தான்.

‘போதும், கண்ணைத் திற’ என்றொரு குரல் கேட்டது. கிருஷ்ணா என்று அலறிக்கொண்டு வினய் கண்ணைத் திறந்து பார்த்தான்.

சித்ரா நின்றுகொண்டிருந்தாள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com