136. நடை திறப்பு

சிறகை அசைக்காமல் நடு வானில் மிதக்கும் ஒரு கழுகினைப் போல அவர்கள் பேசும் சொற்களின் ஒலி இங்குமங்கும் நகராமல், இருவர் உதடுகளுக்கு இடையிலேயே மிதந்துகொண்டிருக்கும்..

கேசவன் மாமாவைப் பார்த்தபோது எனக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. என்னைத் தேடி அவர் மடிகேரிக்கு வந்தபோது, நான் சிறு வயதில் அவரிடம் கண்ட அதே வேகம், சுறுசுறுப்பு, படபடவென பேசுகிற குணம், சட்டென்று கண்கலங்கிவிடுகிற இயல்பு எல்லாம் அப்படியே இருந்தது. இருபது வருடங்களில் மனிதர் மிகவும் தளர்ந்துவிட்டிருந்தார். தலை முடியும் புருவங்களும் முழுதாக நரைத்திருந்தன. கண்கள் ஒடுங்கிப் போய், நாடி தளர்ந்து நடக்கவே முடியாமல் நடந்து வந்தார். சட்டை அணியாத மார்பில் ஒரு துண்டு மட்டும் போட்டிருந்தார். அதன் மறுமுனையை இடுப்பு வேட்டியில் சொருகியிருந்தார். கால்களில் செருப்பு இல்லை. பாதங்களின் மேற்புறம் முழுவதும் உப்பு பூத்தாற்போலிருந்தது. ஒரு மாட்டு வண்டி மெல்ல நகர்ந்து வருவது போல அவர் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார். இன்னும் பார்த்திருக்கவில்லை. குனிந்த தலை நிமிராமல் நிலம் பார்த்தேதான் வந்தார்.

‘வினோத், இங்கே இந்த மனிதர் நம்மைக் கண்டதும் என்ன செய்வார் என்று நினைக்கிறாய்?’ என்று கேட்டேன்.

‘கண் கலங்கிவிடுவார்’.

‘பிறகு?’

‘கட்டியணைத்து அழுவார். நடுச்சாலையில் இது தேவையா என்று யோசிக்கிறேன். நாம் திரும்பி வீட்டுக்குப் போய்விடுவோமா? அங்கே போய் பேசிக்கொள்வோமே?’

‘இல்லை. அவர் அப்படியெல்லாம் செய்ய மாட்டார்’ என்று சொன்னேன்.

‘எப்படிச் சொல்கிறாய்?’

‘பொறுத்திருந்து பார்’.

மாமா எங்களை நெருங்கியபோது, நான் அவர் எதிரே போய் நின்றேன். புன்னகை செய்தேன். புருவங்களுக்கு மேல் விரல் குவித்து அவர் என்னை நிமிர்ந்து பார்த்தார். ‘விமலா!’ என்றார்.

நான் சிரித்தேன். வினோத்தைப் பார்த்தேன். அவனும் அருகே வந்து, ‘சௌக்கியமா?’ என்று கேட்டான்.

‘டேய், வந்துட்டியா? நல்லதா போச்சு போ. ஒருத்தனும் வரக்காணமே, கொள்ளிய போட்டுட்டு நாமளும் கூட ஏறிப் படுத்துண்டுடலாமான்னு நினைச்சிண்டிருந்தேன்’ என்று மாமா சொன்னார்.

‘எப்படி இருக்கேள்?’ என்று கேட்டேன்.

‘இருக்கேன், பூமிக்கு பாரமா. என்னைப் பத்தி என்ன? உங்கம்மாதான் இழுத்துண்டிருக்கா’.

‘சரி, வாங்கோ’ என்று சொல்லிவிட்டு வினோத் நடக்க ஆரம்பித்தான்.

சிறிது தூரம் உடன் வந்தவர் சற்று நின்றார்.

‘என்ன மாமா?’

‘மூச்சு வாங்கறதுடா. வயசாயிடுத்தோல்யோ? உங்க வேகத்துக்கு வர முடியலே’.

நாங்கள் காத்திருந்தோம்.

‘ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் இருக்கேளா?’ என்று கேட்டார்.

‘அதெப்படி மாமா? அவன் கல்கத்தாவிலே இருக்கான். நான் கர்நாடகா’.

‘நான் போன் பண்ணப்போ உன் சிஷ்யாள் யாரோ நீ போபால்ல இருக்கேன்னு சொன்னாளே’.

‘அப்போ அங்கேதான் இருந்தேன்’.

மாமா வினோத்தை முகம் தொட்டுத் திருப்பிப் பார்த்தார். புன்னகை செய்தார். அவனும் சிரித்தான். ‘ஏண்டா இன்ன இடத்துல இருக்கேன்னாவது ஒரு போன் பண்ணக் கூடாதா? அது சன்னியாச தருமத்துக்கு விரோதமாயிடுமா?’

‘அப்படியெல்லாம் இல்லை மாமா. பண்ணணும்னு தோணலை. அதனால பண்ணலை’.

‘பட்டுனு நூல் அறுந்த மாதிரி அறுந்துடுமோ?’

‘அப்படித்தான்னு நினைக்கறேன்’.

‘விமலை மட்டும்தான் நடுல ரெண்டுவாட்டி போய்ப் பாத்தேன். உங்க மூணு பேரையும் கண்டுபிடிக்கவே முடியலே’.

‘வினய் வந்திருக்கான் மாமா. இன்னிக்குப் பார்க்கலாம்’ என்று சொன்னேன்.

‘அவனும் வந்துட்டானா? சந்தோஷம்டா. உங்கம்மா திருப்தியா போய்ச் சேருவா’ என்று சொன்னார்.

‘விஜயும் வந்துடுவான் மாமா’ என்று வினோத் சொன்னான்.

‘உன்கிட்டே சொன்னானா?’

வினோத் சிறிது யோசித்தான். என்னைப் பார்த்தான். ‘வராம இருக்கமாட்டான் மாமா’ என்று நான் சொன்னேன்.

‘நீதான் இவனுக்கு சொன்னியா?’

‘இல்லை. இவனேதான் கிளம்பி வந்திருக்கான். வினய்யும் அவனேதான் வந்தான்’.

‘அவன் எங்கே?’

‘நீலாங்கரை வரைக்கும் போயிருக்கான். வந்துடுவான்’.

‘எப்படிடா? மனசுல தோணிடுத்தா அம்மா போயிடுவான்னு?’

வினோத் புன்னகை செய்தான்.

‘சீக்கிரம் வாங்கோ. ஒரு நிமிஷம் விட்டுட்டு வெளில வந்தாலும் போய்ப் பாக்கறப்ப பிராணன் இருக்குமோ இருக்காதோன்னு பயம்மா இருக்கு’ என்று சொல்லிவிட்டுத் தன் சக்திக்கு மீறிய வேகத்தில் நடக்க ஆரம்பித்தார்.

‘மெதுவாவே போகலாம் மாமா. அவ இன்னிக்குப் போகமாட்டா’ என்று சொன்னேன். கேசவன் மாமா என்னை அதிர்ச்சியுடன் பார்த்தார். ‘பின்னே?’

‘நாளைக்கு ராத்திரி போயிடுவா’.

‘எப்படிச் சொல்றே?’

‘நான் சொல்லலை. அண்ணா இவனுக்கு அப்படி சொல்லியிருக்கான்’.

மாமாவால் நம்பவே முடியவில்லை. சட்டென்று வினோத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். ‘இவன் சொல்றது நிசமாடா வினோத்? நீ விஜய்யைப் பார்த்தியா? அவன் எங்கடா இருக்கான்? எப்படி இருக்கான்? என்னவா இருக்கான்?’

‘நான் பார்க்கலை மாமா. ரொம்ப வருஷம் முன்ன ஒரே ஒரு தடவை வாரணாசில பார்த்தேன். அவன் பெரிய யோகி தெரியுமோ?’

‘அப்படித்தான் இருப்பான்னு மனசுல தோணித்து’ என்று மாமா சொன்னார். உடனே என்னைப் பார்த்து, ‘நீ பாத்தியா?’ என்று கேட்டார்.

‘இல்லை மாமா. பார்த்ததில்லை. எனக்கு அவன் முகமே மறந்து போயிடுத்து’.

‘எம்பெருமானே!’

‘ஆனா பார்க்கறதுக்கு நிறைய முயற்சி பண்ணேன். முடியலை. அப்பறம் விட்டுட்டேன்’.

‘ஏண்டா, யோகின்னா சித்தெல்லாம் பண்றானா?’

‘தெரியலை’ என்று வினோத் சொன்னான்.

‘தெரியலைன்னா?’

‘சித்து தெரியாம இருக்காது மாமா. ஆனா பிராக்டிஸா பண்ணமாட்டான்னுதான் நினைக்கறேன்’.

‘நீ அதெல்லாம் கத்துக்கலியா?’

நாங்கள் இருவருமே சிரித்தோம். வினோத் இல்லை என்று சொன்னான். ‘பக்தி யோகம் ஒண்ணுதான் எனக்குத் தெரிஞ்சது. மோட்சத்துக்கு கிருஷ்ண ஜபம் ஒண்ணுதான் வழி’.

‘அடக் கட்டைல போறவனே? இத கல்யாணம் பண்ணிண்டு ஆத்துல உக்காந்துண்டே பண்ணியிருக்கலாமேடா!’

வினோத் பதில் சொல்லவில்லை. சிரித்தான்.

பேசியபடியே நாங்கள் வீட்டைச் சென்றடைந்தோம். படிக்கட்டு சிறிது உடைந்திருந்தது. இரவு நாங்கள் உறங்கச் சென்ற பின்பு, அப்பாவும் அம்மாவும் தினந்தோறும் சிறிது நேரம் அங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்துகொள்வதற்காக, சத்தமில்லாமல் நான் பலநாள் முற்றத்தைக் கடந்து தாழ்வாரத்தில் வந்து நின்றுகொண்டு பார்ப்பேன். என்றுமே அவர்கள் பேசியது எனக்குக் காதில் விழுந்ததில்லை. சிறகை அசைக்காமல் நடு வானில் மிதக்கும் ஒரு கழுகினைப் போல அவர்கள் பேசும் சொற்களின் ஒலி இங்குமங்கும் நகராமல், இருவர் உதடுகளுக்கு இடையிலேயே மிதந்துகொண்டிருக்கும் என்று எண்ணிக்கொள்வேன்.

‘வாங்கோடா’ என்று மாமா உள்ளே போனார். நாங்கள் அவர் பின்னால் சென்றோம். பத்மா மாமியின் வீட்டைப் போலவே எங்கள் வீடும் மிகவும் பாழடைந்து போயிருந்தது.

‘கடைசியாக என் திருமண ஏற்பாட்டை ஒட்டி சிறிது செப்பனிட்டு சுண்ணாம்பு அடித்தது’ என்று வினோத் சொன்னான். ஆனால் சுவரில் சுண்ணாம்பு இல்லை. பல இடங்கள் காறை பெயர்ந்திருந்தது. உத்தரத்து மரக் கட்டைகளெல்லாம் உளுத்திருந்தன. எல்லா அறைக் கதவுகளும் இழுத்து மூடித் தாழிடப்பட்டிருந்தது. ‘வேறென்ன பண்றது? புழங்கற ஒரே ஆள் நாந்தான். எல்லாத்தையும் திறந்து வெச்சிண்டிருந்தா குப்பை சேரும். தினம் பெருக்கணும். யாரால முடியறது?’ என்று மாமா சொன்னார்.

நாங்கள் முற்றத்தில் நின்றிருந்தோம். இடப்பக்க அறையில் அம்மா இருப்பதாக மாமா சொன்னார். ‘ஆறுமாசம் முன்னாடிதான் ஒரு கட்டில் வாங்கிப் போட்டேன். அவ தரைல படுத்தான்னா எழுப்பி உக்கார வெக்க முடியறதில்லே. மூச்சு வாங்கிடறது’ என்று சொன்னார். அம்மா இருந்த அறைக்கதவும் மூடியே இருந்தது.

‘வாங்கோ’ என்று மாமா சொன்னார்.

‘ஒரு நிமிஷம் மாமா’ என்று சொல்லிவிட்டு, வினோத் வீட்டின் பின்புறம் சென்றான். கால்களைக் கழுவிக்கொண்டு வந்து முற்றத்தில் அம்மா இருக்கும் அறையை நோக்கிக் கண்மூடி அமர்ந்தான். மாமாவுக்கு இப்போது அழுகை வந்துவிட்டது.

‘நாலு பெத்தா. நாலும் ரிஷிகளாயிடுத்து. மகராசி என்ன புண்ணியம் பண்ணாளோ!’ என்று சொன்னார்.

நான் அடுக்களைக்குள் சென்று பார்த்தேன். சில பாத்திரங்கள் இருந்தன. ஒரு பழைய கேஸ் அடுப்பு இருந்தது. ஆனால் சிலிண்டர் இல்லை. ஒரு பம்ப் ஸ்டவ் இருந்தது. அதைத்தான் மாமா பயன்படுத்துவார் என்று நினைத்துக்கொண்டேன்.

‘தளிகையெல்லாம் நின்னு பலகாலம் ஆயிடுத்து’.

‘அப்பறம்?’

‘கோயில் பிரசாதம்தான்’.

‘காப்பி?’

‘உங்கப்பா போனதோட அக்கா அத நிறுத்திட்டா. நான் போட்டு சாப்டப் பிடிக்காம விட்டுட்டேன். வென்னீர் வெக்கறது மட்டும்தான் தளிகை’.

நான் அமைதியாக வெளியே வந்தேன்.

‘ஆனா ஆறலேடா விமல். நன்னா படிச்சிட்டு நீங்க நாலு பேரும் ஃபாரின்ல போய் செட்டில் ஆயிருந்தேள்னாக்கூட இவ்ளோ துக்கம் இருந்திருக்காது’.

‘சன்யாசம் அவ்ளோ பெரிய தப்புன்னு நினைக்கறேளா?’

‘பெருமாளே! தப்புன்னு சொல்லுவேனா! தாங்க முடியலேன்னுதான் சொன்னேன்’.

‘அது ஏற்கெனவே தீர்மானம் பண்ணது மாமா’.

‘யாரோட தீர்மானம்?’

‘அது தெரியலே. கடவுளா இருக்கலாம். இயற்கையா இருக்கலாம். விதியா இருக்கலாம். அண்ணா ஒரு சுவடி வெச்சிருந்தானே, அதுலயே அது எழுதியிருக்கு’.

மாமா சிறிது கண்ணை இடுக்கி யோசித்தார். ‘எது, அந்த வைத்தியச் சுவடியா?’

நான் சிரித்தேன். ‘ஆமா. அதுதான்’.

‘அதுல என்ன எழுதியிருக்கு?’

‘அது இருக்கா இப்போ?’ என்று கேட்டேன்.

‘இருக்கும். பெருமாள் அலமாரியிலே குருவாயூரப்பன் படத்துக்குப் பின்னாடி உங்கம்மா போட்டு வெச்சா. அப்பறம் யாரு அத எடுத்தா?’

‘சரி நான் இப்போ எடுக்கறேன்’ என்று சொல்லிவிட்டு அலமாரியை நோக்கிச் சென்றேன். முற்றிலும் அழுக்கு படிந்து எண்ணெய்ப் பிசுக்கு பரவி, கரி படர்ந்து, உலர்ந்து உதிர்ந்த சில பூக்களோடு தெய்வங்கள் அங்கு வீற்றிருந்தார்கள்.

‘நான் பெருமாளுக்குப் பண்றதெல்லாம் நிறுத்தியாச்சு’ என்று மாமா சொன்னார். தெரிந்தது. நான் பதில் சொல்லாமல் குருவாயூரப்பன் படத்தை நகர்த்தி, பின்பக்கம் கைவிட்டுத் துழாவினேன்.

அது அங்குதான் இருந்தது. இன்னும் பழையதாகியிருந்தது தவிர வேறு மாற்றமில்லை. அதை முற்றத்துக்கு எடுத்துவந்து வெளிச்சத்தில் பார்த்தேன்.

‘இதைத்தான் வைத்திய வரி என்னமோன்னு அந்த வைத்தீஸ்வரன் கோயில்காரர் சொல்லிட்டாரே?’

‘ஆமா. வைத்திய வரிகள்தான். ஒருவேளை அண்ணா வந்தா, வைத்தீஸ்வரன் கோயில்காரருக்குத் தட்டுப்படாத சங்கதி இதுல என்ன இருக்குன்னு எடுத்துக் காட்டுவான்’.

‘என்னமோ சொல்றே. எனக்கு ஒண்ணும் புரியலே’.

‘சிரமப்படாதிங்கோ மாமா. இனிமே இதெல்லாம் தெரிஞ்சிண்டுதான் என்ன ஆகப்போறது?’

‘ஒண்ணுமில்ல, இல்லே?’ மாமா சட்டென்று சிரித்தார். நான் அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன்.

‘ஒண்ணே ஒண்ணு கேக்கட்டுமாடா விமல்?’

‘தாராளமா’.

‘அக்கா போயிட்டான்னா நான் அதிக நாள் தங்கமாட்டேன். ஒரு நப்பாசை. எனக்குக் கொள்ளிபோடறதுக்கும் வருவேளான்னு..’

நான் அமைதியாக நின்றிருந்தேன். அவரே பிறகு சொன்னார், ‘எப்படி வருவேள்? உங்கப்பா போனதுக்கே வரலியே?’

‘சன்யாசிக்கு அம்மா மட்டும்தான் மாமா உறவு’ என்று சொன்னேன்.

வினோத் தனது பிரார்த்தனையை முடித்துவிட்டுக் கண்ணைத் திறந்தான். எழுந்துகொண்டான்.

‘முடிஞ்சிடுத்தா?’ என்று மாமா கேட்டார்.

‘கதவைத் திறங்கோ. அம்மாவைப் பார்க்கலாம்’ என்று சொன்னான்.

மாமா அந்த அறைக்கதவைத் திறந்தார். அம்மா ஒரு ரோமம் போல உதிர்ந்து கிடந்தாள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com