131. பூர்ணாஹுதி

ஒரு மொட்டு மலரும் கணத்துக்காகக் காத்திருந்தேன். அது மலரத்தான் செய்தது. ஆனால் மலர்ந்ததைத்தான் கண்டேனே தவிர, மலரும் செயலை அவதானிக்க இயலவில்லை.

அற்புதங்கள் அதனதன் இயல்பில், தோற்றத்தில், விதிப்பில், வார்ப்பில் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒரு சூரியன் உதிப்பதைக் காட்டிலும், ஒரு பெருமழையைக் காட்டிலும் அற்புதமென்று இன்னொன்று இருந்துவிட இயலாது. ஆனால் மனித மனத்தின் விசித்திர மூலைகளை இந்த அற்புதங்களின் பக்கம் நாம் திருப்பி வைப்பதேயில்லை. ஒரு விடியலை நின்று அனுபவிப்பவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? நான் ஒரு சமயம் இரவெல்லாம் ஒரு பூச்செடியின் அருகே நாற்காலி போட்டு அமர்ந்து, ஒரு மொட்டு மலரும் கணத்துக்காகக் காத்திருந்தேன். அது மலரத்தான் செய்தது. ஆனால் மலர்ந்ததைத்தான் கண்டேனே தவிர, மலரும் செயலை அவதானிக்க இயலவில்லை. என் கண்ணெதிரேயேதான் அது மெல்ல மெல்ல விரிந்து முழு மலராகியிருக்க வேண்டும். ஆனாலும் எனக்கு அது தட்டுப்படவில்லை. குவிந்த வடிவத்தைக் கண்டேன். முழுதும் விரிந்த இதழ்களைப் பார்த்தேன். இடையில் நிகழ்ந்த அற்புதம் எனக்கானதல்ல என்று இயற்கை சொல்லாமல் சொல்லிவிட்டுப் போனது. நான் அதைத் தலை வணங்கி ஏற்றுக்கொண்டேன். காம்புக்கும் காற்றுக்குமான கலவியின் குழந்தையென அந்தப் பூவைத் தொட்டு முத்தமிட்டு எழுந்து சென்றேன்.

சட்டென்று அந்தச் சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது. என்னை மீறிப் புன்னகை செய்தேன். பதிலுக்கு அந்த நாய் சிரித்ததா என்று எனக்குத் தெரியவில்லை. அது மீண்டும் கேட்டது, ‘அவன் வந்துவிட்டானா?’

நான் சற்றும் பதறாமல், சிறிதளவு அதிசய உணர்வையும் வெளிக்காட்டாமல் பதில் சொன்னேன், ‘அதை நீங்கள் என்னைக் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா?’

‘ஆம். இந்த வடிவில் எனது சில சக்திகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன’.

‘அப்படியானால் சரி. அண்ணா இதுவரை எங்கள் கண்ணில் படவில்லை. எப்படியும் வருவான் என்று நினைக்கிறேன்’.

‘நல்லது. நீ சுகமாக இருக்கிறாயா?’

‘நிச்சயமாக ஐயா. எனது சுதந்திரமே என் சுகம். அது குறைபட நான் அனுமதிப்பதில்லை’.

‘சரி நீ போகலாம்’ என்று அது விடைகொடுத்தது.

சிறிது தூரம் சென்றதும் நான் அந்த நாயைத் திரும்பிப் பார்த்தேன். அது அங்கேயேதான் நின்றுகொண்டிருந்தது. ஆனால் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தது. சட்டென்று அந்தக் கணத்தில் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. அது சம்சுதீன் பக்கிரியாகத்தான் இருக்கும் என்று ஏன் நினைத்தேன்? அது ஏன் சொரிமுத்துவாகவோ வேறு யாராவதாகவோ இருக்கக் கூடாது? தர்காவின் அருகே கண்டதால் அது சம்சுதீனாகத்தான் இருக்க வேண்டும் என்று இயல்பாகவே தோன்றிவிட்டது. கேட்டுத் தெளிவு படுத்திக்கொண்டுவிடலாம் என்று எண்ணினேன். என் சகோதரர்களிடம் இந்தச் சம்பவத்தைச் சொல்லும்போது இன்னும் சரியான தகவலுடன் சொல்ல முடியும்.

நான் மீண்டும் அந்த நாயை நெருங்கினேன். அது என்னைத் திரும்பிப் பார்த்தது.

‘ஐயா, நீங்கள் இந்த தர்கா வாசலில் இருந்த சம்சுதீன்தானே?’ என்று கேட்டேன். நாய் பதில் சொல்லவில்லை. மீண்டும் வேறெங்கோ பார்த்தது.

‘நீங்கள் பேசியதில் நான் வியப்படையவில்லை. வாழ்வில் நிறைய சித்தர்களைப் பார்க்க நேரிட்டுவிட்டதால், எனக்கு இத்தகைய அதிசயங்கள் வியப்பளிப்பதில்லை. இவை அதிசயம் என்றும் தோன்றுவதில்லை. ஒரு சிறு சந்தேக நிவர்த்திக்காகவே கேட்கிறேன். ஒருவேளை நீங்கள் சொரிமுத்துவாக இருந்தால் உங்களைக் கட்டித் தழுவி ஒரு முத்தமிட்டுவிட்டுப் போய்விடுவேன்’ என்று சொன்னேன்.

காதிலேயே விழாததுபோல அந்த நாய் நகர்ந்து போனது. சட்டென எனக்கு வேறொரு சந்தேகம் வந்துவிட்டது. ஒருவேளை என்னுடன் பேசிய நாய் எங்கோ சென்று, வேறொரு நாய் வந்திருக்கிறதோ? இருளில் அதன் நிறத்தை நான் சரியாகக் கவனித்திருக்கவில்லை. கண்களை மட்டும்தான் பார்த்தேன். இருளில் சுடரும் எல்லா நாய்களின் கண்களைப்போலத்தான் அவையும் இருந்தன. சற்றும் எதிர்பாராத விதமாக முன்னொரு காலத்தில் அண்ணாவைத் தேடி நான் தென்காசிக்குச் சென்றபோது, எனக்கு முன்னால் வழி காட்டிக்கொண்டு போன நாயின் நினைவு வந்தது. நாய் நடந்தது. நானும் நடந்தேன். ஆனால் அண்ணாவைப் பார்க்க முடியவில்லை. இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு நாய். மீண்டும் நான். மீண்டும் அண்ணா. ஒரே வித்தியாசம், நான் கேட்டிருக்க வேண்டியதை அந்த நாய் என்னிடம் முந்திக்கொண்டு கேட்டுவிட்டது.

சரி பரவாயில்லை. ‘நான் போய் வருகிறேன் ஐயா’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். இன்னொரு அற்புதம் நிகழும் சாத்தியம் ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அம்மாவைக் கடைத்தேற்றிவிட்டுப் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

என் சகோதரர்கள் படுத்திருந்த இடத்துக்கு நான் வந்து சேர்ந்தபோது வினோத் எழுந்து அமர்ந்திருந்ததைக் கண்டேன். வினய் மட்டும் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் வினோத் சிரித்தான். ‘எங்கே போனாய்?’ என்று கேட்டான்.

‘சும்மா தர்கா வரை போயிருந்தேன். தூக்கம் வரவில்லை’.

‘என்னாலும் சரியாக உறங்க முடியவில்லை விமல்’.

‘ஆனால் நான் கிளம்பிச் சென்றபோது நீங்கள் இருவருமே அடித்துப் போட்டாற்போலத்தான் கிடந்தீர்கள்’.

‘ஆம். கால் வலி எனக்கு. சிறிது தூங்கினேன். ஆனால் விழிப்பு வந்துவிட்டது’.

‘அது பரவாயில்லை விடு. ஒரு நல்ல கதை சொல்கிறேன், கேட்கிறாயா?’ என்று சிரித்தபடி கேட்டுவிட்டு, தர்காவின் அருகில் நிகழ்ந்த சம்பவத்தைச் சொன்னேன். வினோத் அதிர்ச்சியில் பேச்சற்றுப் போய்விட்டான். உண்மையாகவா உண்மையாகவா என்று திரும்பத் திரும்பக் கேட்டான்.

‘நான் பொய் சொல்வதில்லை வினோத். அது ஒரு முதலையைப் புணர்வது போன்றது. நினைவில் மிகவும் வலித்துக்கொண்டே இருக்கும்’.

‘இல்லை. நீ இதை மிகவும் சாதாரண தொனியில் சொல்கிறாய். உண்மையில் உனக்கு நடந்தது மிகவும் அசாதாரணமானது’.

‘இதில் என்ன அசாதாரணம்? சம்சுதீனோ, சொரிமுத்துவோ நாயாகவும் நரியாகவும், ஏன் நாமாகவும்கூட மாறக்கூடியவர்களே அல்லவா? அல்லது ஒரு நாயின் உடலுக்குள் போய் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவதும் ஒன்றும் அவர்களுக்குப் பெரிய விஷயமல்ல’.

‘இருந்தாலும்..’

‘மன்னித்துவிடு வினோத். என்னால் வியக்க முடியவில்லை’.

‘இல்லை. நான் அவரைப் பார்க்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டுச் சட்டென்று எழுந்தான்.

நான் சிரித்தேன்.

‘ஏன் சிரிக்கிறாய்?’

‘அவர் உன்னைச் சந்திக்க விரும்பவேண்டுமல்லவா? இல்லாவிட்டால் நீ போய் வீணாகத் திரும்பவேண்டி இருக்கும்’.

‘ஆம்’ என்று மீண்டும் அமர்ந்தான்.

‘நானே இரண்டாம் முறை பேச்சுக் கொடுத்தபோது அவர் பதில் சொல்லவில்லை. அல்லது அவர் அந்த நாயில் இருந்து வெளியேறிவிட்டார்’.

வினோத் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தான். திடீரென்று, ‘அவனது வருகை அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது அல்லவா?’ என்று கேட்டான்.

‘இதிலென்ன சந்தேகம். மூத்தவன். கொள்ளி வைக்க வேண்டியவன். வரத்தான் வேண்டுமல்லவா?’

‘வேறு எதுவும் காரணம் இருக்காது என்கிறாயா?’

‘என்னவாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நாம் நமது அனுமதியின்றி பிராமண குலத்தில் பிறந்தவர்கள். எனவே குல வழக்கப்படி, கடைசிப் பையனாக நான் சில சடங்குகள் செய்யவேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன். அதுவும் அம்மா என்பதால்’.

‘எனக்கு அதுவும் இல்லை’.

‘ஆம். நீ கொடுத்து வைத்தவன். வெறும் பார்வையாளன். தொந்தரவின்றி ஒரு மரணத்தை நெருக்கமாக அமர்ந்து நீ கவனிக்கலாம். யாரும் உன்னைத் தொந்தரவு செய்யமாட்டார்கள்’.

அவன் சட்டென்று கேட்டான், ‘ஒருவேளை நான் அழுவேனோ?’

‘ஒரு தவறும் இல்லை. அழுகை வரும்போது உன் கிருஷ்ணனை நினைத்துக்கொண்டுவிடு. அதற்குக்கூட உதவாமல் அவன் எதற்கு தண்டத்துக்கு?’

‘நீ மிகவும் வறண்டுவிட்டாய் என்று நினைக்கிறேன்’.

‘அப்படியா தோன்றுகிறது? மரணம் தவிர்க்க முடியாதது வினோத். மரணத்துக்கான கண்ணீர் என்பது உறவுக்கான ரசீது மட்டுமே. அறுத்துக்கொண்டு போனவனிடம் ரசீது எப்படி இருக்கும்?’

வினோத் வெடித்து அழத் தொடங்கினான், ‘நான் தோற்றுவிட்டேன் விமல். என்னால் எதையுமே அறுக்க முடியவில்லை. மனத்துக்குள் நான் இன்னும் வீட்டுக்குள்ளேயேதான் இருக்கிறேன். என்னை அங்கிருந்து வெளியேற்றச் சொல்லி இன்றுவரை கிருஷ்ணனிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறேன். அவன் அதைச் செய்வதில்லை’.

நான் அவனை அன்புடன் அரவணைத்துக்கொண்டேன். சிறிது நேரம் அவன் கரங்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு சொன்னேன், ‘பக்தி மனத்தின் பிரச்னையே இதுதான். ஒன்றைப் பற்றிக்கொண்டால் விடவே விடாது’.

‘நான் போயிருக்கவே கூடாதோ?’

‘அதை நீ எப்படி தீர்மானிப்பாய்? உன் விதி உன்னை வீட்டை விட்டு வெளியேற்றியது. நீ அதற்கு அடிபணிந்துதான் தீர வேண்டும்’.

‘நாத்திகனான நீ விதியைக் குறித்துப் பேசுவது விநோதமாக இருக்கிறது’.

‘நான் நாத்திகன் என்று யார் சொன்னது?’

‘நீதானே சொன்னாய்?’

‘இல்லை. நீ தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாய். எனக்குக் கடவுள்தான் கிடையாதே தவிர, நான் ஒரு நல்ல ஆன்மிகவாதி’.

அவனுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தான். ‘உன் விதி உன்னை சன்னியாசியாக்கியது. உன் குற்ற உணர்வு உன் பார்வையில் இருந்து கிருஷ்ணனை மறைத்து வைத்தது. வினய்யின் கஞ்சாவுக்கும் உனது கிருஷ்ண ஜபத்துக்கும் வித்தியாசமில்லை. இரண்டுமே கடந்த காலம் மறப்பதற்கு உதவும் வெறும் கருவிகள்’ என்று சொன்னேன்.

அவனால் அதைத் தாங்கிக்கொள்ளவோ, ஏற்கவோ இயலவில்லை. மறுக்க நினைத்தாலும் அது முடியாமல் மேலும் குமுறி அழுதான். அவன் அழுது ஓயும்வரை காத்திருந்தேன். பிறகு சொன்னேன், ‘அம்மாவின் மரணம் உனக்கொரு வெறுமையின் உலகை தரிசனமாகத் தரும். அந்த வெறுமைக்குள் நீ கிருஷ்ணனைக் காண்பாய். கிருஷ்ணனே உனக்கு வெறுமையின் ரூபமாக நிற்பான். கிருஷ்ணனும் வெறுமைதான் என்பது புரியும்போது நீ ஒரு பூரண சன்னியாசி ஆகிவிடுவாய்!’

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com