126. களையும் கலை

கிருஷ்ணன் சந்தோஷங்களின் கடவுள். எளிய இச்சைகளின் மீது நிகழ்வதே அவனது காளிங்க நடனம். இச்சைகளை ஒழிக்க நினைப்பது கிருஷ்ண விரோதம். இச்சைகளைக் கடப்பதே அவனது தரிசனத்துக்கு வழி செய்யும்.

பேருந்து எல்.ஐ.சி.யைத் தாண்டும்வரை யாரும் எதுவும் பேசவில்லை. எனக்கு லேசாகத் தூக்கம் வந்து கண்ணை மூடத் தொடங்கியபோது, ‘விமல், உனக்கு என்றைக்காவது குற்ற உணர்வு போல ஏதேனும் தோன்றியிருக்கிறதா?’ என்று வினோத் கேட்டான். எனக்கு எதற்குக் குற்ற உணர்வு ஏற்பட வேண்டும்? இந்த உலகில் பாவமே செய்யாத ஒரு பிறப்பு உண்டென்றால் அது நான்தான். என் சுதந்திரத்தின் பூரணத்துவத்தில் திளைப்பது எப்படி ஒரு குற்றமாகும்?

‘இல்லை. நீ சன்னியாசம் என்னும் புனிதமான தருமத்தை உன் வாயிற்கதவுத் தாழ்ப்பாளாக வைத்துக்கொண்டு உள்ளுக்குள் ஒரு சராசரியாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறாய் என்று தோன்றுகிறது’.

நான் புன்னகை செய்தேன். ‘நான் எதையும் துறந்ததாக என்றுமே சொன்னதில்லையே?’

‘பிறகு எதற்கு உனக்கு தீட்சையும் காவியும்?’

‘நல்ல கதையாக இருக்கிறதே. தீட்சை, நான் பயின்று எழுதிய தேர்வுக்கான சான்றிதழ். காவி எனக்குப் பிடித்த நிறம். ஒரு கோட் சூட் உடையைக் காட்டிலும் இது தருகிற சௌகரியங்களும் மரியாதையும் அதிகம்’.

‘எனக்கு இது சரியாகப் படவில்லை’.

‘அதனால் என்ன? நீ என் சகோதரன். நீ சொல்வதற்கெல்லாம் நான் வருத்தப்பட மாட்டேன்’.

அதன்பின் வினோத் நெடுநேரம் அமைதியாகவே இருந்தான். மீண்டும் திடீரென்று, ‘காமம் துறப்பதை நீ முக்கியமென்று நினைத்ததே இல்லையா?’

‘ஐயோ, இயற்கையை நான் எவ்வாறு நிராகரிப்பேன்? என்னால் என் சிறுநீரைத் துறக்க முடியும்போது காமத்தையும் துறப்பேன் என்று நினைக்கிறேன்’.

‘ஹரே கிருஷ்ணா. நீ ஒரு தவறான மனிதரிடம் பயின்றிருக்கிறாய்’.

நான் சிரித்துவிட்டேன். ‘வினோத் என் குருநாதர் எதையும் சொல்லிக் கொடுத்ததில்லை. நானும் அவரிடம் இருந்து எதையும் கற்கவில்லை. மாறாக நாங்கள் எங்கள் மனங்களின் இண்டு இடுக்குகள் வரை திறந்துவைத்து அடுத்தவர் நுழைந்து மீள அனுமதித்துக்கொண்டோம். அதுதான் என் படிப்பு. அதில் பெற்றதுதான் என் ஞானம்’.

‘தெய்வமும் ஒழுக்கமும் அற்ற ஒரு துறவை என்னால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை’ என்று வினோத் சொன்னான்.

‘ஒழுக்கம் என்பதே அடுத்தவர் அபிப்பிராயம்தானே? அதற்கொரு பெயர் கொடுத்தால் தெய்வமாகிவிடுகிறது. எனக்கு அடுத்தவர் அபிப்பிராயம் முக்கியமாக இல்லை என்பதால் தெய்வமும் என்னிடத்தில் முக்கியத்துவம் இழந்துவிடுகிறது’.

‘நீ உன்னிடம் வரும் பெண்களைத் தவறாகப் பயன்படுத்துகிறாய் அல்லவா?’

‘யார் சொன்னது?’

‘எங்களுடைய பெங்களூர் கிளையில் அப்படியொரு பேச்சு ஒரு சமயம் எழுந்தது’.

‘கிருஷ்ண பக்தர்கள் பேசுவதற்கு வேறு சங்கதியே இல்லையா?’

‘இல்லை. நீ அம்மாநிலத்தில் இருப்பவன். உனது புகழ் அம்மாநிலம் முழுதும் பரவியிருப்பது. உன்னைப் பற்றிய உரையாடல்கள் இயல்பானவை’.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்தேன். உண்மையில் நான் எந்தப் பெண்ணையும் என்னிடத்தில் அழைத்ததில்லை. விரும்பி வருகிற யாரையும் நிராகரித்ததும் இல்லை. ஒரு சமயம், எனது கூட்டத்துக்கு வந்திருந்த பெண்களுள் வெண் குஷ்டம் பாதித்த பெண்ணொருத்தி வந்திருந்தாள். அவளை நான் அதற்குமுன் சந்தித்ததில்லை. ஊருக்குப் புதியவள் என்று நினைத்தேன். பிறகு ஏற்கெனவே எனக்கு அறிமுகமான இன்னொரு பெண்தான் அவளை அழைத்து வந்திருக்கிறாள் என்று தெரிந்தது.

‘குருஜி, இவள் என் தோழி. மூன்று வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராமலே இருந்தவளை வலுக்கட்டாயமாக உங்களிடம் இழுத்து வந்தேன்’ என்று சொன்னாள்.

‘மூன்று வருடங்கள்! எத்தனைக் கொடிய சிறைத்தண்டனை! ஏன் அப்படி இருந்தாய்?’ என்று அவளிடம் கேட்டேன்.

‘என் நோய் என்னை வெளியே போகவிடாமல் செய்துவிட்டது’ என்று அவள் சொன்னாள்.

எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அன்றைய சொற்பொழிவு முடிந்ததும் நான் அந்தப் பெண்ணை என் அறைக்கு வரச் சொன்னேன். அவள் பேரழகி இல்லை. ஆனால் எளிதில் பிடிபடாததொரு லட்சணம் அவள் முகத்தில் இருந்தது. துரதிருஷ்டவசமாக அவளது நடு மூக்கு மட்டும் வெளுத்து, கன்னங்கள், நெற்றியெல்லாம் இயல்பான நிறத்தில் இருந்தன. காது மடல்கள் வெளுத்திருந்தன. கழுத்து, கைகள் வெளுத்திருந்தன. பின் கழுத்து வெளுத்திருந்தது. வெண் திட்டுகளின் இடையே பழுப்பு நிறத்தில் புள்ளிகள் நிறைய உண்டாகியிருந்தன.

அவள் என்னைக் கண்டதும் விம்மி விம்மி அழுதாள். ஏனோ அழத் தோன்றுகிறது என்று இடையிடையே சொல்லிக்கொண்டே அழுதாள். அதனால் பரவாயில்லை; அழு என்று நானும் அமைதியாக இருந்தேன். அவள் அழுது முடித்துவிட்டு, ‘என் வீட்டில் எனக்குத் திருமணத்துக்குப் பார்க்கத் தொடங்கிய நேரம் எனக்கு இப்படியாகிவிட்டது. இதன்பின்பு எனக்குத் திருமணம் நடக்க வாய்ப்பே இல்லை என்று என் பெற்றோர் முயற்சியைக் கைவிட்டுவிட்டார்கள்’ என்று சொன்னாள்.

‘தொல்லை விட்டது என்று எண்ணிக்கொள். திருமணம் ஒரு மகிழ்ச்சியல்ல’.

‘ஆனால் குருஜி, நானும் ஓர் உயிரினம் அல்லவா? இயல்பான உணர்ச்சிகள் எனக்கும் உண்டல்லவா? என்னை நெருங்கி முத்தமிடும் ஒரு ஆண் மகனுக்காக என் வாழ்நாள் முழுதையும் நான் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறேன்’.

‘வாழ்நாள் முழுதும்?’

‘ஆம். வாழ்நாள் முழுதும்’.

பிறகு அவள் என் ஆசிரமத்தின் நிர்வாகப் பணிகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பைத் தானே எடுத்துக்கொண்டுவிட்டாள்.

‘நீ அவளை முத்தமிட்டாயா?’ என்று வினய் கேட்டான்.

‘ஆம். ஓரிரவு முழுவதும் அவளது தேகத்தின் ஒவ்வொரு அணுத்துகளிலும் படுவதுபோல முத்தமிட்டுக்கொண்டே இருந்தேன். விடியும்வரை முத்தமிட்டேன். விடிந்தபின் நாங்கள் கலவி கொண்டோம். அன்று பகல் முழுதும் அவள் நிம்மதியாகத் தூங்கினாள். நான் அவளுக்குக் கால் அமுக்கிவிட்டுக்கொண்டிருந்தேன்’.

இதைச் சொன்னதும் வினோத் சற்று நகர்ந்து அமர்ந்துகொண்டான். எனக்குச் சிரிப்பு வந்தது.

‘நீ ஒரு காமாந்தகன்’ என்று வினய் சொன்னான்.

‘இல்லை வினய். அந்தகம் என்பது தவறான சொல். காமம் அழிவல்ல. காமத்தால் ஆக்கத்தான் முடியுமே தவிர அழிக்க இயலாது. தவிர காமம் மட்டுமே என் நோக்கமும் அல்ல. உனக்குத் தெரியுமா? பதினேழு வருடங்கள் நான் காமம் துறந்து வாழ்ந்திருக்கிறேன்’.

‘மனத்தாலும் எண்ணாமல்?’

‘ஆம். நான் துறந்திருக்கிறேன் என்ற நினைவையே அழித்துவிட்டு வாழ்ந்தேன். எனக்கு எதுவுமே வேண்டுமென்றால் வேண்டும். வேண்டாமெனில் வேண்டாம்’.

‘வினய், நீ அவனோடு சேராதே. அவன் சொல்கிற எதையும் கேட்காதே. அவன் வழி நமக்குச் சரிப்படாது’ என்று வினோத் சொன்னான்.

‘டேய், இவன் வழியே உனக்குச் சரிப்படாதே?’ என்று நான் சிரித்துக்கொண்டே கேட்டேன்.

‘ஆம். ஆனால் வினய்யை சரி செய்துவிட முடியும். அவனது சிக்கல்கள் எளியவை. பேரானந்தக் கடலின் ஒரு துளி அவன் உச்சந்தலையில் விழுந்தால் போதும்’.

‘உனக்கு விழுந்திருக்கிறதா?’ என்று கேட்டேன்.

வினோத் அதிர்ச்சியடைந்துவிட்டான். சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘கிருஷ்ண ஜபம் ஒன்றே என் ஆனந்தம்’ என்று சொன்னான்.

எத்தனை எளிய வாழ்க்கை! ஜபங்கள். நாம சங்கீர்த்தனங்கள். பண்டிகைகள், திருவிழாக்கள், தேரோட்டம். ஆனால் சகோதரா, என் கேள்வி இதுவல்ல. இவை எதுவுமல்ல. உன் கிருஷ்ணனை நீ பார்த்தாயா? ஏனெனில், என் கடவுளான என் சுதந்திரத்தை நான் ஒவ்வொரு கணமும் தரிசித்துக்கொண்டிருக்கிறேன். அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். இதைத்தான் என் துறவு எனக்கு சாத்தியமாக்கியது. அந்த வகையில் உன் துறவு உனக்கு மூன்று வேளை சாதம்தான் இப்போதுவரை போட்டுக்கொண்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வாயா?

நான் கேட்கவில்லை. சிரித்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டேன். அவன் வினய்க்கு எப்படியாவது மீட்சி கொடுத்துவிட வேண்டும் என்று தீவிரமாக எண்ணிக்கொண்டிருந்தான். ஒரு லட்சத்து எட்டு கிருஷ்ண ஜபத்தின் இறுதியில், வினய்யும் ஒரு கிருஷ்ண பக்தனாகிவிடுவான் என்று தீவிரமாக நம்பிக்கொண்டிருந்தான். வாழ்வில் எவ்வளவோ முயற்சிகளைச் செய்து பார்த்துவிட்டுத் தோற்றதாக முடிவுக்கு வந்திருந்த வினய், இன்னொரு முயற்சியாகக் கிருஷ்ணனைக் கூப்பிட்டுப் பார்க்க முடிவு செய்திருந்ததையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இவர்கள் இருவரும் சந்தித்திருக்கவே கூடாது என்று சொல்ல நினைத்தேன். குறைந்தபட்சம் வினய் தனது கதையையாவது அவனுக்குச் சொல்லாதிருந்திருக்கலாம்.

‘ஏன்?’ என்று வினய் கேட்டான்.

‘ஐம்பது வயது தாண்டிய அண்ணன் தம்பிகள் அடித்துக்கொண்டு செத்தால் நன்றாக இராதல்லவா? அதனால் சொன்னேன். தவிர இரண்டு சன்னியாசிகள் வெட்டிக்கொண்டு இறந்தால் இந்த உலகம் அதைத் தாங்காது’.

‘நீ பேசாதே’ என்று வினோத் சொன்னான். சிரித்தேன். பிறகு அவனே என்ன நினைத்தானோ, ‘காமம் களைவது ஒரு கலை’ என்று சொன்னான்.

‘ஆம். சந்தேகமில்லை. ஆனால் காமத்தினும் உயர்ந்ததாக அதைச் சொல்ல முடியாது’.

‘அப்படியா நினைக்கிறாய்?’

‘உன்னை ஒன்று கேட்கிறேன். ராதை உடனில்லாத ஒரு கிருஷ்ணனை உன்னால் எண்ணிப் பார்க்க இயலுமா?’

‘சேச்சே. அது வெறும் தத்துவம்’.

‘தத்துவத்துக்கே ஒரு பெண் வடிவம் வேண்டியிருக்கிறது வினோத். வாழ்க்கைக்கு இல்லாமல் எப்படி? ஒன்று கேட்கிறேன். இத்தனை ஆண்டுகள் நீ ஒரு பெண்ணைத் தொடாதிருந்திருக்கலாம். ஆனால் நினைக்காதிருந்திருப்பாயா?’

அவன் என்னை உற்றுப் பார்த்தான். பிறகு தலை குனிந்து, ‘ஆம். அது முடிந்ததில்லை. என் கட்டுப்பாட்டை மீறி எப்போதாவது நினைத்துவிடுகிறேன்’.

‘அதைத்தான் சொல்கிறேன். முகத்தை மட்டும் நினைத்தால் நீ பரமஹம்சராகிவிட முடியும். ஆனால் முலையைத்தான் உன்னால் நினைக்க முடியும்’.

‘இல்லை. இல்லை. நிச்சயமாக இல்லை’ என்று அவன் அலறினான்.

‘என்ன இல்லை? நீ முலையை நினைத்ததே இல்லையா?’

‘அப்படிச் சொல்லமாட்டேன். ஆனால் அது மட்டுமே அல்ல. பல வருடங்களுக்கு முன்னர், நான் பக்குவமடையாமல் இருந்த காலத்தில் அதெல்லாம் உண்டு. இப்போது இல்லை’.

நான் அவன் கரங்களை அன்போடு பற்றிக்கொண்டேன். ‘வினோத்! கிருஷ்ணன் சந்தோஷங்களின் கடவுள். எளிய இச்சைகளின் மீது நிகழ்வதே அவனது காளிங்க நடனம். இச்சைகளை ஒழிக்க நினைப்பது கிருஷ்ண விரோதம். இச்சைகளைக் கடப்பதே அவனது தரிசனத்துக்கு வழி செய்யும்’.

‘புரியவில்லை’.

‘ஒழித்துவிட்ட ஒன்றை எப்படிக் கடக்க முடியும்? இருந்தால்தான் நுழைந்து வெளியேற முடியும்’ என்று நான் சொன்னதும், வினய் பாய்ந்து என்னைக் கட்டியணைத்துக்கொண்டு, ‘இதுதான். இதுதான் நான் முயற்சி செய்தது. இதில்தான் நான் தோற்றேன். இங்கேதான் நான் இறந்தேன்’ என்று சொன்னான். அவன் கண்கள் கலங்கிவிட்டிருந்தன.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com