123. விருந்தும் விசேடமும்

உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் காமம் பொதுவானது. அதைத் தவிர வேறெதுவும் பொதுவானதில்லை. பொதுவான ஒன்றை நிராகரிப்பது, அல்லது தவறாகக் கருதுவதை நான் எதிர்க்கிறேன்.

நாங்கள் பூக்கடை பேருந்து நிலையத்துக்குள்ளேயேதான் இருந்தோம். வீட்டுக்குக் கிளம்ப மனமே வரவில்லை. வீட்டுக்குப் போவதைப் பற்றியும் அங்கே யார் யாரைச் சந்திக்க வேண்டும் என்பதைக் குறித்தும் என்ன பேசலாம் அல்லது எதையெல்லாம் பேச வேண்டாம் என்பதைப் பற்றியும் எங்களுக்குள் பேசி முடிவு செய்துகொண்டு கிளம்பலாம் என்று வினய் சொல்லியிருந்தான். எனக்கு அதில் ஆட்சேபம் ஏதுமில்லை என்பதால் அமைதியாக இருந்தேன். ஆனால் சென்னை வரை வந்த பின்பும் வினோத்தான் வீட்டுக்குப் போவது பற்றி சஞ்சலம் கொண்டிருந்தான். ‘அவசியம் நான் வரத்தான் வேண்டுமா?’ என்று கேட்டான்.

‘இதென்ன முட்டாள்தனமான கேள்வி? நம் நால்வர் மனத்திலும் ஓர் எண்ணம் விழுந்திருக்கிறது. என்னவானாலும் அம்மாவின் இறுதிச் சடங்கில் நாம் கலந்துகொள்வது என்று தீர்மானம் செய்திருக்கிறோம். அதுவும் ஒன்றாக அல்ல. ஒரே காலகட்டத்தில் அல்ல. வேறு வேறு தருணங்களில் நம் நான்கு பேர் மனத்திலும் விழுந்த எண்ணம் அது. அதை எப்படி நிராகரிக்க முடியும்?’ என்று நான் கேட்டேன்.

‘அது மட்டுமல்ல வினோத். அம்மாவின் மரணம் குறித்த சூசகத்தை அண்ணா உன்னிடம்தான் தெரிவித்திருக்கிறான். என்ன பொருள் அதற்கு? நீ அங்கு இருந்தே தீர வேண்டும் என்று அவன் விரும்பியிருக்கிறான்’ என்று வினய் சொன்னான்.

‘வினய், திரும்பத் திரும்ப அவனைப் பெரிய ஆளாக முன்னிறுத்தப் பார்க்காதே. எனக்கு அவன் பேச்சை எடுத்தாலே எரிச்சல் வருகிறது’ என்று சொன்னேன்.

‘ஏன்?’

‘பரதேசி காஷ்மீரத்து மலை உச்சியில் போய் உட்கார்ந்துகொண்டு ஒரு பாகிஸ்தானி பெண்ணைப் புணர்ந்திருக்கிறான். என்ன பெரிய யோகி அவன்? வெறும் அயோக்கியன்’ என்று நான் சொன்னதும் வினோத் சட்டென்று என் கைகளை அழுத்திப் பிடித்தான். ‘வேண்டாம் விமல். அப்படிச் சொல்லாதே’.

‘ஏன்? என்ன தவறு?’

‘உனக்குச் சில அல்லது பல நம்பிக்கைகள் இல்லை. நம்பிக்கைகள் இல்லாமல் சிலவற்றினுள் நுழைந்து பார்க்க இயலாது’.

‘ஒரு பெண்ணுக்குள் நுழைவதற்கு நம்பிக்கைகள் தேவையில்லை. குறி போதும்’.

‘ஐயோ! எத்தனை வக்கிரமாகப் பேசுகிறாய்!’

‘இதோ பார், உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் காமம் பொதுவானது. அதைத் தவிர வேறெதுவும் பொதுவானதில்லை. பொதுவான ஒன்றை நிராகரிப்பது, அல்லது தவறாகக் கருதுவதை நான் எதிர்க்கிறேன்’.

‘டேய் நீ ஒரு துறவி அல்லவா!’

‘ஆம். அபத்தங்களை முற்றிலுமாகத் துறந்தவன் அல்லது துறக்க விரும்புகிறவன்’.

‘அவனை விட்டுவிடு வினோத். அவன் இந்த வழிக்குப் பொருந்தாதவன்’ என்று வினய் சொன்னான். ‘இதோ பார் விமல். மூலாதார சக்தி என்பது ஒன்றுதான். காமத்தில் அதைச் செலவழிக்கலாம். யோகத்தில் அதைச் சேமிக்கவும் செய்யலாம்’.

‘நீ என்ன செய்தாய்?’ என்று உடனே கேட்டேன்.

‘இடாகினியைப் புணர்ந்து இருளில் விழுந்தேன்’ என்று வினய் சொன்னான். சொல்லிவிட்டு சிறிது நேரம் அழுதான். வினோத் வாயடைத்துப் போனான். வினய்யின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் அவனுக்கு மிகுந்த அதிர்ச்சியளித்தன. இத்தனைக்கும், என்னிடம் சொன்னவற்றுள் பலவற்றை அவன் வினோத்துக்குச் சொல்லவில்லை. அம்மாவைக் கடைத்தேற்றிவிட்டு திபெத் அல்லது நேபாளத்துக்குப் போய்விடப் போவதாகவும், உயிர் இருக்கும்வரை அங்கே தவத்தில் அமரப் போவதாகவும் வினய் அவனிடம் சொன்னான். ‘என் தவப் பொருளாக நான் இறையைக் கொள்ளப் போவதில்லை. என்னையேதான் என் இலக்காக வைக்கப் போகிறேன். உயிர் போவதற்கு முன்னால் என்னைக் கண்டுகொள்ள முடிந்துவிட்டால் போதும்’ என்று அவன் சொன்னான்.

நான் சிரித்தேன். ‘உன்னைக் கண்டுகொள்வது மிகவும் எளிது வினய். நீ ஒரு குழந்தை. பொருந்தாத அப்பாவின் சட்டையை அணிந்துகொண்டு அப்பாவாகிவிட்டதாகக் கற்பனை செய்துகொள்பவன். உனக்கு வேண்டியதெல்லாம் ஒழுங்கான அளவில் தைக்கப்பட்ட ஒரு சட்டை மட்டுமே’.

‘அப்படியா நினைக்கிறாய்?’

‘ஆம். இப்போதும் சொல்கிறேன். நீ ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொண்டுவிடலாம். அல்லது ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து சிறிது காலம் அவளோடு வாழ்ந்துவிட்டு வா. உன் ஆயுட்காலத் தவம் தராதவற்றை அந்தச் சில ஆண்டுகள் உனக்குத் தந்துவிடும்’.

‘இல்லை. அது என்னால் முடியாது. எனக்குப் பெண் வேண்டாம்’ என்று உடனே சொன்னான்.

‘பேய்தான் வேண்டுமா?’ என்று கேட்டேன். சிரித்தான்.

வினோத் சொன்னான், ‘வினய், உன்னை நினைத்தால் எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. எனக்கென்னவோ நீ மீண்டும் அந்த திருவானைக்காவல் சித்தனைத் தேடிச் செல்வது நல்லது என்று தோன்றுகிறது’.

‘என்ன விளையாடுகிறாய்? இவனுக்கே ஐம்பத்து மூன்று வயதாகிறது இப்போது. அந்தச் சித்தனை எங்கே போய்த் தேடுவான்?’

வினோத் சிறிது நேரம் கண்மூடி அமர்ந்திருந்தான். பிறகு, ‘இல்லை. அந்தச் சித்தன் உயிருடன்தான் இருக்கிறான் என்று என் மனத்தில் படுகிறது’ என்று சொன்னான்.

எனக்கு அதை மறுக்கத் தோன்றவில்லை. மறுத்து மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது? ஆனால் என் அன்புள்ள சகோதரா, உனக்கு நேரக்கூடிய எந்த ஒரு நல்விளைவும் உன்னைத் தவிர இன்னொருவரால் நிகழ்வதல்ல என்பதை உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? திருவானைக்காவல் சித்தனுக்குக் கோவளத்துச் சித்தனுடன் தொடர்பு இருந்திருக்கிறது. அண்ணாவுக்கு அந்த இரண்டு பேருடனும் தொடர்பு இருந்திருக்கிறது. அவன் கங்கோத்ரியில் ஆள் வைத்திருக்கிறான். வாரணாசியில் ஆள் வைத்திருக்கிறான். திருவண்ணாமலையில் ஆள் வைத்திருக்கிறான். அத்தனை பேரும் ஒரே மாதிரி பேசுபவர்கள். அத்தனை பேரும் யோகிகள். அல்லது சித்தர்கள். ஒரு வலைப்பின்னலில் யார் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அதுதான் வழி என்றால் வழியில் தென்படும் யாரிடமும் போய்க் கையேந்தி நிற்கலாமே? ஆனால் கையேந்தியபோது ஆசீர்வதித்த யாரும் கடைத்தேற்றவில்லை. யாரால் முடிந்தது? எல்லோரும் கையை விரிக்கத்தான் செய்தார்கள்.

‘என்னைக் கேட்டால், இந்தக் கூட்டத்தைவிட உன் இடாகினி உத்தமி. அவள் உனக்கு நிறைய செய்திருக்கிறாள்’ என்று சொன்னேன்.

ரயிலில் வரும்போது வினய் எனக்கு இன்னொரு சம்பவத்தைச் சொன்னான். ஒரு சமயம் திடீரென்று அவனுக்கு ஒரு பெரிய மாடமாளிகையில் விருந்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவனது இடாகினிப் பேயால் கணப்பொழுதில் ஒரு மாளிகையை எழுப்பி, விருந்து சமைத்துப் பரிமாற முடியும்தான். ஆனாலும் நிஜமானதொரு விருந்தில் தான் மதிப்புக்குரிய விருந்தாளியாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று அவன் நினைத்தான். தன் விருப்பத்தை அவன் இடாகினியிடம் சொன்னபோது, ‘அதற்கென்ன? செய்யலாமே? நாம் டெல்லிக்குப் போகலாம்’ என்று அது சொன்னது.

‘டெல்லிக்கு எதற்கு?’

‘குடியரசு தினம் நெருங்குகிறது. ஜனாதிபதி ஒரு தேநீர் விருந்து தருவது இங்கே மரபு அல்லவா? உன்னை நான் அந்த விருந்தில் உட்காரவைக்கிறேன்’ என்று அது சொன்னது.

வினோத்துக்கு மிகுந்த வியப்பாகிவிட்டது. ‘உண்மையாகவா? உன்னால் அது முடியுமா?’

‘ஏன் முடியாது? நீ முதலில் டெல்லிக்குக் கிளம்பு’.

வினய் அப்போது போபால் நகரத்தில் தங்கியிருந்தான். ஒரு பெரிய நகைக்கடைக்காரரின் கடையில் திருடு போயிருந்தது. பல கோடி மதிப்பிலான நகைகள் களவாடப்பட்டிருந்த நிலையில், திருடியவனைப் பற்றிய எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று காவல் துறையினர் கைவிரித்துவிட்டார்கள். யாரோ சொல்லி, யார் மூலமாகவோ கேள்விப்பட்டு அந்த நகைக்கடைக்காரர் வினய்யை போபாலுக்கு வரவழைத்திருந்தார்.

நகரத்தில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தள்ளி இருந்த அவரது பங்களாவில் வினய் தங்கினான். வேளைக்கு நல்ல சாப்பாடு. நிம்மதியான உறக்கம். கூப்பிட்ட குரலுக்கு உதவிக்கு ஓடிவர ஒரு வேலையாள் என்று அவனை அந்த நகைக்கடை அதிபர் பலமாகத்தான் கவனித்துக்கொண்டிருந்தார். வினய் அவர் வீட்டில் தங்கி ஒன்பது நாள் ஒரு யாகம் வளர்த்தான். யாகத்தின் இறுதியில் அவனுக்கு அவரது கடையில் கொள்ளையடித்தவனைப் பற்றிய விவரம் கிடைத்தது. அவன் ஒரு செவிட்டுத் திருடன். மத்தியப் பிரதேசம் முழுவதும் பல இடங்களில் இம்மாதிரி கொள்ளையடித்துவிட்டு புவனேஸ்வருக்கு ஓடிப் போய்விடுவான். சம்பாதித்த அனைத்தையும் செலவிட்டுவிட்டு மீண்டும் திருட வருவது அவனது வழக்கம். பல ஆண்டுகளாகக் காவல் துறையால் நெருங்கவே முடியாமல் சாமர்த்தியமாக அவன் திருடிப் பிழைத்துக்கொண்டிருந்தான்.

வினய், யாகம் முடிவுறும் தருவாயில் யாக குண்டத்தில் இருந்து கொதிக்கக் கொதிக்க ஒரு பிடி சாம்பலை அப்படியே கையால் அள்ளினான். ‘சூட்டைப் பொறுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு, அந்தச் சாம்பலை அப்படியே அந்த நகைக்கடை முதலாளியின் இரு கண்களிலும் வைத்து அழுத்தினான். அந்த மனிதரும், அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த அவரது மனைவி மக்களும் ஐயோ என்று அலற, வினய் அவர்களை சமாதானப்படுத்தி அமைதியாக இருக்கச் சொன்னான். எரிச்சல் மெல்ல மெல்ல மறைந்து ஒருவாறாக அந்த மனிதர் சமநிலைக்கு வந்து கண்ணைத் திறந்தபோது, அவருக்கு அந்தத் திருடன் தென்பட்டான்.

‘அதோ.. அதோ.. நான் அவனைப் பார்க்கிறேன். அவன் என் கண்களுக்குத் தெரிகிறான். அவன் சாலையில் நடந்து போய்க்க்கொண்டிருக்கிறான்!’ என்று அவர் அலறினார்.

‘அமைதியாகக் கவனியுங்கள். அவன் முகத்தை உங்கள் மனத்தில் பதித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், இன்னொருவருக்கு அவன் தென்படமாட்டான். அவனை நீங்களேதான் பிடிக்க வேண்டும். அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள். இடத்தை கவனியுங்கள்’.

அந்த மனிதர் மேலும் உற்றுக் கவனித்தார். ‘அவன் இங்கேதான் இருக்கிறான். போபாலிலேயேதான் இருக்கிறான். இந்த இடம்கூட எனக்குப் பரிச்சயமான இடம்தான். நான் போயிருக்கிறேன். எனக்குத் தெரியும்’ என்று பரவசக் கூத்தாடி, துள்ளிக் குதித்து எழுந்தார். உடனே தனது ஆட்களை அள்ளி வண்டியில் போட்டுக்கொண்டு கிளம்பிப் போனார்.

அவர் திரும்பி வரும்வரை வினய் யாகத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தான். இறுதியில் தன் கட்டைவிரல் கட்டை அவிழ்த்து இடாகினியை வெளியே எடுத்தான்.

‘சொல்லுங்கள். என்ன செய்ய வேண்டும்?’

‘அவர் கையில் அவன் சிக்க வேண்டும்’.

அடுத்த அரை மணியில் எல்லாம் முடிந்துவிட்டது. திருடனைத் துரத்திச் சென்ற நகைக்கடை அதிபரும் அவரது ஆட்களும் அவனை சட்டமன்ற வளாகத்துக்கு எதிரே இருந்த ஒரு தேநீர் விடுதியின் வாசலில் மடக்கிப் பிடித்தார்கள். அப்படியே தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.

அதன்பின் அவனை அடித்து உதைத்து விசாரித்து ஒரு வழியாக அவன் செலவழித்தது போக மீதமிருந்த நகைகள் அனைத்தையும் மீட்டுவிட முடிந்ததில், அந்த மனிதர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

வினய்யின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, ‘நீங்கள் பெரிய ஆள். உங்களுக்கு நான் ஒரு விருந்து தர விரும்புகிறேன்’ என்று சொன்னார்.

அன்றிரவு அவர் வீட்டில் வினய்க்கு ராஜ உபசாரம் நடந்தது. அவன் வாழ்வில் அதுவரை உண்ணாத எத்தனையோ விதமான பலகாரங்களையும் பானங்களையும் அன்று ருசி பார்த்தான். ஆடல், பாடல் கேளிக்கை என்று விடிய விடிய அவர் வீடு அமர்க்களப்பட்டது. கிளம்பும்போது அவர் வினய்க்கு இரண்டு லட்ச ரூபாய்களை சன்மானமாகக் கொடுத்தார். அது அவன் எதிர்பாராத தொகை. அவன் மிகவும் மகிழ்ச்சியானான். அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

அந்த இரண்டு லட்ச ரூபாயை அடுத்த இரு மாதங்களில் அவன் செலவழித்துவிட்டான். குடியும் குதூகலமுமாக நாள்கள் கழிந்த வேகம் நம்ப முடியாததாக இருந்தது. பணம் முற்றிலும் தீர்ந்துவிட்ட போதுதான், அவன் இடாகினியிடம் இன்னொரு விருந்துக்குச் செல்லும் ஆசையை வெளியிட்டான். அது ஜனாதிபதி மாளிகையில் நடக்கவிருக்கும் விருந்தாக இருக்கும் என்று அவன் எண்ணியிருக்கவில்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com