120. வாசனை

காவிரியில் கிடைத்த சிவலிங்கம் அவனை ஒரு சிவ பக்தனாக மாற்றியிருந்ததே தவிர, எதையும் விட்டுச் செல்லும் சிந்தனை அவனுக்குத் தோன்றியதேயில்லை.

அன்றைக்கு நெடு நேரம் அவன் சித்ராவை நினைத்துக்கொண்டிருக்கும்படி ஆகிவிட்டது. நான் குரல் கொடுக்கும்வரை கண்ணைத் திறக்காதே, நினைப்பதை மாற்றாதே என்று சொன்ன அந்தப் பெண், சொன்னதையே மறந்துவிட்டாளோ என்று வினோத்துக்குத் தோன்றியது. ஆனாலும் கண் விழித்துப் பார்க்கவும் பேசவும் தயக்கமாக இருந்தது. எனவே திரும்பவும் சித்ராவையே நினைக்க ஆரம்பித்தான்.

அவளைக் காதலிப்பதை அவளுக்கு எப்படித் தெரியப்படுத்துவது என்று அவனுக்கு அந்நாள்களில் தெரிந்திருக்கவில்லை. கடிதம் எழுதலாம் என்று முதலில் நினைத்தான். பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டான். தற்செயலாகப் பார்க்கும்போது பேசும் ஓரிரு சொற்களில் தன் மனத்தைத் தெரியப்படுத்திவிடுவதே நல்லது என்று தோன்றியது. அவன் அதற்கு முயற்சி செய்யவும் ஆரம்பித்தான்.

ஒருநாள் அவன் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது தென்பட்டில் யாரோ ஒரு தோழியின் திருமணத்துக்குப் போய்க்கொண்டிருந்த சித்ராவை வழியில் பார்த்தான். உடனே சைக்கிளை விட்டு இறங்கி அவளோடு பேசியபடி நடக்கத் தொடங்கினான். அந்தத் தோழி யார், என்ன வயது, அப்பா யார், அம்மா யார் என்றெல்லாம் அக்கறையாக விசாரித்துத் தெரிந்துகொண்டான். ‘உனக்கு உங்காத்துல வரன் பாக்க ஆரம்பிச்சுட்டாளா?’ என்று மிகவும் இயல்பாகக் கேட்பதுபோலக் கேட்டான். அவள் வெட்கப்பட்டாள். ம் என்று மட்டும் சொன்னாள். பிறகு என்ன நினைத்தாளோ, வெகு நாள்களாகப் பார்த்துக்கொண்டிருந்தாலும் ஒன்றும் தகையவில்லை என்று சொன்னாள். அவனுக்கு அது திருப்தியான பதிலாக இருந்தது. இந்த இடத்தில் பொருத்தமான ஒரு சொல் அகப்பட்டுவிட்டால் தன் மனத்தில் இருப்பதைத் தெரிவித்துவிடலாம் என்று நினைத்தான். அந்த ஒரு சொல்லுக்காக யோசிக்க ஆரம்பித்தான். ‘உனக்கு ஆட்சேபணை இல்லேன்னா நானே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்’ என்று சொல்லலாமா என்று நினைத்தான். பிறகு அது சரியாக வராது என்று எண்ணி, ‘எங்கம்மாட்ட சொல்லி உங்காத்துல பேச சொல்லட்டுமா?’ என்று கேட்கலாமா என்று யோசித்தான். அனைத்தையும்விட, ‘எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு’ என்பது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.

யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னதாகவே அவளது இன்னொரு சினேகிதி குறுக்கே வந்துவிட்டாள். ‘நான் அவளோட போறேன்’ என்று சொல்லிவிட்டு சித்ரா போய்விட்டாள். வினோத்துக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தாலும் அவ்வளவு நேரம் அவளோடு நடந்து வந்ததும் பேசியதும் திருப்தியாகவே இருந்தது.

வீட்டுக்கு வந்தபோது டியூஷனுக்கு வந்திருந்த பையன்கள் காத்திருந்தார்கள். அவசரமாக முகம் கழுவி, காப்பி குடித்துவிட்டு அவர்களோடு உட்கார்ந்தான். பாடங்களில் மனம் ஒன்றவேயில்லை. ஏனோதானோ என்று எதையோ சொல்லிக் கொடுத்துவிட்டு சீக்கிரமே அவர்களை அனுப்பிவிட்டு எழுந்து கோயிலுக்குப் போனான். கேசவன் மாமா அங்கே பட்டாச்சாரியாரோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவனைக் கண்டதும், ‘என்னடா?’ என்று கேட்டார்.

‘சும்மாத்தான் வந்தேன். வாங்களேன், கொஞ்ச தூரம் நடந்துட்டு வருவோம்?’

‘டியூஷனெல்லாம் முடிஞ்சிடுத்தா?’

‘ஆயிடுத்து மாமா’.

‘நான் வரேன்’ என்று பட்டாச்சாரியாரிடம் சொல்லிவிட்டு மாமா எழுந்து வந்தார்.

‘சொல்லு. என்ன சமாசாரம்?’

அன்றைக்கு வினோத் ஒரு தீர்மானத்துடன் இருந்தான். என்ன ஆனாலும் மாமாவுக்குத் தெரியப்படுத்திவிடுவது. சமயம் பார்த்து, அம்மாவிடமும் அப்பாவிடமும் விஷயத்தைச் சொல்லி, நடத்திவைக்க அவரால்தான் முடியும்.

‘மாமா, நீங்க தப்பா நினைச்சிக்கப்படாது. அம்மா எனக்குப் பொண்ணு பாக்கணுங்கறா.. அடிக்கடி அதைப் பத்திப் பேச ஆரம்பிச்சிருக்கா’.

‘ஆமா. அதுல என்ன தப்பு? மிச்சம் இருக்கறவன் நீ ஒருத்தன். நீயாவது அவ திருப்திக்கு இருந்துட்டுப் போயேண்டா’.

‘சரி மாமா. ஆனா பொண்ண எனக்குப் பிடிக்கணும் இல்லியா?’

‘உனக்குப் பிடிக்காத ஒருத்திய உங்கம்மா பண்ணி வெக்கமாட்டா வினோத். கவலைப்படாதே’.

‘எனக்குப் பிடிச்ச ஒருத்தி இருக்கா. அதை நானே சொல்ல சங்கடமா இருக்கு. நீங்க உதவி பண்ணேள்னா நன்னாருக்கும்’.

மாமாவுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. அப்படியே அவனை நிறுத்தி நடுச்சாலை என்றும் பாராமல் இறுக்கி அணைத்து விடுவித்தார். ‘போடு சக்கைன்னானாம். யாருடா?’

அவன் வெட்கப்பட்டுக்கொண்டு சித்ராவைப் பற்றிச் சொன்னான். சிறிது நேரம் யோசித்த கேசவன் மாமா, ‘பரவால்லேடா வினோத். நல்ல இடமாத்தான் சொல்றே. எனக்கு சம்மதமாத்தான் படறது’.

‘தேங்ஸ் மாமா. ஆனா லவ்வு கிவ்வுனு ஆத்துல சொல்லி அப்பாவ கலவரப்படுத்த வேண்டாம்னு நினைக்கறேன். இன்னொண்ணு இது லவ்வுமில்லே. அவளுக்கு அப்படி ஒரு அபிப்பிராயம் இருக்கா இல்லியான்னு எனக்குத் தெரியாது. அதனால...’

‘விட்டுடு வினோத். நான் பாத்துக்கறேன்’ என்று மாமா சொன்னார்.

அதன்பின் அவர் அம்மாவிடம் என்ன பேசினார், அப்பாவிடம் என்ன பேசினார் என்றெல்லாம் வினோத்துக்குத் தெரியாது. திடீரென்று ஒரு நாள் அம்மா, பத்மா மாமியின் வீட்டுக்குப் போய் சித்ராவின் ஜாதகத்தைக் கேட்ட விவரமே அவனுக்கு இரண்டு நாள் கழித்துத்தான் தெரியவந்தது. ‘மாமியே பிரமாதமா ஜோசியம் பாப்பா வினோத். ரெண்டு பேரோடதும் நன்னா பொருந்தியிருக்குன்னு சொல்லிட்டா. க்ராஸ் செக்கெல்லாம் அநாவசியம்’ என்று மாமா சொன்னார்.

எண்ணி ஒரே வாரத்தில் நிச்சயதார்த்தம் நடந்து, அடுத்த மாதமே கல்யாணம் என்று உறுதியானது. வினோத்துக்குத் தாங்க முடியாத வியப்பும் சந்தோஷமும் ஏற்பட்டு மாமாவைத் தனியே கூப்பிட்டுக் கேட்டான், ‘அப்பாட்ட எப்படி சொன்னேள்?’

‘ஒன்ன பத்திப் பேச்சே எடுக்கலடா. சித்ரா ஒருத்தி இருக்கான்னு லேசா அக்காட்ட கோடி காட்டிட்டு விட்டுட்டேன். மிச்சத்த அவளே முடிச்சிட்டா’ என்று சொன்னார்.

துறவு சார்ந்த ஒரு சிறு எண்ணமும் அதுவரை தன் மனத்தில் உதித்ததேயில்லை என்பதை வினோத் எண்ணிப் பார்த்தான். காவிரியில் கிடைத்த சிவலிங்கம் அவனை ஒரு சிவ பக்தனாக மாற்றியிருந்ததே தவிர, எதையும் விட்டுச் செல்லும் சிந்தனை அவனுக்குத் தோன்றியதேயில்லை. தான் ஒரு சிவ பக்தன் என்பதை வீட்டுக்குத் தெரியப்படுத்தக்கூட அவன் நினைத்ததில்லை. அதை அவசியமாகவும் கருதியதில்லை. சிவம் அவனது மனத்துக்குகந்த தெய்வமாகியிருந்தது. நள்ளிரவில் மட்டும் அந்த லிங்கத்தை எடுத்துவைத்து சிறிது நேரம் பூஜிப்பான். தியானம் செய்வான். ஆனால் மனம் ஒன்றாது. மீண்டும் எடுத்துப் பெட்டியில் வைத்துவிட்டுப் படுத்துவிடுவான். அது போதும் என்று நினைத்தான். சிவ லிங்கம் கிடைத்த பின்பு அவன் கோயிலுக்குப் போவது படிப்படியாகக் குறைந்துவிட்டிருந்தது. படிப்பு முடித்து வேலை, வேலை விட்டால் டியூஷன் என்று வாழ்க்கையை ஒரு நேர்க்கோட்டில் அவன் அமைத்துக்கொண்டுவிட்டபடியால் வீட்டில் யாரும் அவன் மாறிவிட்டதாக நினைக்க வாய்ப்பே உண்டாகவில்லை. எல்லாம் அதனதன் இயல்பில் இயங்கிக்கொண்டிருப்பது போலவேதான் இருந்தது.

அம்மாவும் அதனால்தான் நம்பிக்கையும் மகிழ்ச்சியுமாகத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தாள்.

ஒரு சம்பவத்தை வினோத் நினைத்துப் பார்த்தான். அது நிச்சயமாகிவிட்ட தருணம். ஓரிரு முறை அவன் சித்ராவுடன் வெளியே போய்விட்டு வந்திருந்தான். அந்த விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிந்தே நடந்ததுதான். எதுவும் தவறல்ல. எதுவும் தகாததும் அல்ல. எல்லோரும் எல்லாவற்றையும் எளிதாக ஏற்கும் பக்குவத்தைப் பெற்றிருந்தார்கள். சட்டென்று ஒருநாள் அவனுக்கு சித்ராவை முத்தமிட வேண்டும் என்று தோன்றியது. வெறுமனே அல்ல. கட்டியணைத்து முத்தமிட வேண்டும். திசைகள் சாட்சியாக, பெருங்கடல் சாட்சியாக மணல் வெளியில், யாருமற்ற தனிமையில் அது நிகழ வேண்டும் என்று விரும்பினான். ஆனால் இதனை வீட்டில் சொல்லி அனுமதி பெற்றுச் செய்ய முடியாது. வேண்டியது சித்ராவின் அனுமதி மட்டும்தான். தனக்கு ஏன் இப்படி சினிமாத்தனமான ஆசைகள் உதிக்கின்றன என்று அவனுக்கே வியப்பாக இருந்தது. ஆனாலும் அது தேவை, அது நிகழ்ந்தால் நன்றாக இருக்கும் என்று திரும்பத் திரும்பத் தோன்றியது.

அன்று மாலையே அவன் சித்ராவைத் தனியே கூப்பிட்டு, கடற்கரை வரை சென்று வரலாம் என்று சொன்னான். அவள் கோயிலுக்குப் போகும்போது அப்படியே வருகிறேன் என்று சொன்னாள். வினோத் நெடுஞ்சாலை ஓரத்தில் அவளுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான். சரியாக ஆறரைக்கு சித்ரா அங்கு வந்தாள். பார்த்ததும் புன்னகை செய்தாள். ‘வா’ என்று அழைத்துக்கொண்டு சாலையைக் கடந்து சவுக்குத் தோப்புக்குள் இறங்கி, ஐந்து நிமிடங்களில் கடற்கரையை அடைந்தான்.

பொதுவாக அந்நேரத்தில் அங்கு யாரும் இருக்கமாட்டார்கள். அபூர்வமாக சில சமயம் ஓரிரு மீனவர்கள் அங்கு வந்து போவதுடன் சரி. மீன் பிடிக்கக் கடலுக்குள் போகிறவர்கள்கூட கோவளத்துக்குப் போய் இறங்குவார்களே தவிர, திருவிடந்தைப் பகுதிக்கு வரமாட்டார்கள். ஆரவாரமற்ற அலைகளும் ஒரே சீரான வேகத்தில் வீசும் சவுக்குத் தோப்புக் காற்றும் இதமான இருளும் பிரமாதமாகக் கூடி அமைந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. காதலுடன் சித்ராவின் கையைப் பிடித்தான். அவள் மறுக்கவில்லை. சிறிது வெட்கப்பட்டாள்.

‘உட்கார்’ என்று சொன்னான்.

இருவரும் மணலில் உட்கார்ந்தார்கள். ‘எதுக்குக் கூப்ட்டேள்?’ என்று சித்ரா கேட்டாள்.

‘உனக்கு ஒரு முத்தம் குடுக்கணும்னு தோணித்து’.

‘ஐயோ!’ என்றாள்.

‘தப்பா?’

அவள் பதில் சொல்லவில்லை.

‘தப்பு, வேணான்னு நினைச்சேன்னா சொல்லு. பண்ணலை. பரவால்லேன்னு நினைச்சேன்னா குடுப்பேன். ஒண்ணே ஒண்ணு’.

என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் தடுமாறிக்கொண்டிருந்தபோது அவன் சட்டென்று நெருங்கி அவள் உதட்டில் முத்தமிட்டான். அவள் முகபாவம் அப்போது என்னவாக இருந்தது என்று அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. நன்கு இருட்டிவிட்டிருந்ததே காரணம். ஆனால் மறுப்பாகவோ, வெறுப்பாகவோ அவள் ஒன்றும் சொல்லவில்லை. அது அவனுக்குப் போதுமானதாக இருந்தது.

வாழ்வில் முதல் முறையாக ஒரு பெண்ணை நெருங்கித் தொட்டிருக்கிறோம் என்பது அவனுக்குப் பூரிப்பாக இருந்தது. ஒரு பெண்ணின் சருமம் எப்படி இருக்கும் என்று அவனுக்கு அதற்கு முன் தெரியாது. அதன் மென்மை குறித்த கற்பனைகள் இருந்ததே தவிர, வாசனை தெரிந்ததில்லை. இப்போது முதல் முதலில் சித்ராவை நெருங்கி முத்தமிட்டபோது ஒரு பெண்ணின் வாசனை என்பது சிகைக்காய்ப் பொடி டப்பாவில் போட்டு வைத்து எடுத்த ஒரு ரோஜாப்பூவின் வாசனைக்கு நிகரானதாக இருக்கும் என்று தோன்றியது. உடனே தான் தவறாக யோசிக்கிறோமோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. சித்ரா அன்றைக்கு சிகைக்காய்ப் பொடி போட்டுக் குளித்திருக்கலாம். அது அவளது சொந்த வாசனையாக இருக்க முடியாது என்று தோன்றியது. இன்னொரு முறை அவள் முத்தமிட அனுமதித்தால் சரியாகக் கணித்துவிடலாம் என்று நினைத்தான். அதைச் சொல்லாமலே செய்யலாம் என்று முடிவு செய்து மீண்டும் நெருங்கியபோது, ‘வேண்டாமே?’ என்று அவள் சொன்னாள்.

அவன் சட்டென்று விலகிக்கொண்டு, ‘சரி’ என்று உடனே சொல்லிவிட்டான். சிரித்தான். ‘நன்னா இருந்துது இல்லே?’

அவள் தலை குனிந்திருந்தாள். வெட்கம்தான் என்று தோன்றியது. இருந்தாலும் ஏதாவது மேற்கொண்டு கேட்க நினைத்து, ‘அந்த நிமிஷத்துல என்ன நினைச்சிண்டே?’ என்று கேட்டான்.

‘எப்போ?’

‘கிஸ் பண்ணேனே, அப்போ’.

‘ஒண்ணுமில்லே’.

‘பரவால்ல சொல்லு’.

‘ஒண்ணுமே நினைக்க முடியலே’.

அதுதான் தியானமாக இருக்கும் என்று வினோத்துக்குத் தோன்றியது. அன்றிரவு அவன் சிவ லிங்கத்தை வைத்து பூஜித்து, தியானத்தில் அமர்ந்தபோது தன்னையறியாமல் அதை எடுத்து முத்தம் கொடுத்தான். லிங்கத்தின் மீது ஈர மணலின் வாசனை அடித்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com