125. லட்சத்து எட்டு

நான் பெற்றதைவிட இழந்தவை அதிகம். ஒரு எள்ளுருண்டையில் திசை மாறிய என் வாழ்க்கை என்னை எங்கெங்கோ கொண்டு போய்ச் சேர்த்துவிட்டது. நான் அதில் இருந்து விடுபட விரும்பவில்லை.

வினோத் என்ன நினைத்து அதைச் செய்தான் என்று உண்மையிலேயே எனக்குத் தெரியாது. ஆனால் வினய் தனது ஜனாதிபதி மாளிகை அனுபவத்தைச் சொல்லி முடித்தபோது வினோத்துக்குக் கண் கலங்கிவிட்டிருந்தது. மிகவும் பரிவுடனும் துயரத்துடனும் அவன் வினய்யை நோக்கினான். சட்டென்று தனது தோள் பைக்குள் கையைவிட்டு எதையோ தேடினான். அவன் தேடிய பொருள் அவன் கைக்கு அகப்பட்டுவிட்டதை அவன் முகபாவத்தில் தெரிந்துகொண்டேன். ஆனால் கையை வெளியே எடுக்காமல் அவன் வினய்யிடம் சொன்னான், ‘வினய், நீ என்ன நினைத்துக்கொள்வாய் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. நீ சிரிக்கலாம். என்னுடைய இந்தச் செய்கையைக் கேலி பேசலாம். அல்லது இதைத் தூக்கிப் போடலாம். அது உன் விருப்பம். ஆனால் உன்னிடம் சொல்ல எனக்கு ஒன்று உள்ளது’.

‘என்ன?’ என்று வினய் கேட்டான்.

‘இந்தா’ என்று அவன் ஒரு ஜப மாலையை எடுத்து வினய்யிடம் கொடுத்தான்.

‘எனக்கு எதற்கு இது?’

‘உன் இலக்குகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உன் தெய்வம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உன் பாதை என்னுடைய பாதைக்கு முற்றிலும் எதிரானதாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் எனக்காக ஒன்று செய். நீ செய்து முடித்த மறுவிநாடி நீ நினைப்பது நடக்கும்’.

‘என்ன செய்ய வேண்டும்?’

‘தனியே போ. யாருமில்லாத ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து லட்சத்து எட்டு முறை கிருஷ்ண மந்திரத்தைச் சொல். உனக்கு கிருஷ்ண பக்தி வேண்டாம். நான் கேட்பது மந்திர உச்சாடனம் மட்டும்’.

‘சரி. சொன்னால்?’

‘சொல்லிவிட்டுப் பிறகு கேள். இந்த உலகில் கிருஷ்ண ஜபத்தைக் காட்டிலும் உயர்ந்த வலி நிவாரணி வேறில்லை’ என்று வினோத் சொன்னான்.

‘அப்படியா?’

‘சந்தேகப்படாதே. என் ஊசலாட்டம் குறித்து உனக்குச் சொன்னேன் அல்லவா? அப்போது அந்தப் பெண் துறவி எனக்குச் சொல்லித்தந்த வழி அது’.

‘ஏன், நீதான் ஏற்கெனவே ஹரே கிருஷ்ணாவில் இருந்தவனாயிற்றே? அவள் என்ன புதிதாகச் சொல்லிக் கொடுத்துவிட்டாள்?’ என்று நான் கேட்டேன்.

‘ஆம். நான் ஏற்கெனவே கிருஷ்ண ஜபம் செய்துகொண்டிருந்தவன்தான். ஆனால், அந்தப் பெண் கிருஷ்ணனை எனக்கு வேறொரு கோணத்தில் அறிமுகப்படுத்தினாள்’.

‘எப்படி?’

‘குறிப்பிட்ட நோக்கம் வேண்டும். அதைத் தெளிவாக அவனிடம் சொல்லிவிட்டு ஜபத்தில் அமர வேண்டும். லட்சத்து எட்டு உருப்படி முடியும்வரை என்ன ஆனாலும் அசையக் கூடாது’.

‘சரி. பிறகு?’

‘நான் கேட்டதை நீ செய்து கொடுத்தால், ‘உனக்கு நான் இன்னது செய்கிறேன்’ என்று ஒரு வாக்குறுதி அளிக்க வேண்டும்’.

நான் சிரித்துவிட்டேன். ‘டேய், இதன் பெயர் பேரம்’.

‘ஆம். பேரம்தான். வியாபாரம் என்றும் சொல்லலாம். தவறில்லை. ஆனால் கிருஷ்ணன் நம்பகமானவன். நாம் சொன்னதைச் செய்தால், அவன் நாம் கேட்டதைத் தந்துவிடுவான்’.

‘உண்மையாகவா?’ என்று வினய் கேட்டான்.

‘எனக்கு நடந்திருக்கிறது’.

‘என்ன?’

‘இனி நான் சிவனை நினைக்கவே கூடாது என்று வேண்டுதல் வைத்து கிருஷ்ணனை நோக்கித் தவமிருந்தேன். லட்சமல்ல. ஒரு கோடி முறை கிருஷ்ண நாமத்தை ஜபித்தேன். ஒருவார காலம் இடத்தை விட்டு அசையாமல் அதைச் செய்தேன்’.

‘உண்மையாகவா?’

‘ஆம். அதன்பின் சிவன் நேரில் வந்து என்னிடம் விடைபெற்றுப் போய்விட்டார். திரும்ப வரவேயில்லை’.

அவன் சொன்ன விஷயமல்ல; அதைச் சொன்னபோது அவன் முகத்தில் தெரிந்த தீவிரத்தை நான் மிகவும் ரசித்தேன். இடைவிடாமல் ஒரு கோடி முறை ஒரு பெயரை உச்சரித்துக்கொண்டே இருந்தால், அது நினைவின் ஆதார சுருதியாகிவிடாதா? அதன்பின் சிவனென்ன, எவனும் உள்ளே நுழைய முடியாதே?

ஆனால் நான் அதை அவனிடம் சொல்லவில்லை. வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், வினய் மிகவும் கவனமுடன் அவன் பேசியதைக் கேட்டான். நெடு நேரம் யோசித்துக்கொண்டே இருந்தான்.

‘நம்பிக்கை வை வினய். பாதி வாழ்க்கை வீண் என்று நீ அழுதது என்னைக் கலங்கச் செய்துவிட்டது. உன் மீதி வாழ்க்கை உன் விருப்பப்படி அமைவதற்கு கிருஷ்ணன் உதவுவான்’.

‘சரி. ஆனால் நான் என்றுமே ஒரு கிருஷ்ண பக்தன் ஆக முடியாது. அதை முதலில் சொல்லிவிடுகிறேன்’.

‘அவசியமில்லை. அவன் அதை எதிர்பார்க்கவும் மாட்டான்’.

‘லட்சத்து எட்டு முறை ஜபித்தபின் கிருஷ்ணன் எனக்குத் தரிசனமானால், அவனிடம் நான் காமரூபிணியைக் காட்டித்தரச் சொல்லித்தான் கேட்பேன். எனக்கு வேண்டியது அவளது அனுக்கிரகம்தான். கிருஷ்ணனுடையது அல்ல’.

‘சரி. பரவாயில்லை’.

‘அவன் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டால்?’

‘அவன் அப்படிச் சொல்லமாட்டான்’.

‘அவன் உதவாமல் போய்விட்டால்?’

‘அதற்கு வாய்ப்பே இல்லை’.

‘வெறும் லட்சத்து எட்டு போதுமா?’

‘கண்டிப்பாகப் போதும். என்னை நம்பு. நீ நினைப்பது நடக்கும்’.

அந்தக் கணம் வினய் கண்ணை மூடிக்கொண்டு, அதர்வத்தில் இருந்து ஒரு சூக்தத்தைச் சொல்லத் தொடங்கினான். ஆயிரமாயிரம் பேர் நடமாடிக்கொண்டிருந்த பேருந்து நிறுத்தத்தில் அவனது குரல் கம்பீரமாகக் காற்றில் நிறைந்து விரிந்தது. அத்தனை பேரும் அவனைப் பார்த்துக்கொண்டே போனார்கள். அங்கே உலவிக்கொண்டிருந்த ஒரு நாய் சட்டென்று ஓடிவந்து அவன் காலருகே அமர்ந்துகொண்டு அவனையே உற்றுப் பார்க்க ஆரம்பித்தது. புறப்பட்டுச் சென்ற பேருந்துகளில் இருந்தவர்களெல்லாம் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபடி போனார்கள். மூன்று நிமிடங்கள் நீடித்த அவனது உச்சாடனம், அதன்பின் மெல்ல ஓய்ந்து அடங்கியது. வினய் கண்ணைத் திறந்தான்.

வினோத் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தான். ‘என்ன இது?’

‘அதர்வத்தில் ஒரு மந்திரம். எங்கள் மரபுக்கு மாறானதொன்றைச் செய்ய நேர்ந்தால் இதனைச் சொல்லிவிட்டே ஆரம்பிப்போம்’.

‘இதைச் சொன்னால் என்ன ஆகும்?’ என்று நான் கேட்டேன்.

‘ஒன்றுமில்லை. உக்கிரதேவதைகள் கோபம் கொள்ளாதிருக்க இது வழி செய்யும்’.

‘ஓ. கிருஷ்ண ஜபம் செய்தால் அவர்கள் கோபித்துக்கொண்டுவிடுவார்களா?’

அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை. நெடு நேரம் அமைதியாக யோசித்துக்கொண்டிருந்துவிட்டு, பிறகு வாய் திறந்தான். ‘விமல்! நான் பெற்றதைவிட இழந்தவை அதிகம். ஒரு எள்ளுருண்டையில் திசை மாறிய என் வாழ்க்கை என்னை எங்கெங்கோ கொண்டு போய்ச் சேர்த்துவிட்டது. நான் அதில் இருந்து விடுபட விரும்பவில்லை. அதே சமயம் என் பாதையின் எல்லையைப் பார்த்துவிட ஆசைப்படுகிறேன்’.

‘பேராசை’ என்று சொன்னேன்.

‘ஆம். பேராசைதான். இந்த உலகின் அசைக்க முடியாத சக்தி படைத்த பிரகிருதியாக நான் ஆகியே தீர வேண்டும். அதைச் செய்யாமல் நான் சாகமாட்டேன்’.

‘நல்லது. கிருஷ்ணன் உனக்கு உதவட்டும்’ என்று சொன்னேன்.

‘கிண்டல் செய்யாதே. கிருஷ்ணன் நிச்சயம் உதவுவான்’ என்று வினோத் சொன்னான்.

இப்போது வினய்க்கு வீட்டுக்குப் போவதா வேண்டாமா என்ற குழப்பம் வந்துவிட்டது. ‘நான் இப்படியே திரும்பிப் போய்விடவா?’ என்று கேட்டான்.

‘முட்டாள். நாம் எதற்காக வந்திருக்கிறோம்?’

‘ஆம். தவறுதான்’.

‘இரண்டு நாள் கழித்து ஜபித்தால் கிருஷ்ணன் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை. அம்மாவைக் கடைத்தேற்றிவிட்டுக் கிளம்பிப் போய் ஆரம்பி’ என்று சொன்னேன்.

அவன் என்னை உற்று நோக்கினான். ‘நீ பேசுகிற அனைத்துமே எனக்குக் கிண்டலாகத் தோன்றுகின்றன’.

‘அப்படியானால் நான் சரியாகப் பேசுகிறேன் என்று பொருள். ஆம். நான் கிண்டல்தான் செய்கிறேன்’ என்று சொன்னேன்.

‘என்றுமே உனக்கு என் வலிகள் புரியாது விமல்’ என்றான். அவன் கண்கள் கலங்கியிருந்தன.

நான் அன்போடு அவன் கரங்களைப் பிடித்துக்கொண்டேன். ‘நீ என் சகோதரன். வாழ்வில் முட்டி மோதி தோற்றுவிட்டதாகச் சொன்னவன். ஒரு சிறந்த வெற்றி உன்னைச் சேர வேண்டும் என்று எனக்கும் தோன்றத்தான் செய்கிறது. ஆனால் அதை உனக்கு நீயேதான் அளித்துக்கொள்ள வேண்டுமே தவிர, கிருஷ்ணனைப் போன்ற ஒருவன் தருவான் என்று நம்புவதை என்னால் ஏற்க இயலவில்லை. என்னை மன்னித்துக்கொள்’.

‘பரவாயில்லை. உன்னளவில் நீ தெளிவாக இருக்கிறாய். உன் சித்தாந்தத்தின் நுனியில் உன்னால் நின்று விளையாட முடிகிறது. என்னைப் பார். காமரூபிணியின் கடாட்சத்துக்குக்கூட ஒரு புரோக்கர் தேடவேண்டி இருக்கிறது’.

வினோத் துடித்துப் போய்விட்டான். ‘ஹரே கிருஷ்ணா! வேண்டாம் வினய். அப்படியெல்லாம் சொல்லாதே. அவன் பரம்பொருள். உன் காமரூபிணியெல்லாம் அவனுக்குள் ஒடுங்கியிருப்பவள்தான்’.

‘மன்னித்துக்கொள். உன் நம்பிக்கை உனக்கு. என்னுடையது எனக்கு. ஆனால் பேரம் பேரம்தான். அதில் மாற்றமில்லை. நான் கிருஷ்ண மந்திரம் ஜபிக்கப்போகிறேன். அது பலன் தராவிட்டால் உன்னை உதைப்பேன்’.

வினோத் சிரித்தான். ‘தந்தே தீரும்’.

நான் உடனே கேட்டேன். ‘பதிலுக்கு கிருஷ்ணனுக்கு நீ என்ன தருவதாக உத்தேசம்? அது முக்கியம் என்று இவன் சொன்னானே?’

‘அவன் என்ன கேட்டாலும் தருவேன்’.

‘அவன் கேட்கமாட்டான். உன்னால் முடிந்ததை நீயேதான் முன்வந்து சொல்ல வேண்டும்’ என்று வினோத் சொன்னான். ‘ஆனால் சொன்னதைச் செய்தே தீர வேண்டும்’.

‘சரி. இழப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. பெற வேண்டியவைதான் ஏராளமாக உள்ளன. அவன் என்னையே வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். அதற்குமுன் நான் நினைத்ததை சாதித்துவிட்டால் போதும்’ என்று சொன்னான்.

வெகுநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததில் எங்களுக்குக் கால்கள் மரத்துப்போயின. கழுத்து, தோள்பட்டையெல்லாம் வலிக்கத் தொடங்கியது. ‘நாம் கிளம்பலாமா?’ என்று வினோத் கேட்டான். உடனே நான் எழுந்துகொண்டேன்.

‘போகத்தான் வேண்டும் அல்லவா?’ என்றான் வினய்.

‘வா’ என்று அவன் கையைப் பிடித்து வினோத் எழுப்பினான். அடுத்து வந்த மகாபலிபுரம் செல்லும் பேருந்தில் நாங்கள் ஏறிக்கொண்டோம். மூன்று பேர் அமரும் ஒரு நீண்ட இருக்கையில் நாங்கள் ஒன்றாக அமர்ந்தோம். நடத்துநர் அருகே வந்தபோது வினோத், ‘மூணு திருவிடந்தை’ என்று சொல்லிப் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினான். அந்தப் பேருந்து அதற்குமுன் மூன்று சன்னியாசிகளை மொத்தமாகக் கண்டிருக்காது.

வண்டி புறப்பட்டதுமே வினய் சொன்னான், ‘அம்மா நாளை மறுநாள்தானே மரணமடைவாள் என்று சொன்னாய்? நான் அந்த லட்சத்து எட்டு கிருஷ்ண ஜபத்தை நாளையே செய்து முடித்துவிடுகிறேன்’.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com