124. இரண்டு இட்லிகள்

எனக்கு ஜனாதிபதி மாளிகையின் அமைப்பும் வழிகளும் இப்போது மனப்பாடம். ஆயிரம் மைல்கள் தள்ளி அமர்ந்துகொண்டு என்னால் அங்கே சில காரியங்களைச் செய்ய முடியும்.

அந்தக் குடியரசு தின தேநீர் விருந்தை வினய்யால் மறக்கவே முடியாது. அவனது இடாகினி அவனை ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்க்கும் ஓர் அதிகாரியின் தோற்றத்துக்கு மாற்றியிருந்தது. கோட் சூட் அணிந்து, பளபளக்கும் ஷூக்கள் அணிந்து ஒரு விலை உயர்ந்த காரில் அவன் முன்னதாக மூன்று மணிக்கே ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றுவிட்டிருந்தான். இடாகினி தெளிவான உத்தரவுகள் கொடுத்திருந்தது. அவன் பேசக் கூடாது. அவனுக்குப் பதிலாக அது பேசும். அதன் குரல் ஒலிக்கும்போதெல்லாம் பொருத்தமாக அவன் வாயசைத்தால் போதும். யாரைக் கண்டாலும் சிறிதாக ஒரு புன்னகை. எதிராளி வணங்கினால் பதிலுக்கு வணக்கம் சொல்ல வேண்டும். அவர் கறாராகப் பேசினால், அதற்கேற்ற முகபாவத்தைக் கொண்டு வர வேண்டும். ஆனால் பேச வேண்டிய பொறுப்பு அதனுடையது.

‘உன்னை நான் ஓர் அறைக்குள் அழைத்துச் சென்று அமர வைத்துவிடுவேன். போன் அடித்தால் எடுத்துக் காதில் வைத்துக்கொள். பேசவேண்டியதை நான் பார்த்துக்கொள்கிறேன். யாராவது வந்தால் அவர் கண்ணை மட்டும் நேராக உற்றுப் பார்த்தால் போதும். என் குரலுக்கு வாயசைத்துவிட்டு அமைதியாக இருந்துவிடு’ என்று சொன்னது.

‘நான் என்ன உத்தியோகமா பார்க்கப் போகிறேன்?’

‘விருந்து நேரம் தொடங்கும்வரை அங்கே இருந்தாக வேண்டுமே’.

‘ஐயோ பாவம் யாரந்த அதிகாரி? அவரை என்ன செய்தாய்?’

‘ஒன்றுமில்லை. விருந்து முடிந்ததும் அவர் வீட்டுக்குப் போய்விடுவார். கவலைப்படாதே’ என்று இடாகினி சொன்னது.

மாலை ஐந்தரை மணி முதல் ஜனாதிபதியின் விருந்தினர்கள் மாளிகைக்கு வரத் தொடங்கினார்கள். பெரிய பெரிய கார்கள் வந்து நின்று சென்றுகொண்டே இருந்தன. ஊழியர்கள் சலாமிட்டு அவர்களை சிவப்புக் கம்பளத்தில் நடத்தி அழைத்துக்கொண்டு போனார்கள். வினய்க்கு அந்தக் காட்சியே பிரமிப்பாக இருந்தது. அவனால் அன்று மாளிகை முழுவதும் சுதந்திரமாக சுற்றித் திரிய முடிந்தது. யாரும் எதுவும் கேட்கவில்லை. யாருக்கும் எந்தச் சந்தேகமும் எழவில்லை. அவனை அணுகிப் பேசிய ஒவ்வொருவருக்கும், அவன் சார்பில் இடாகினி பதில் சொல்லிக்கொண்டிருந்தது. அவன் வெறுமனே வாயசைத்தும் புன்னகை செய்தும் சமாளித்தான். உயர்ந்த சுவர்களும் பாறைகளைப் போல உருண்டு திரண்டு தொங்கிக்கொண்டிருந்த மேநாட்டு விளக்கு அலங்காரங்களும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட திரைச் சீலைகளும் மேசை விரிப்புகளும் கம்பளங்களும் கலையழகோடு வடிவமைக்கப்பட்ட பாத்திரங்களும் சீசாக்களும் பார்க்கப் பார்க்கப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல் இருந்தது.

உண்மையில் அவன் சாப்பிட ஆசைப்பட்டுத்தான் அங்கு சென்றான். ஆனால் சாப்பிடவே தோன்றவில்லை. விருந்து தொடங்கி, ஜனாதிபதி சிறிதாக ஓர் உரையாற்றியபின் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாகப் பிரமுகர்கள் கூடி நின்று தமக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். ஜனாதிபதியும் அவரது மனைவியும் மரியாதை நிமித்தம் ஒவ்வொருவரையும் அணுகி சில வார்த்தைகள் பேசிவிட்டு அடுத்தவரை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தார்கள். செய்தித்தாள்களில் மட்டுமே பார்த்திருந்த பல முகங்களை வினய் அன்று நேரில் கண்டான். கால் வலிக்குமளவுக்கு அங்கே சுற்றிச் சுற்றி வந்தான். விருந்து இரவு பத்து மணி வரை நீடித்தது. விருந்தினர்கள் ஒவ்வொருவராகக் கலைந்துபோகத் தொடங்கியபோது, வினய்க்கு சாப்பிடலாம் என்று தோன்றியது. இஷ்டப்பட்ட பலகாரங்களை எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொண்டு திருப்தியாக உண்டான். ஜனாதிபதி மாளிகை ஊழியர்கள் மிகவும் மரியாதையுடன் அவனை உட்காரச் சொல்லி, அவர்களே எடுத்துவந்து பரிமாறினார்கள். உண்டு முடித்ததும், விருந்தின் ஞாபகார்த்தமாக அனைவருக்கும் ஒரு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. வினய்க்கும் அந்தப் பரிசு கிடைத்தது. அழகான பரிசுப் பொதியாகக் கட்டப்பட்ட ஏதோ ஒன்று. அவனுக்கு அதெல்லாம் முக்கியமாகவே படவில்லை. திரும்பத் திரும்ப ஒன்றைத்தான் அவன் சிந்தித்துக்கொண்டிருந்தான்.

இந்த மனிதர் இந்த மாளிகைக்குள் நுழைய எத்தனை ஆண்டுக் காலம் அரசியல் ஊறி உழைத்திருப்பார்! வந்திருந்த ஒவ்வொரு விருந்தினருமே அப்படித்தான். அன்றைய விருந்துக்கு இரண்டு மூன்று வெளிநாட்டு அதிபர்களும் வந்திருந்தார்கள். இருபதாண்டுகள், முப்பதாண்டுகள் அரசியலில் போராடி மேலே வந்திருக்கக்கூடியவர்களால் மட்டுமே நுழைய முடியக்கூடிய இடம். எத்தனை சுலபத்தில் என்னால் இந்த விருந்தில் கலந்துகொள்ள முடிந்துவிட்டது!

ஒரு கட்டத்தில் அவன், வந்திருந்த விருந்தினர் யாரோ ஒருவரின் கேள்விக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தபோது, ஜனாதிபதி அவன் அருகே வந்துவிட்டார். ‘திவாரி! நீங்கள் வெகுநேரமாக வேலை செய்துகொண்டே இருக்கிறீர்கள். சிறிது ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்’ என்று மிகுந்த வாஞ்சையுடன் அவர் சொன்னபோது வினய் புன்னகை செய்து, மரியாதையுடன் அவரது அன்பை ஏற்றான்.

அந்தத் திவாரி யார் என்றுகூட அவன் கண்டதில்லை. அந்தப் பெயரையே அப்போதுதான் முதல் முதலில் கேள்விப்படுகிறான். ஒரு நிலைக்கண்ணாடி இருக்குமானால், திவாரி எப்படி இருப்பார் என்று எதிரே நின்று பார்த்துக்கொள்ளலாம். மாளிகையில் அவன் சுற்றிவந்த இடங்களில் எங்கும் ஒரு நிலைக்கண்ணாடி தென்படவில்லை. அறைகளுக்குள் இருக்கும். அவனுக்கு அங்கேயெல்லாம் செல்ல விருப்பமில்லை. யாருடைய அந்தரங்கத்துக்கும் இடையூறாக இருந்துவிடக் கூடாது என்று நினைத்தான்.

அவன் சாப்பிட்டு ஆனதும், கிளம்பலாமா என்று இடாகினி கேட்டது. ‘இரவு இங்கேயே படுத்து உறங்க முடிந்தால் நன்றாக இருக்கும்’ என்று வினய் சொன்னான்.

சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘உறங்குவதில் சிக்கல் இல்லை. ஆனால், விடிந்ததும் அந்தத் திவாரி இங்கேதான் ஓடி வருவான். அப்போது நீ இங்கே இருக்கக்கூடாதே' என்று இடாகினி சொன்னது.

‘அதுவும் சரிதான். பாவம் அந்த மனிதர். ஒரு நல்ல விருந்தை இழந்துவிட்டார்’.

‘உனக்குத் திருப்திதானே?’

‘மிகவும்’.

‘எனக்கு அது போதும்’ என்று சொன்னது. சில விநாடிகளில் அவன் புறப்பட வேண்டிய காரை அதுவே ஓட்டிக்கொண்டு வந்து நிறுத்தியது. வினய் ஏறிக்கொண்டதும் கார் புறப்பட்டது. கரோல் பாக் வரை ஓடிய கார், யுஎன்ஐ செய்தி நிறுவன வாசலில் சென்று நின்றது.

‘இங்கே ஏன் நிறுத்தினாய்?’

‘இதுதான் நாம் இறங்க வேண்டிய இடம்’.

‘அப்படியா?’

‘ஆம். திவாரி தனது காரை இங்கேதான் நிறுத்திவிட்டு உள்ளே போனார். நான் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்’.

வினய் சிரித்துக்கொண்டே காரை விட்டு இறங்கினான். இடாகினியை எடுத்து மீண்டும் கட்டை விரலுக்குள் பொருத்தி, துணியை வைத்து இறுக்கிக் கட்டினான். தனது கோட் சூட்களைக் கழட்டி காரிலேயே போட்டுவிட்டு பழைய நான்கு முழம் வேட்டிக்கு மாறினான். காரின் கண்ணாடியில் அவன் முகம் பார்த்தபோது, அவன் வினய்யாகவே இருந்ததைக் கண்டான். திருப்தியாக இருந்தது. போதும் போ என்று நடக்க ஆரம்பித்தான்.

மறுநாள் செய்தித்தாள்களில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் கார் திருடுபோனது பற்றிய செய்தி சிறிதாக வந்திருந்தது. ஆனால், திருடுபோன கார் திரும்ப வந்து அதே இடத்தில் நின்ற செய்தி அதற்கு அடுத்த நாள் வந்ததா என்று வினய்க்குத் தெரியவில்லை. அவன் அன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு குருக்ஷேத்திரத்துக்குப் போய்விட்டிருந்தான்.

வினய் எனக்குச் சொன்ன இந்த சம்பவத்தை நான் வினோத்திடம் சொன்னபோது அவன் சட்டென்று கேட்டான், ‘இதில் என்ன சாதித்தாய்?’

‘உனக்குப் புரியாது வினோத். எனக்கு ஜனாதிபதி மாளிகையின் அமைப்பும் வழிகளும் இப்போது மனப்பாடம். ஆயிரம் மைல்கள் தள்ளி அமர்ந்துகொண்டு என்னால் அங்கே சில காரியங்களைச் செய்ய முடியும்’.

‘இதற்கும் ஆன்மிகத்துக்கும் என்ன சம்மந்தம்?’ என்று வினோத் கேட்டபோது நான் சிரித்தேன். ‘பிரச்னையே அதுதான் வினோத். ஆன்மிகம் என்று அவன் நம்பிச் சென்று விழுந்த இடம் இது’ என்று சொன்னேன்.

‘இல்லை. இது அதர்வத்தில் ஒரு பகுதியாக வருகிற கலை. என் மனோசக்தியைத் தூர உள்ள பிரபஞ்சப் பொருள்களின் மீது செலுத்தி அவற்றை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர என்னால் முடியும்’.

‘பொருள்களை மட்டும்தானே’.

வினய் சிறிது யோசித்தான். ‘ஆம். பொருள்களைத்தான். சிறிது முயற்சி செய்தால் மனிதர்களையும் செய்யலாம்’.

‘என்ன லாபம் அதில்?’

‘நீ பசி பார்த்திருக்க மாட்டாய் வினோத். அதான் இப்படிக் கேட்கிறாய். நான் மாதக்கணக்கில் பட்டினி கிடந்தவன். இரண்டு இட்லிக்காக ஒரு பெரிய தெருச்சண்டை போட்டிருக்கிறேன். ஒரு சமயம், ஒரு டீக்கடை பாய்லரைத் தூக்கிப்போட்டு உடைத்திருக்கிறேன்’ என்று வினய் சொன்னான்.

எனக்கு அது மிகவும் பரிதாபமாக இருந்தது. ‘தவறு செய்துவிட்டாய் வினய். ஜனாதிபதி மாளிகையில் உள்ள பூச்செண்டை உன்னால் உன்னிடத்துக்கு வரவழைக்க முடியும் என்றால், இரண்டு இட்லிகளை வரவழைத்துத் தின்ன முடியாதா?’

‘முடியும். ஆனால் அது தவறு. அதை நான் செய்தால் என் சக்திகள் என்னைவிட்டுப் போய்விடும்’.

‘அப்படியா?’

‘ஆம்’ என்று சொல்லிவிட்டுச் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு, ‘நான் அனைத்தையும் இழந்ததே அப்படி ஒரு தருணத்தில்தான்’ என்று சொன்னான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com