இந்தியப் பெண்கள் குறித்து எனக்குப் பல கனவுகள் உண்டு: ப்ரியங்கா சோப்ரா!

எனது கனவுகளில் முக்கியமானது பெண் குழந்தைகள் கடைப்பொருட்களாகக் கருதப்படக் கூடாது என்பதும் தான். அவர்கள் இனவிருத்திக்காக மட்டுமே படைக்கப் பட்டவர்கள் அல்ல.
இந்தியப் பெண்கள் குறித்து எனக்குப் பல கனவுகள் உண்டு: ப்ரியங்கா சோப்ரா!

இந்திய நடிகைகளில் குறிப்பாக பாலிவுட் நடிகைகளிடையே செல்லுமிடமெங்கும் வெற்றி மேல் வெற்றியாகக் குவித்துக் கொண்டு நாளுக்கு நாள் சர்வதேச அளவில் கொண்டாடப் படும் நடிகைகளில் முக்கியமானவர் ப்ரியங்கா சோப்ரா. ஆரம்பத்தில் கல்விக்காக அமெரிக்கா சென்ற போது இவரது மாநிறத்தைக் காரணம் காட்டி இரண்டாம் தரமாக நடத்தப்பட்ட வேதனை இவருக்கு உண்டு. அப்போது அமெரிக்காவின் நிறவெறி கண்டு சுணங்கியவரை 2003 ஆம் ஆண்டில் வென்றெடுத்த உலக அழகிப் பட்டம் இன்று உச்சாணிக் கொம்பில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. அன்று நிறத்தைக் காரணம் காட்டி ஒதுக்கிய அமெரிக்கர்கள் இன்று குவாண்டிகோ டெலி சீரியலுக்காக தலையில் தூக்கிச் சுமக்காத குறையாகக் கொண்டாடுகிறது. பாலிவுட், ஹாலிவுட், அமெரிக்க டெலி சீரியல் என ஒருநாளின் 24 மணி நேரங்கள் போதாமல் படு பிஸியாகப் பறந்து கொண்டிருக்கிறார் ப்ரியங்கா.

அந்த பிஸி செட்யூலிலும் யுனிசெஃப் நன்னம்பிக்கைத் தூதராக, பெண்கள், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் ஆகியோரின் சுகாதார மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு உலக நாடுகளுக்கிடையில் பல்வேறு துறைகள் சார்ந்த திறன் பரிமாற்றத்திற்கான ஒரு தளமான  ‘தி பார்ட்னர்ஸ்’ எனும் இணையதள விவாதக் களத்தை துவக்கி வைக்க தலைநகர் டெல்லி வந்திருந்தார்.

இது மத்திய சுகாதார, குடும்ப நலத்துறை அமைச்சகத்தால், தாய், சேய் நலத்துக்கான பங்களிப்புடன் (PMNCH) அரசின் ஏனைய ஆதரவாளர்களின் கூட்டணியில் இணைந்து நடத்தப்படுகிறது.

ஒரு இந்தியப் பெண்ணாக ப்ரியங்காவின் பொது வாழ்க்கை மற்றும் கலைப் பயணம் அவரது 17 வயதில் உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்ட நாள் முதல் தொடங்கியது. 2003 ஆம் ஆண்டின் உலக அழகியாகப் பட்டம் சூட்டப்பட்ட ப்ரியங்கா அதைத் தொடர்ந்து தி ஹீரோ, லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை, உள்ளிட்ட பாலிவுட் திரைப்படங்களில் நாயகியாக நடித்தார். தற்போது அமெரிக்க டெலிவிஷன் தொடரான குவாண்டிகோவின் நாயகியாக உலகம் முழுதும் தெரிந்த முகமாகி இருக்கிறார்.

ப்ரியங்காவின் கலைத்துறை சார்ந்த வெற்றிகளைப் பார்த்தீர்களானால் 2016 ஆம் ஆண்டில், அவர் அகாதெமி விருதுகள் மற்றும் எம்மி விருது விழாவில் ஒரு தொகுப்பாளராகக் கலந்து கொண்டார், வெள்ளை மாளிகையின் வருடாந்திர டின்னர் விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு கெளரவிக்கப் பட்டார். இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த கெளரவமான பத்மஸ்ரீ விருதையும் பெற்றார். டைம் இதழ் வெளியிட்ட உலகின் 100 செல்வாக்கு மிகுந்த பெண்கள் பட்டியலிலும் இடம்பெற்றவரானார்.

இத்தனை பெருமைகளுக்குச் சொந்தக்காரரான ப்ரியங்காவிடம்ல்; உங்களது வெற்றிகளை எவ்விதம் சாதித்தீர்கள் என்று கேள்வியெழுப்பினால்; பெண்களுக்கு பிறவியிலேயே பல்வேறு பாத்திரங்களை ஒரே நேரத்தில் ஏற்று வெற்றிகரமாகச் செயல்படுத்தக் கூடிய திறன் உண்டு. அந்தத் திறனே அவர்களது எதிர்கால வெற்றிகளைச் சாத்தியமாக்குகிறது என்கிறார். 

ப்ரியங்கா ஐஏஎன்எஸ் க்கு அளித்த பேட்டியின் மொத்த சாராம்சம் இது தான்...

இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே பெண்களுக்கு எத்தனை திறமை இருந்த போதும் அவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே கருதப்படுகிறார்கள். ஆண்களுக்கு நிகராகப் பெண்களைக் கருத இந்த உலகம் தயங்குகிறது. இந்த நிலை மாற வேண்டும் அல்லது பெண்களால் வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டே ஆகவேண்டும். பெண்கள் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் செட்டில் ஆவதெல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதி தான். அது மட்டுமே ஒட்டுமொத்தமான வாழ்க்கை என்றாகி விடாது. அதோடு அவர்களது வாழ்க்கை முடிந்து விடக்கூடாது. எந்த குடும்பம் பெண்களின் கனவுகளை, எதிர்கால லட்சியங்களை மதித்து அவர்களது விருப்பங்களையும் அங்கீகரிக்கிறதோ அப்படிப்பட்ட குடும்பங்களுடன் பெண்கள் திருமண பந்தத்தில் இணைய வேண்டும். அப்படியான நம்பிக்கையை பெண்களின் மனதில் அவர்களின் பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் பெண்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கருதப்படும் நிலை மாறும். அந்த மாற்றம் இன்னும் பத்தாண்டுகளுக்குள் ஈடேற வேண்டும் என்று நான் கருதவில்லை... எனது வாழ்நாளுக்குள் ஈடேறினாலும் சரி தான். என்னைப் பொறுத்தவரை இன்றைய தலைமுறைப் பெண்களைப் போலவே எதிர்கால சந்ததியினரும் இரண்டாம் தரப் பிரஜைகளாக மதிப்பிழந்து நடத்தப்படக் கூடாது. 

எனக்குப் பல கனவுகள் உண்டு. எந்தக் குழந்தையும் இரவில் பசி ஏக்கத்துடன் தூங்கக் கூடாது என்பதும் அதில் ஒன்று. எனது கனவுகளில் முக்கியமானது பெண் குழந்தைகள் கடைப்பொருட்களாகக் கருதப்படக் கூடாது என்பதும் தான். அவர்கள் இனவிருத்திக்காக மட்டுமே படைக்கப் பட்டவர்கள் அல்ல. இந்த மாற்றங்கள் நிகழ வேண்டுமெனில் எந்தத் துறையென்றாலும் சரி அதில் பெண்கள் சாதிக்க நாம் அவர்களை அனுமதிக்க வேண்டும். தங்களது திறமையின் அடிப்படையில் பெண்கள் சாதனைகளை நிகழ்த்தி தங்களை நிரூபிக்கக் கூடிய வாய்ப்புகளை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும். சர்வதேச அளவில் பெண்களுக்கான வரையறைகள் மாற வேண்டும். சமூகத்தில் பெண்களின் இன்றைய நிலை மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும். என்கிறார் ப்ரியங்கா.

ஹாலிவுட்டுக்கும், பாலிவுட்டுக்கும் இடையிலான தொடர் கலைப்பயணத்தின் இடையில் ப்ரியங்கா தற்போது குவாண்டிகோ டெலிவிஷன் தொடரில் பிஸியாக இருந்தாலும் படத்தயாரிப்பு, வெப் சீரிஸ், டெலிவிஷன் சீரியல் என எல்லா நேரங்களிலும் தன்னை கொஞ்சமும் ஓய்ந்திருக்க விடாமல் அனத்து வேலைகளிலும் முழு ஈடுபாட்டோடு பங்கேற்கத் தக்க வகையில் சுறுசுறுப்புத் தேனீயாக இயங்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஏன் தற்போது அதிகமாக பாலிவுட் திரைப்படங்களில் ப்ரியங்காவைக் காண முடிவதில்லை எனும் கேள்விக்குப் பதிலளிக்கையில்;

நான் தொடர்ந்து இயங்கிக் கொண்டே தான் இருக்கிறேன். புதிய இந்தித் திரைப்படங்களில் நான் இல்லை என்பதால்... நான் இந்தியில் நடிக்கவில்லை என்று அர்த்தமில்லை. என்னை ஈர்க்கக் கூடிய விதத்தில் அமையும் திரைப்படங்களை மட்டுமே இப்போது ஒப்புக் கொள்கிறேன். ஏனெனில்... இந்த வருடம் மட்டும் மொத்தம் 7 திரைப்படங்கள் தயாரித்திருக்கிறேன். நான் பங்கேற்கும் டெலிவிஷன் சீரியல் மொத்தம் 64 நாடுகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இப்படி நான் தொடர்ந்து வேலை செய்து கொண்டே தான் இருக்கிறேன். பாலிவுட்டிலும் சரியான கதை அமைந்தால் உடனே பணியாற்றத்தான் செய்வேன். என்னால் வேலையின்றி சோர்ந்து போய் ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருக்க முடியாது.

என்னால் எனது வேலையில் சமரசம் செய்து கொண்டு குறைவாகவோ அல்லது ஈடுபாடு இன்றியோ ஒருபோதும் இருக்க முடியாது. என்று சிரிக்கிறார்.

அவரது சிரிப்பில் சாதித்த பெருமை மட்டுமல்ல சமூக அக்கறையும், பெண்களுக்கான சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் போராட்ட குணமும் இணைந்து பிரகாசித்தது.

ஐஏஎன்எஸ்க்காக ஆங்கிலத்தில் - நிவேதிதா

தினமணி இணையதளத்துக்காக தமிழில் கார்த்திகா வாசுதேவன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com