கடலோரக் கவிதைகள் 'ராஜா' எங்கே போனார்?!

தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து போர் அடிக்கிறது. எப்போது பார்த்தாலும் கோட் ஷூட் மாட்டிக் கொண்டு ஃபாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளை மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து என்னை நானே திருப்தி 
கடலோரக் கவிதைகள் 'ராஜா' எங்கே போனார்?!

சில நடிகர்களை நம்மால் மறக்க முடியாது. ஏதோவொரு விதத்தில் அவர்கள் நம் நினைவில் தங்கிவிடுகிறார்கள். திடீரென பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை எங்கேனும் யூ டியூப் நேர்காணல்களில் காணும் போது அட... இவர்களை பல காலங்களாகத் தமிழ் சினிமாக்களில் காணோமே?! இத்தனை நாட்களாய் சினிமாக்களில் தலைகாட்டாமல் இவர்கள் வேறென்ன செய்து கொண்டிருந்திருப்பார்கள் என்று யோசிக்க வைத்து விடுவார்கள். அவர்கள் சினிமாவை விட்டு விட்டு வேறு ஏதேனும் லாபமிக்க தொழில்களை நாடிச் சென்று விட்டிருக்கலாம். ஆனால் மக்களின் பொதுப்புத்தியில் அவர்கள் என்றென்றைக்குமாய் சினிமா நடிகர்களாகவே பதிந்து விட்டபடியால், அவர்களது முதல் எண்ணமே... இவர் ஒரு நடிகராயிற்றே, நடிப்பதைக் காட்டிலும் இவருக்கு வேறென்ன வேலை இருக்க முடியும்? என்பதாகவே அமைந்து விடுகிறது. 

அப்படித்தான் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ராஜாவை ஒரு தெலுங்கு நேர்காணலில் காணும் போது தோன்றியது.

ராஜா இப்போது திரைப்படங்களில் நடிப்பதில்லை. இன்றைய தேதிக்கு அவர் ஒரு தேர்ந்த பிஸினஸ் மேன். காஸ்மிக் கிரானைட்ஸ் என்ற பெயரில் கிரானைட் தொழிலதிபராக செட்டிலாகி விட்டார். 

ஏன் தமிழ்த் திரைப்படங்களில் உங்களைக் காண முடிவதில்லை?

- என்ற கேள்விக்கு;

தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து போர் அடிக்கிறது. எப்போது பார்த்தாலும் கோட் ஷூட் மாட்டிக் கொண்டு ஃபாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளை மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து என்னை நானே திருப்தி செய்து கொள்ள முடியாமல் அங்கு நீடிப்பதை விட வேறு தொழிலில் ஈடுபடலாம் என்று தோன்றியது. அதனால் எனது மாமனார் மற்றும் சகோதரரர்களின் வழிகாட்டுதலில் கிரானைட் தொழிலில் இறங்கி விட்டேன். அது தற்போது நன்றாகப் போகிறது. அதனால் உப்புச் சப்பில்லாத கதாபாத்திரங்களில் நடிக்கச் சொல்லிக் கேட்டு யாரெனும் இயக்குனர்கள் அணுகினால், முகத்திலடித்தாற் போல் சட்டென மறுத்துக் கேட்பவர்களைக் காயப்படுத்துவதைக் காட்டிலும் என்னுடைய சம்பளத்தை அதிகமாக ஏற்றிச் சொல்லி விடுவேன். அதனால் இப்போது அப்படியான அழைப்புகள் குறைந்து விட்டன எனச் சிரிக்கிறார்.

ஒரு ஹீரோவுக்கு உண்டான அனைத்து லட்சணங்களும் இருந்தும் ஏன் உங்களால் தமிழிலோ அல்லது தெலுங்கிலோ உங்கள் கேரியரில் முன்னணி லிஸ்டுக்கு வர முடியவில்லை?

நடிக்க வந்த போது எனக்கு வயது 21. நடிப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை என்று சொல்வதைக் காட்டிலும் அதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். திடீரென நடிகனானேன். பாரதிராஜா, கடலோரக் கவிதைகளுக்காக என்னைத் தேர்ந்தெடுக்கும் போது அங்கே அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான முயற்சிகளுடன் தடித்தடியான ஆல்பங்களுடன் கிட்டத்தட்ட 40, 50 பேர் காத்திருந்தார்கள். நான் அப்படி எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. எனக்கு வெகு எளிதாக பாரதிராஜா படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. அந்த வாய்ப்புகளை அடுத்து நான் பெரிதாக பிளானிங் எதுவும் செய்யவில்லை. இயல்பிலேயே.. நானாகப் போய் எந்த இயக்குனரிடமும் என்னை வைத்துப் படமெடுங்கள் என்று கேட்டதில்லை. அப்படித் தேடிப் போய் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் கேட்கும் இயல்பு எனக்கு இல்லாதா காரணத்தால் என்னை வைத்து புதிய முயற்சிகளில் ஈடுபடும் எண்ணமும் அப்போது யாருக்கும் வராமல் போய்விட்டது.

ராஜா இடம்பெற்ற சில திரைப்படங்கள்...

  • கடலோரக் கவிதைகளில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்விக்கப்பட்ட புதுமுகம் ராஜா, பிறகு பாரதிராஜாவின் வேதம் புதிதில் சங்கர பாண்டியனாக சில சீன்களில் வந்து ஐயராத்துப் பெண் அமலாவுடன் ‘கைக்குட்டை காதல் கடிதம்’ எழுதிய பின் அருவியில் இருந்து தவறி விழுந்து இறந்து போவார். அந்தப் படத்தில் அவருக்கு அவ்வளவு தான் ரோல்.
  • ராஜா முழுமையாகத் தனது நடிப்புத் திறனைக் காட்டிய படம் என்றால் அப்படி ஒரு படமே தமிழில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த ‘இனி ஒரு சுதந்திரம்’ திரைப்படத்தில் ராஜாவுக்கு நடிக்க கொஞ்சம் ஸ்கோப் இருந்தாலும் அது நெகட்டிவ் கதாபாத்திரம் என்பதால் தமிழ்த் திரைப்படவுலகில் அவரது கேரியர் முன்னேற்றத்துக்கு அது எந்த விதமான பலனையும் தந்திருக்கவில்லை.
  • நடுவில் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ‘மாப்பிள்ளை’ திரைப்படத்தில் ரஜினியின் தம்பியாக ஒரு சில காட்சிகளில் வந்து போனார். தவிர... விசு திரைப்படங்கள் சிலவற்றிலும் தலைகாட்டினார். ஆனால் எதுவும் வொர்க் அவுட் ஆனதாகத் தெரியவில்லை. 
  • கடலோரக் கவிதைகள், வேதம் புதிதுவுக்குப் பிறகு மீண்டும் பல ஆண்டுகள் கழித்து தனது அறிமுக இயக்குனரான பாரதிராஜா இயக்கத்திலேயே ‘கேப்டன் மகள்’ திரைப்படத்தில் நடித்தார். படம் அப்படி ஒன்றும் பெரிய ஹிட் இல்லை. ஆனால், அதில் இடம்பெற்ற ஒரு பாடல் இன்றும் இளைஞர்களின் ஹிட்லிஸ்டில் உண்டு. அது;
  • ‘எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று... அது ஏதோ ஒன்று உன்னிடம் இருக்கிறது’ என்ற் பாடல். படத்தில் கேப்டன் மகளான குஷ்பூவைப் பார்த்து, ராஜா வாயசைக்க எஸ்.பி.பி பாடிய பாடல் அது. மீண்டும் இரண்டாண்டுகள் இடைவெளிக்குப் பின் பாரதிராஜா இயக்கத்தில் ‘கருத்தம்மா’ வில் நாயகனானார். மகேஸ்வரி, ராஜஸ்ரீ என இரண்டு நாயகிகள்... ராஜாவுக்கு கரிசக்காட்டு டாக்டர் வேடம் ஆனாலும் என்ன புண்ணியம் படம் படு ஃப்ளாப். 
  • பாரதிராஜாவுக்கு முந்தைய திரைப்படமான கிழக்குச் சீமையிலே சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் அடுத்த படமே அவரை அதலபாதாளத்துக்குத் தள்ளுமென அவரே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. கருத்தம்மா பெண் சிசுக்கொலை நல்ல கருத்தான படமாக இருந்தும் ஏனோ படம் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் ஆகாததோடு கலெக்‌ஷன் ரீதியாகத் தோல்விப் படமென்றும் குறிப்பிடும் படியாக ஆயிற்று. அதே காலகட்டத்தில் பாலுமகேந்திராவின் சதி லீலாவதியில் சில காட்சிகளில் மட்டும் ராஜா நடித்திருந்தார். 
  • இந்தப் படங்கள் தவிர... அதிசய மனிதன், புது வசந்தம், ப்ரியங்கா, வா அருகில் வா, கற்பூர முல்லை, எங்க முதலாளி, லவ் பேர்ட்ஸ், மீண்டும் சாவித்ரி, காதல் கோட்டை, அருணாச்சலம், இனியவளே உட்பட டஜனுக்கும் மேலான திரைப்படங்களில் உதிரிக் கதாபாத்திரங்களில் சில காட்சிகளில் வந்து சென்றார். அவ்வளவு தான் அப்புறம் 2000 க்குப் பிறகு நடிகராக ராஜாவை எங்கும் எதிலும் காண முடிந்ததில்லை.

2000 க்குப் பிறகு தமிழ் சினிமாக்களில் தலை காட்டாததன் காரணம்?

ராஜாவுக்கு நடிப்புக்குத் தீனி போடத்தக்க வேடங்கள் செய்ய ஆசை. ஆனால், அந்த ஆர்வத்தைப் பற்றி அவரால் அவர் நடிக்க வந்த புதிதில் அவருக்கு வாய்ப்பளித்த பெரிய இயக்குனர்களிடம் பேச முடிந்ததில்லை. அவர்களுக்குப் பின் ராஜா பிற இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிக்கையில் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் நடிக்க பெரிதாக வாய்ப்பின்றி எல்லாமே செட் பிராப்பர்ட்டி மாதிரியான திரையில் அந்தந்தக் காட்சிகளில் சும்மா வந்து செல்லும் கதாபாத்திரங்களாகவே அமைந்து விட்டன. நடந்ததெல்லாம் இப்படியாகவே இருந்ததால் முன்பு கிடைத்த வாய்ப்பில் தன்னை ஒரு வெற்றிகரமான ஹீரோவாக நிலை நிறுத்து வாய்ப்பு அவருக்குக் கிடைக்காமலே போய்விட்டது. ஆனாலும் அதனால் தனக்கு வருத்தமெதுவும் இல்லை என்கிறார் ராஜா. வாழ்க்கையை அந்தந்த நொடியில் வாழ வேண்டும் என்ற கொள்கை எனக்கு உண்டு. எனவே முன்பு நடந்ததைப் பற்றி விசனப்பட்டுக் கொண்டு இருக்காமல் இப்போதைய எனது தொழில் வெற்றிகளைக் கண்டு நான் மகிழ்கிறேன். நடிகர்களுக்கு நடிப்பது ஒன்று மட்டுமே வாழ்க்கை நடத்துவதற்கான ஒரே உபாயமாக இருக்கத் தேவையில்லை. அவர்கள் வெவ்வேறு தொழில்களிலும் கூட ஈடுபட்டு தங்களை அதிலும் வெற்றியாளர்களாக நிரூபிக்கலாம் என்கிறார் அவர்.

தெலுங்கு நடிகரான ராஜா தமிழுக்கு வந்த கதை...

எனக்குத் தமிழ் இண்டஸ்ட்ரியில் யாரையும் தெரியாது. பாரதிராஜா கடலோரக் கவிதைகளுக்காக என்னைத் தேர்ந்தெடுத்து விட்டு பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்த அழைத்தார். அப்போது என் பெயர் வெங்கடேஷ். தமிழுக்கு அந்தப் பெயர் வேண்டாம் என்று கருதிய ராஜா என்னிடமே, உன் பெயரை சினிமாவுக்காக மாற்றலாம் என்றிருக்கிறேன்... உனக்குப் பிடித்த பெயர் ஒன்றைச் சொல் அதையே வைத்து விடலாம் என்றார், நான் எனக்கு ‘பரத்’ என்ற பெயர் பிடிக்கும் என்றேன்... ஒருமுறை பரத் என்று உச்சரித்துப் பார்த்த பாரதிராஜா... வேண்டாம் பரத் என்ற பெயரும் தமிழுக்கு ஒத்து வராது. நான் என் பெயரில் பாதியைத் தருகிறேன். நீ இன்றிலிருந்து ராஜா என்றார். அப்படித்தான் நான் ராஜாவானேன்! என் திரை வாழ்வில் நான் என்றென்றும் பாரதி ராஜாவை மறக்கவே மாட்டேன். அவர் மீது ஒரு குருவுக்கான பக்தி என்னிடம் இருக்கிறது.

மீண்டும் வாய்ப்புக் கிடைத்தால் நடிப்பீர்களா?

இப்போது நான் கிரானைட் தொழிலில் இருந்தாலும், அடிப்படையில் நான் நடிகன் என்ற இமேஜ் தான் மக்களின் மனதில் இருக்கிறது. தொழில் நிமித்தமாக யாரையாவது சந்தித்தாலும் கூட, அவர்கள் எங்களது சந்திப்பின் முதல் 20 நிமிடங்களுக்கு எனது திரை வாழ்வைப் பற்றித்தான் பேச விரும்புகிறார்கள். வியாபாரமெல்லாம் அதற்குப் பிறகு தான். சில நேரங்களில் இந்த அணுகுமுறையில் எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் கூட மக்கள் கேட்கும் போது அவர்களிடம் அதைப் பற்றிப் பேசிக் கடந்த பின்னரே தொழிலைப் பற்றிப் பேச முடிகிறது. ஆக, நான் நடிகன் என்ற இமேஜை நானே நினைத்தாலும் மாற்ற முடியாது. வாய்ப்புகளைப் பொறுத்தவரை நான் முன்னரே தெரிவித்தபடி, நடிப்புத்திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக சவாலான வேடங்களுடன் என்னை யாராவது அணுகினால் நிச்சயம் நான் நடிக்கத் தயார். எனக்கென்று ஒரு ஸ்திரமான தொழில் இருக்கிறது, நடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் நானில்லை என்பதால்  நல்ல வேடங்கள் கிடைத்தால் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருக்கிறேன் என்கிறார்.

சரி தான்... தெளிவாகத் தான் சிந்திக்கிறார்.

ராஜாவைப் பற்றி அறியப்படாத சுவாரஸ்யங்கள் சில...

தமிழில் இயக்குனர் பாரதிராஜா அறிமுகமாகக் குறிப்பிடப்பட்டாலும் ராஜாவின் முதல் தமிழ்த் திரைப்படமாகக் கருதப்படுவது 1981 ல் வெளிவந்த ‘பாக்கு வெத்தல’ திரைப்படம் தான்.

ராஜாவின் முழுப்பெயர் டகுபதி ராஜா, இவரது சிற்றப்பா டகுபதி ராமா நாயுடு. தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளர். மிகக் குறுகிய காலகட்டத்தில் மிக மிக அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களை எடுத்துக் குவித்தவர் என்பதால் டிராமா நாயுடு என்ற பட்டப்பெயரும் அவருக்கு உண்டு. தெலுங்கில் முந்தைய தலைமுறை டாப் டென் ஹீரோக்களில் ஒருவரான டகுபதி வெங்கடேஷ், ராஜாவின் தந்தை வழி நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com