பாகம்-10: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பற்றிய முக்கிய விவரங்கள்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளை வாங்க பலரும் விரும்புவார்கள். ஆனால் அதனை எப்படி வாங்க வேண்டும் என்று தெரியாமல் இருக்கலாம்.
பாகம்-10: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பற்றிய முக்கிய விவரங்கள்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளை வாங்க பலரும் விரும்புவார்கள். ஆனால் அதனை எப்படி வாங்க வேண்டும் என்று தெரியாமல் இருக்கலாம்.

அதற்கான ஒரு விரிவான விளக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் [TAMIL NADU HOUSING BOARD]

தமிழக மக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ற விலையில் வீட்டுவசதித் திட்டங்களை உருவாக்கி, மக்களின் வீட்டுவசதித் தேவையினை பூர்த்தி செய்வதே தமிழ்நாடு வீட்டுவசதி  வாரியத்தின் தலையாய நோக்கமாகும்.

வாரியத்தின் நோக்கம்

தமிழ்நாட்டின் பல்வேறு தரப்பட்ட மக்களின் விருப்பத்தினை வீட்டுவசதிதித் தேவையினை நிறைவேற்றும் பொருட்டு மக்கள் நெருக்கத்தை குறைக்கவும், மாபெரும் நகரங்களின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்தவும் மற்றும் சிறந்த முறையில் வீட்டுவசதி  செய்து தர கீழ்க்காணும்  திட்டங்களை செயல்படுத்துதல்.

  • 1) அபிவிருத்தி செய்யப்பட்ட மனைகளை உருவாக்குதல்.
  • 2) சமுதாயத்தில் பலதரப்பட்ட மக்களுக்கும் தேவையான வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுதல்.
  • 3) தரமான பொருட்களைக் கொண்டு உயர் தரமான வடிவமைப்புள்ள குறைபாடுகள் இல்லாத கட்டடங்கள் கட்டுதல்.
  • 4) மக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ற விலைகளில் குடியிருப்புகள் கட்டுதல்.
  • 5) வீட்டுவசதி நிதி  நிறுவனம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுத்தர ஏற்பாடு செய்தல்.
  • 6) தெளிவான மற்றும் விற்பனைக்கேற்ற உரிமைப்பத்திரத்தை உறுதிப்படுத்துதல்.
  • 7) நியாயமான மற்றும் வெளிப்படையான செயல்பாடுகள்.
  • 8) நுகர்வோரின் திருப்திக்கேற்ப விற்பனைக்குப் பின்னர் உயர்தரமான சேவைகளை அளித்தல்.
  • 9) முக்கிய நகரங்களுக்கு அருகில் துணைக்கோள் நகரங்களை உருவாக்குதல்.
     

மேலும் அறிந்து கொள்ள.. முந்தைய கட்டுரைகள்..
பாகம்-2.. நகரங்களில் இடம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

வாரியத்தின் பொறுப்பான சேவைகள் பின்வருமாறு:-

  • 1) வாரியத் திட்டங்களில் ஒதுக்கீடு பெற்ற அலகுகளுக்குரிய (மனை/வீடு/அடுக்குமாடி குடியிருப்பு) விற்பனைப் பத்திரம் கோரி ஒதுக்கீடுதாரர்களிடமிருந்து தேவையான ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து எழுத்து மூலமான கோரிக்கை பெற்ற தினங்களுக்குள் சம்மந்தப்பட்ட ஒதுக்கீடுகளுக்குரிய (மனை / வீடு / அடுக்குமாடி குடியிருப்பு) விற்பனைப் பத்திரம் வழங்கப்படும்.
  • 2) தொழில்நுட்ப அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் சிறிய பழுதுகள் சீர் செய்யப்படும்.
  • 3) தமிழ்நாடு வீட்டுவசதி  வாரியத்தில் ஒதுக்கீடு பெற்ற அரசு அலுவலர்கள், தங்களது ஒதுக்கீட்டிற்கு வீட்டுக் கடன் கோரி அரசிடம் விண்ணப்பிக்கும் போது, அதற்கு தேவையான “ஏ” மற்றும் “பி” சான்றிதழ்கள் ஒதுக்கீடு பெற்ற அரசு அலுவலர்கள் விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும்.
  • 4) வருமான வரி தள்ளுபடி பெறுவதற்காக, ஒதுக்கீடுதாரர்களால் செலுத்தப்பட்ட அசல் மற்றும்வட்டிக்கான பகுப்புச் சான்றிதழ் விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் வழங்கப்படும்.
  • 5) அரசு அலுவலர் அல்லாத ஒதுக்கீடுதாரர்கள், வங்கி மற்றும் இதர நிதி  நிறுவனங்களிடம் வீட்டுக் கடன் கோரி, விண்ணப்பிக்கும் போது, அதற்கான “ஏ” மற்றும் “பி” சான்றிதழ்கள் அவர்கள் விண்ணப்பித்த 10  தினங்களுக்குள் வழங்கப்படும்.
  • 6) ஒதுக்கீடுதாரர் விற்பனைப் பத்திரம் பெறுவதற்கு முன்பாக காலமடைந்துவிட்டால், அவரது சட்டப் பூர்வமான வாரிசுதாரர்களுக்கு வாரிய விதிமுறைகளுக்குட்பட்டு, ஒரு மாத காலத்திற்குள் பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
  • 7) சென்னை, வாரியத் தலைமையகத்தில் செயல்படும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுக்கூடத்தில்,கட்டுமானப் பொருட்களான செங்கற்கள், இரும்புக்கம்பிகள், மொசைக், அழுத்தம் செய்யப்பட்ட ஓடுகள் ஆகியன குறைந்த விலையில் பரிசோதனை செய்யப்பட்டு, 10 நாட்களுக்குள் முடிவு தெரிவிக்கப்படும்.

வாரியத்தின் செயல்பாடுகள்

தமிழ்நாடு வீட்டுவசதி  வாரியம், பொருளாதார அடிப்படையில், பொது மக்களின் தேவைக்கேற்ப, பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவினர், மத்திய வருவாய் பிரிவினர் மற்றும் உயர் வருவாய் பிரிவினர் ஆகியோர்களுக்கென மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கத்தக்க விலையில், மனைகளுக்கு 8 ஆண்டுகள் என்ற அளவிலும், வீடுகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் என்ற அளவிலும் தவணை முறையில் தொகை செலுத்தும் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், சுயநிதிப் பிரிவின் கீழ் வீடு மற்றும் பன்னடுக்குமாடி குடியிருப்புகளுக்கான  திட்டங்கள் முறையே 12 மாதங்கள், 18 மாதங்கள் மற்றும் 24 மாதங்கள் என்ற காலக்கட்டத்தில் திட்டத்திற்கான தொகையினை செலுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், மனை/வீடு/அடுக்குமாடி குடியிருப்புகள் மொத்த கொள்முதல் விலையிலும் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவை தவிர, பள்ளி மனைகள், பொது உபயோக மனைகள், வணிக/கடை மனைகள், பூங்கா மனைகள் மற்றும் விளையாட்டு திடல் ஆகியவற்றிற்கான இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும், அரசின் சார்பாக வீட்டுவசதி  வாரியம் அரசு ஊழியர்களுக்காக பிரத்தியேகமான தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகைக் குடியிருப்புத்  திட்டத்தின் மூலம் வாடகை குடியிருப்புகளை கட்டி, ஒதுக்கீடு செய்து பராமரித்து வருகிறது.

ஒதுக்கீடு பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகள் 

ஒதுக்கீடு பெறுவதற்கான  பல்வேறு பரிவினருக்கு ஒதுக்கீட்டிற்கான வருமான வரம்பு:-

மேலும், வாரியத்தின் சிறப்புத் திட்டங்களில், உள்ள குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்புகளை ஒதுக்கீடு பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.6.00 இலட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு செய்யப்படும் முறை

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, தனிநபர் அல்லது கூட்டுப்பெயரில் அந்தந்த பிரிவினருக்கான தகுதியின் அடிப்படையிலும் மற்றும் அரசால் வகுக்கப்பட்ட இட ஒதுக்கீடு அடிப்படையிலும், குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும். அவ்வாறு குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் போது, அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒதுக்கீடு குழுமத்தின் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்படும். ஒவ்வொரு நிதியாண்டிலும் குலுக்கல் நடத்தப்பட்ட பின்னரும், விற்பனையாகாமல் உள்ள  மனைகள்/வீடுகள்/அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகிய அலகுகளை முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

பல்வேறு  பிரிவினருக்கான ஒதுக்கீடுகள்
ஒதுக்கீடுகள் அரசு ஆணையின்படி, கீழ்க்கண்டவாறு பிரிவு வாரியாக ஒதுக்கீடுகள் செய்யப்படுகிறது:-


மேற்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இனம் எண்.1, 6 மற்றும் 10 ஆகியவற்றில் உள்ள விகிதாச்சார இனங்களில், 5 விழுக்காடு கலைஞர்களுக்காகவும், 1 விழுக்காடு அரசியல் நிமித்தமாக பாதிக்கப்பட்டோர்களுக்காகவும் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும், மேற்கண்ட அனைத்து பிரிவுகளிலும் மாற்றுத்  திறனாளிகளுக்கு 3 விழுக்காடு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

மனை/வீடு/அடுக்குமாடிக் குடியிருப்பு ஆகிய அலகுகளின் எண்ணிக்கையில், மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அலகுகளின் எண்ணிக்கை ஒன்றுக்கும் குறைவாக இருக்குமேயானால், அதனை ஒன்று என கணக்கிட்டு ஒதுக்கப்படும்.

மாநில அரசில் பணிபுரியும் நீதித் துறை அலுவலர்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட 2 விழுக்காடானது, மாநில அரசு ஊழியர்களுக்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டிலிருந்தே வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட இட ஒதுக்கீடுகள் கீழ்க்காணும் பிரிவுகளுக்கு பொருந்தாது:

  • 1) மொத்தக் கொள்முதல் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் இனங்கள்
  • 2) முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும் இனங்கள்

மொத்த கொள்முதல் விற்பனை ஒதுக்கீடு பின்வரும் இனங்களுக்கு மட்டும் பொருந்தும்:-

  • (i) 1) பொது மக்கள்
  • 2) மத்தியஅரசு ஊழியர்கள்
  • 3) முன்னாள் இராணுவத்தினர்
  • 4) வீடுகட்டும் முன்பணத்திற்கு விண்ணப்பிக்காத தமிழ்நாடு அரசு ஊழியர்கள்.
  • (ii) மொத்த கொள்முதல் விற்பனைக்குத் தகுதியற்ற இதர பிரிவினர்.

ஒதுக்கீடுதாரர்களின் நிதியினைப் பயன்படுத்தி, வாரியத்தால் செயல்படுத்தப்படுவது சுயநிதித் திட்டம் ஆகும். இவ்வகையான திட்டத்தில் செயல்படுத்தப்படும் அலகுகளுக்கு, முதன்முறையாக குலுக்கல் நடத்தப்படும் போது, மேலே தெரிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு விகிதாச்சாரத்தினைப் பின்பற்றி, முதல் குலுக்கலில் ஒதுக்கீடு செய்யப்படும். பின்னர், விற்கப்படாமல் உள்ள அலகுகளை, மேலே தெரிவிக்கப்பட்ட ஒதுக்கீடு விகிதாச்சாரத்தினை தவிர்த்து வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் 09.12.2010-ஆம் தேதியிட்ட அரசாணை (நிலை) எண்.286-இன் படி, ஒதுக்கீடு செய்யப்படும்.

பெயர் மாற்றம் 
உயிர் வாழ் ஒதுக்கீடுதாரர்கள் தாங்கள் பெற்ற ஒதுக்கீடு அலகுகளை பெயர் மாற்றம் செய்ய கோரும் போது ஒதுக்கீடுதாரரின் நேரடி இரத்த சம்மந்தமான பின்வரும் உறவுமுறை உள்ளவர்களுக்கு, பெயர் மாற்றம் செய்ய வாரியத் தலைமை அலுவலகத்தில் செய்யப்படுகிறது:-

  • தந்தை
  • தாய்
  • கணவர்
  • மனைவி
  • மகன்
  • மகள்

ஒதுக்கீடுதாரர், ஒருவேளை இறக்க நேரிட்டால், அவரது சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களில் ஒருவருக்கு, மற்ற வாரிசுதாரர்களின் ஒப்புதலுடன் சம்பந்தப்பட்ட கோதிட்டம்/பிரிவு அலுவலகங்களில் பெயர் மாற்றம் செய்யப்படும். மேலும், விதிவிலக்காக, திருமணமான மகன்கள்/மகள்கள் காலமாகியிருந்தாலும், அவர்களின் தகுதியுடைய பேரன்/பேத்திகளுக்கு முறையான ஆய்வுக்குப் பின்னர் பெயர் மாற்றம் செய்யப்படும்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட மனை/வீடு/குடியிருப்பு மாறுதல் செய்ய  ஒதுக்கீடுதாரரின் நியாயமான கோரிக்கையின் அடிப்படையில், வீடு/குடியிருப்பு மாறுதல் செய்ய, மாறுதல் கோரும் அலகு காலியாக இருக்கும் பட்சத்தில், உரிய ஆய்விற்குப் பின், சம்மந்தப்பட்ட சரக மேற்பார்வைப் பொறியாளர் அவர்களால் மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்படும்.

மனையாக இருப்பின், உரிய பரிசீலனைக்குப் பின், ஒதுக்கீடு கோரப்படும் மனை ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பின், வாரியத் தலைமை அலுவலகத்தால் மனைமாற்று உத்தரவு வழங்கப்படும்.

கிரயப் பத்திரம் வழங்குதல்

ஒதுக்கீடுதாரர் கிரயபத்திரம் பெறுவதற்கு தேவையான நிபந்தனைகள்:-

1) இறுதி செய்யப்பட்ட விலையினை முழுமையாக செலுத்தியிருக்க வேண்டும்.
2) நுண்ணாய்வுக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்.
3) ‘ஏ’ மற்றும் ‘பி’ சான்றிதழ் பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ வீட்டுக்கடன் பெற்றிருந்தால், விற்பனைப் பத்திரம் பெறும் முன்னர், கடன் வழங்கிய நிறுவனத்திடமிருந்தோ அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்தோ ஆட்சேபனையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
4) ஒதுக்கீடு தொடர்பான அசல் ஆவணங்கள், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் இருப்பிட முகவரிக்கான சான்று ஆகியவற்றினை சரிபார்த்து வழங்க வேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள்

ஒதுக்கீடுதாரர்கள் தங்களது ஒதுக்கீடு தொடர்பாக ஏதேனும் புகார்களுக்கு, உரிய கோட்டம் மற்றும் பிரிவுகளின் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர்களை அணுகி குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஒதுக்கீடுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் நிவர்த்தி செய்வதில் ஏதேனும் காலதாமதம் ஏற்பட்டால், மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அவர்களை ஒவ்வொரு திங்கட்கிழமையும் நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையில் குறைதீர்க்கும் நாளில் நேரில் தொடர்பு கொள்ளலாம். 

தொடரும்..

C.P.சரவணன், வழக்கறிஞர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com