சுடுமண் தேநீர் கோப்பைகள் பயன்படுத்துவது ரசனைக்குரியது மட்டுமல்ல ஆரோக்யமானதும் கூட! எப்படி?

கண்ணாடி சகஜமாகப் புழக்கத்துக்கு வந்த பின் வீடுகள் தவிர தனியார் உணவகங்கள் மற்றும் காஃபீ கிளப்புகள் வரை எல்லாம் கண்ணாடி டம்ளர்களே காபீ, டீ பானங்களுக்கு உகந்தவை என்றாகி பல பத்தாண்டுகளாகி விட்டன.
சுடுமண் தேநீர் கோப்பைகள் பயன்படுத்துவது ரசனைக்குரியது மட்டுமல்ல ஆரோக்யமானதும் கூட! எப்படி?

வாழ்வை ரசிக்கும் விஷயத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்!

சிலருக்கு ராஜாவின் இசையைக் கேட்டுக் கொண்டே, சொந்தக் காரில், சுயமாக டிரைவ் செய்து கொண்டு ஓஎம்ஆரில் லாங் டிரைவ் செல்லப் பிடிக்கலாம்.

சிலருக்கு மாலையுமல்லாது இரவுமல்லாது இடைப் பொழுதில் யாருமற்ற தனிமையில் மொட்டை மாடியில் நின்று கொண்டு பட்சிகளின் சத்தங்களைக் கேட்டுக்கொண்டே தன்னிச்சையாக சுய சிந்தனையில் ஆழ்ந்து போவது கூட மிக்க ரசனைக்குரிய விஷயமாக இருக்கலாம்.

இன்னும் சிலரோ பால்கனியில் நின்று தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டே ஸ்ட்ராங்கான ஃபில்டர் காஃபீயை மிடறு, மிடறாக விழுங்கும் பேரின்பத்தின் பரம ரசிகர்களாக இருப்பார்கள்.

சிலருக்கு நண்பர்களுடன் ஜமா சேர்ந்து கொண்டு விடிய, விடிய அரட்டைக் கச்சேரி செய்வது ரசனைக்குரிய விஷயமாக இருக்கலாம்.

சிலருக்கோ எதைச் செய்வதாக இருந்தாலும் அதில் கொஞ்சம் நமது பாரம்பரிய டச் இருந்தால் மட்டுமே அதை ரசனைக்குரிய விஷயமாக அவர்களால் கருத முடியும் எனும் அளவுக்கு பாரம்பரியப் ப்ரியர்களாக இருப்பார்கள். மேற்கண்டவற்றில் இந்தக் கடைசி ரசனை மட்டும் சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, பின்னாட்களில் அதைப் பார்த்துக் கடக்க வாய்ப்புள்ள அனைவருக்குமே கூட ஒருவகையில் ரசனைக்குரிய அம்சமாக மாறி விடும்.

இந்தப் பாரம்பரிய ரசனை என்ற விஷயத்தின் கீழ் நாம் பலவற்றைப் பட்டியலிடலாம்;

  • நறுவிசாக நமது தமிழ் பாரம்பரிய முறைப்படி மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்து காஞ்சிப் பட்டுப் புடவையோ அல்லது படு சுதந்திரமாக உணரும் வகையில் இரண்டு தட்டு வெள்ளை வேஷ்டியோ உடுத்திக் கொள்வது முதல், 

  • 60 கள் ஸ்டைலில் டபரா டம்ளர்களில் தஞ்சாவூர், குபகோணம் ஸ்பெஷல் ஃபில்டர் காஃபீ அருந்துவது;
  • பச்சை நூற்கண்டில் மொட்டவிழாது நெருக்கமாகக் கட்டப்பட்ட மதுரை குண்டுமல்லியை நீளப் பின்னிய ஜடையில் அசால்டாகச் சொருகிக் கொள்வது;

  • தலை வாழை இலையிட்டு, சீரகச் சம்பா சாதம் கூட்டி நட்ட நடுவில் செட்டிநாட்டு கெட்டிப் பருப்பில் தாராளமாக ஊத்துக்குளி நெய் விட்டுப் பிசைந்து கவளம் கவளமாய் ரசித்து, ருசித்து உண்ட கையை கழுவ மனமற்று உறவுகளுடன் நகைத்து களித்திருப்பது;
  • தெரு முக்கு நாயர் கடையின் இஞ்சிச் சாயாவை தி சேம் ஓல்டு கண்ணாடி கிளாஸில் சூடு பொறுக்க கையால் சுழற்றிச் சுழற்றிச் சிப், சிப்பாக அருந்திக் கொண்டே அரசியல் அக்கப்போர்களை அலசிக் காயப்போடுவது;

  • காலையின் மென்னிருட்டு களையாத அரைகுறை வெளிச்சத்தில் வராந்தாவில் உட்கார்ந்து கொண்டு சுடச் சுட பத்திரிகை வாசிப்பது;

வரையிலும் எல்லாமே நமது தமிழ் பாரம்பரியம் தான்.

தொன்று தொட்டு நாம் பழக்கப்படுத்திக் கொண்டு பின்பற்றி வரும் ரசனைக்குரிய அத்தனை விஷயங்களுமே நமது பாரம்பரியங்கள் தான்.

அந்த வரிசையில் இப்போதெல்லாம் நாம் கொஞ்சம் மறந்து விட்ட ஒரு பழக்கத்தைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் ஞாபகப் படுத்திக் கொள்ளவிருக்கிறோம்.

வட இந்திய பாணியில் சொல்வதென்றால் குல்ஹர் டீ கப்புகள். சுத்தத் தமிழில் சொல்வதென்றால் சுடுமண் தேநீர் கோப்பைகள். இவற்றை நாம் மறந்து தான் போனோம் இன்று!

ஆனால் ஒருமுறை இவற்றில் தேநீரோ, காஃபீயோ அல்லது மோரோ, தயிரோ அருந்திப் பழகி விட்டோமென்று வையுங்கள். அப்புறம் எப்போதும் அவற்றைத் தான் மனம் தேடத் தொடங்கும். அத்தனை அருமையான உணர்வுகளைத் தரக் கூடியவையாக இருக்கின்றன அந்தக் கோப்பைகள். இதைக் கலாப்பூர்வமாகச் சொல்வதென்றால் டெரகோட்டா தேநீர் கோப்பைகள் எனலாம். ஆனால் சுடுமண் தேநீர் கோப்பை என்பதில் இருக்கும் ஒரு நெருக்கம் டெரகோட்டா என்ற உச்சரிப்பில் இல்லை. 

சில மாதங்களுக்கு முன்பு, மகாபலிபுரம் செல்லும் வழியிலுள்ள ரிசார்ட் ஒன்றில் குடும்பத்துடன் தங்க நேர்ந்த போது, அங்குள்ள உணவகத்தில் இந்த சுடுமண் தேநீர் கோப்பையில் தான் டீ, காஃபீ, மோர், ஐஸ்கிரீம் என எல்லாவற்றையுமே பரிமாறினார்கள். முதலில் வித்யாசமாகத் தோன்றிய விஷயம் பிறகு ரசனைக்குரியதாக மாறி விட்டது. சூடான காஃபீ, டீ பானங்களை இந்தக் கோப்பையில் பரிமாறும் போது, அந்தச் சூட்டில் சுடுமண் கோப்பையின் உட்புறமுள்ள சுவர்ப்பகுதியின் மண் வாசமும், டீ வாசமும் கலந்தொரு மணம் நாசியை வருடும் போது இன்னும் இரண்டு முறை கூட டீ அருந்தலாமே என்றெழும் வேட்கையைத் தவிர்க்க முடியாதவர்களாவோம் நாம். அத்தனை அபார மணம், அதீத சுவை!

இம்மாதிரியான தேனீர் கோப்பைகள் இன்று, நேற்றல்ல ஹரப்பா, மொஹஞ்தாரோ காலம் தொட்டு நம் இந்தியாவில் புழக்கத்தில் இருந்திருக்கிறது.

அதற்கான சான்றுகள், நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடத்தப் பட்டு வரும் பல அகழ்வாராய்வுச் சோதனைகளின் போது கிட்டியிருக்கின்றன.

பாரம்பரியம், ரசனை என்பதைத் தாண்டி நாம் ஏன் நமது பானங்களை அருந்த சுடுமண் கோப்பைகளைப் பயன்படுத்த வேண்டும்? என்ற கேள்வி யாருக்காவது எழுமானால் அதில் கொஞ்சம் ஆரோக்யம் குறித்த விழிப்புணர்வும் உண்டெனச் சொல்லிக் கொள்ளலாம். 

ஏனெனில் இந்தியாவில் ஆரம்பத்தில் சரளமாகப் புழக்கத்தில் இருந்த இந்த சுடுமண் கோப்பைகளின் இடத்தை முதலில் ஆக்ரமித்தவை சீனக் களிமண்ணால் (போர்சலின்) செய்யப்பட்ட மிகுந்த வேலைப்பாடு கொண்ட டீக்கோப்பைகள்.

முகலாயர்கள் காலத்தில் இந்தக் கோப்பைகள் பெரிவாரியாக விரும்பப்பட்டன. சுடுமண்ணில் இருந்து சீனக் களிமண்ணுக்கு மாறிய மக்களின் ரசனை பிறகு உலோகங்கள் கண்டுபிடிக்கப் பட்டதும் தங்கம், வெள்ளி, பித்தளை, எவர்சில்வர் என்று மாறியது. ஆங்கிலக் காலனி ஆதிக்கத்தின் கீழ் வந்த பிறகு கண்ணாடி சகஜமாகப் புழக்கத்துக்கு வந்த பின் வீடுகள் தவிர தனியார் உணவகங்கள் மற்றும் காஃபீ கிளப்புகள் வரை எல்லாம் கண்ணாடி டம்ளர்களே காபீ, டீ பானங்களுக்கு உகந்தவை என்றாகி பல பத்தாண்டுகளாகி விட்டன.

ஆயினும் இன்னமும் மக்களில் ஒரு சாரர் தமது பழைய பாரம்பரிய ரசனைகளை மறக்க விரும்பவில்லை.

அவர்கள் தற்போது இப்படிப் பட்ட தேநீர் கோப்பைகளைப் பயன்படுத்துவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்களாக மாறி இருக்கிறார்கள்.

இந்த தேநீர் கோப்பைகளில் விரும்பத் தகுந்த/ விரும்பத் தகாத ஒரு அம்சம் என்றால் அது இவற்றை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது தான். சுடுமண்ணால் மட்டுமே உருவாக்கப்பட்டவை எனில் அவற்றை டிஸ்போசபிளாக மட்டுமே பயன்படுத்தலாம். ஆனால் இவற்றிலும் பாலிஸ்டெரின் என்ற வேதிப்பொருள் கலந்து சற்றே பள, பளப்பான சுடுமண் கோப்பைகள் தயாராகி மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கின்றன. அவற்றை சில மாதங்கள் வரை மீண்டும் பயன்படுத்தலாம், ஆனாலும் அசல் சுடுமண் கோப்பைகளோடு ஒப்பிடும் போது இவை ஆரோக்யத்துக்கு அத்தனை உகந்தவை அல்ல.

சரி, இப்போது சுடுமண் கோப்பைகளை உபயோகிப்பதால் கிடைக்கக் கூடிய ஆரோக்யப் பலன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்;

  • உண்மையில், சுடுமண் தேநீர் கோப்பைகள் கண்ணாடி, எவர்சில்வர், மற்றும் பிளாஸ்டிக், பேப்பர் உள்ளிட்ட அனைத்து வகை கோப்பைகளைக் காட்டிலும் அதிகமான ஆரோக்யப் பலன்களைக் கொண்டவையே!
  • ஸ்டைரோஃபோம் கோப்பைகளை விட சுடுமண் கோப்பைகள் சிறந்தவை...
  • சில இடங்களில் அல்ல, இன்று பல இடங்களிலும் கூட காபீ, டீ உள்ளிட்ட சூடான பானங்கள் ஸ்டைரோஃபோம் கோப்பைகளில் பரிமாறப்படுகின்றன. ஆனால், அவை மிகவும் ஆபத்தானவை. இம்மாதிரியான கோப்பைகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பாலிஸ்டிரின் மூலக்கூறுகள் சூடான பானங்களில் கரையும் தன்மை கொண்டவை மட்டுமல்ல, அவற்றால் கேன்சர் உள்ளிட்ட உயிர்கொல்லி நோய் வருவதற்கும் காரணமாகி விடக்கூடியவையாக உள்ளன.
  • ஸ்டைரோஃபோம் கப்களின் மோசமான விளைவுகள்...
  • கேன்சர் மட்டுமல்ல, பாலிஸ்டிரின் மூலக்கூறுகள் கரைவதால் ஒபிசிட்டி முதல் கவனக்குறைபாடு, கடுமையான சளித்தொல்லை, ஹார்மோன் குறைபாடுகள் வரை பல மோசமான உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் சுடுமண் கோப்பைகளில் இம்மாதிரியான பக்க விளைவுகள் எதுவும் இல்லை.
  • சுடுமண் கோப்பைகள் எப்போதுமே சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிப்பதே இல்லை. இந்தக் கோப்பைகளை டிஸ்போஸ் செய்யும் போது அவை உடனடியாக மக்கி மண்ணுடன் மண்ணாகி விடுகின்றன. ஆனால், அதுவே ஸ்டைரோஃபோம் கோப்பைகளை டிஸ்போஸ் செய்யும் போது, அவை மட்குவதற்கு குறைந்தபட்சம் 500 ஆண்டுகளாவது தேவைப்படுகின்றன. இதனால் பூமி வெப்பமயமாவது முதல் நில மாசுபாடு, நிலத்தடி நீர் பற்றாக்குறை வரை பல விதமான சூழல் கேடுகளுக்கு வழிவகுக்கின்றன.
  • பிரயாணங்களின் போது சாலையோரங்களில் எவர்சில்வர் அல்லது கண்ணாடி கோப்பைகளில் டீயோ, காஃபியோ அருந்துகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அவை சுத்தமாகத் தான் பராமரிக்கப் படுகின்றன என்று நமக்குத் தெரியுமா? ஒரு சிறு துளி நோய்க்கிருமிகளுடனான தண்ணீர் படிந்த கோப்பையொன்றில் வழங்கப் படும் பானத்தை நாம் தப்பித் தவறி அருந்தி விட்டால் பிறகு பாக்டீரியா முதல் வைரஸ், பூஞ்சைகள் வரை அனைத்து விதமான நுண்ணுயிர்த் தொற்றுகளும் நமக்கு ஏற்பட அது நல்லதொரு வாய்ப்பாகி விடக்கூடும். ஆனால் இந்த சுடுமண் கோப்பைகளில் அம்மாதிரியான அசெளகரியங்கள் எதுவும் இல்லை.

இத்தனை நல்ல அம்சங்கள் நிறைந்த சுடுமண் தேநீர் கோப்பைகளை அன்றாடம் வீடுகளில் வைத்துப் புழஙி விட்டு தூக்கி எறிந்தால் கட்டுப்படியாகாது என்று நினைப்பவர்கள் தங்களது வீட்டு விசேஷ காலங்களில் மட்டுமாவது இவற்றைப் பயன்படுத்தப் பழகலாம். பேப்பர் கோப்பைகளோடு ஒப்பிடும் போது விலை சற்றே கூடுதல் என்றாலும் ஆரோக்ய விஷயத்தில் நல்ல விழிப்புணர்வாக இருக்கும். செயற்கைப் பட்டை விட காஞ்சிப் பட்டும், பைதானிப் பட்டும் விலை அதிகம் தான். ஆனால் தேவையான போது வாங்கிப் பயன்படுத்தாமலா இருக்கிறோம்? அது மாதிரி தான் இதுவும். இதனால் சுடுமண் கோப்பைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யும் கலைஞர்களின் வாழ்வாதாரம் நலிந்து போகாமல் காத்த புண்ணியமும் கூட நம்மை வந்தடையலாம். 

இம்மாதிரியான ஒரு நோக்கத்தில் தான், லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது, ரயில்வே கேண்டீன்களில் குல்ஹர் எனப்படும் சுடுமண் கோப்பைகள் டீ, காஃபீ பானங்களைப் பரிமாறுவதில் புழக்கத்துக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் அந்த வழக்கம் இப்போதும் இந்திய ரயில்களில் குறிப்பாக தென்னக ரயில்களில் இருக்கிறது எனத் தெரியவில்லை. இருந்தால் அது நிச்சயம் பாராட்டுதலுக்குரிய விஷயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com