வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு தோலைத் தூர வீசுபவரா நீங்கள்? அப்படியானால் இதைப் படியுங்கள்!

வாழைப்பழத்தில் இருக்கும் சத்துக்களுக்கு சற்றும் குறையாது அதன் தோலிலும் கூட மனித உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்யத்துக்கும் தேவையான அத்தனை சத்துக்களும் உள்ளன. எனவே, வாழையைப் பொருத்தவரை அதன் தோலையும்
வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு தோலைத் தூர வீசுபவரா நீங்கள்? அப்படியானால் இதைப் படியுங்கள்!
Published on
Updated on
3 min read

உலக மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழ வகைகளில் ஒன்று வாழைப்பழம். உலகில் வாழைப்பழம் உண்ணாத மக்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு உலகின் எந்த மூலையிலும் மலிவாகக் கிடைக்கக் கூடிய பழம் வாழைப்பழம். அதில் பல வகைகள் உண்டு. நாட்டுக்கு நாடு வாழைப்பழத்தின் வகைகள் மாறுபட்டாலும் அதனால் விளையும் பயன்கள் சற்றேறக்குறைய ஒன்றே! உலகின் மற்றெல்லா பழ வகைகளைக் காட்டிலும் கைக்குழந்தைகளுக்கும் கூட கொடுத்துப் பழக்கக் கூடிய அளவுக்கு எளிதில் செரிமானம் ஆகக் கூடியது வாழைப்பழம் ஒன்றே. எனவே தான் வாழைப்பழம் நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அன்றாட அம்சங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

பொதுவாக வாழைப்பழம் சாப்பிடும் போது, நாம் வழக்கமாக என்ன செய்வோம்? பழைத்தை உரித்துச் சாப்பிட்டு விட்டு, தோலை தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவோம். இது காலம், காலமாக நாம் பின்பற்றி வரும் பழக்கம். ஆனால் பல ஆண்டுகளாகவே தாவரவியல் விஞ்ஞானிகளும் மக்களிடம் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று என்ன தெரியுமா? வாழைப்பழத்தில் இருக்கும் சத்துக்களுக்கு சற்றும் குறையாது அதன் தோலிலும் கூட மனித உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்யத்துக்கும் தேவையான அத்தனை சத்துக்களும் உள்ளன. எனவே, வாழையைப் பொருத்தவரை அதன் தோலையும் சேர்த்து உண்பதே நல்லது. என்பது தான்.

உண்மையிலேயே தங்களது உடல் ஆரோக்யத்தில் அக்கறையுள்ள பல மனிதர்கள், வாழைப்பழம் உண்ணும் போது தோலையும் சேர்த்து உண்பதை நாம் எங்கேனும் அகஸ்மாத்தாய் கண்டிருக்கலாம். ஆனால் அப்போதெல்லாம் நாம் அந்தச் செயலில் இருக்கும் நிஜத்தை ஆராயாமல், அப்படி உண்பவர்களை ‘இத்தனை கஞ்சத் தனமா? பாருங்கள் பழத்தோடு சேர்த்து தோலைக் கூட விடாமல் உண்கிறார்களே! என்று கேலி செய்து சிரித்திருப்போம். அது தவறு. அவர்கள் உண்பது தான் சரியான முறை என்கிறார்கள் விஞ்ஞானிகளும் உணவியல் வல்லுனர்களும்.

அடப்போங்க சார்... வாழைப்பழத்தோலை எல்லாம் உண்ண முடியாது என்பீர்களானால், தோலை உண்ணக்கூட வேண்டாம், அதில் அதைக் காட்டிலும் மேலான விளைவுகள் கிடைக்கக் கூடுமெனில் அதைத் தவிர்ப்பானேன்! அதையாவது முயற்சி செய்து பார்க்கலாமில்லையா?

அது எப்படி என்கிறீர்களா? இதோ இப்படித்தான்;

வாழைப்பழத்தோலை எதற்கெல்லாம் உபயோகப் படுத்தலாம் என்று நீங்களும் தெரிந்து கொண்டால் அது உங்களுக்கே எளிதாகப் புரியும்.

பற்களை வெண்மையாக்க...

வாழைப்பழத் தோலை சிறு துண்டுகளாக்கி குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்கு உங்கள் பற்களில் தேய்த்துக் கழுவி வாருங்கள். வெகு விரைவிலேயே உங்கள் பற்கள் முன்பை விட வெண்மையாக மாறுவதை நீங்களே கண்கூடாகக் காண முடியும். ஏனெனில் வாழைப்பழத்தோல் மிகச்சிறந்த ஒயிட்னராக (வெண்மையாக்கி) செயல்படக்கூடியது.

சருமத்திலுள்ள மருக்களைப் போக்க...

வாழைப்பழத் தோலை தொடர்ந்து சருமத்தில் மருக்கள், பருக்கள், சுருக்கங்கள் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் வெகு விரைவிலேயே அவையெல்லாம் மறைந்து சருமம் பளபளப்பாக மாறி விடும். அதோடு மட்டுமல்ல மீண்டும் அந்த இடங்களில் மருக்களோ, பருக்களோ, சுருக்கங்களோ வராமல் தடுக்கவும் வாழைப்பழத்தோல் உதவுகிறது.

வாழைப்பழம் எப்போதுமே மனித உடலின் உள்ளுறுப்புகளின் ஆரோக்யத்தில் மட்டுமல்ல சரும ஆரோக்யத்திலும் கூடப் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. சருமத்தில் பிரச்னை உள்ள இடங்களில் வாழைப்பழத்தோலைத் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து மென்மையாகக் கழுவித் துடைக்க வேண்டும். சீக்கிரமே சருமம் நாம் விரும்பும் வண்ணம் மாறத் தொடங்கும், அது வரை தொடர்ந்து மேற்சொன்ன வழிமுறையைத் தொடர வேண்டும். தினம் தோறும் அதைச் செய்து வரும் போது சீக்கிரமே நீங்கள் விரும்பும் பலனை அடையலாம்.

சருமம் வறண்டு போகாமல் தடுக்க...

அது மட்டுமல்ல; வாழைப்பழத்தோலை முட்டையின் மஞ்சள் கருவுடன் சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் தேய்த்து 5 நிமிடம் ஊற வைத்துக் கழுவினால் முகச் சருமம் விரைவில் வறண்டு போகாமல் தவிர்க்கலாம். 

சொரியாசிஸ்க்கு சிறந்த நிவாரணம்...

வாழைப்பழத்தோலுக்கு ஈரத்தன்மையைத் தக்க வைத்துக்கொள்ளும் திறன் உண்டென்பதால் சொரியாசிஸ் உள்ளிட்ட சருமவியாதியால் அவதிப் படுபவர்களின் சிரமத்தைக் குறைக்க உதவுகிறது. வாழைப்பழத்தோலை அரைத்து சொரியாசிஸ் பாதிப்புள்ள சருமப் பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஆற விட்டால் அந்தப் பகுதியில் அரிப்பு நீங்கி நிவாரணம் கிடைக்கும்.

புற ஊதாக் கதிர்களிலிருந்து காக்க...

கண்களை புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து காக்க வாழைப்பழத்தோல் உதவுகிறது. சூரிய ஒளியில் சில நிமிடங்கள் வைத்து எடுத்த வாழைப்பழத்தோலை எடுத்து கண் இமைகளின் மேல் தேய்த்தால் கண் புரை நோய் பாதிப்பைத் தவிர்க்கலாம் என்பது மருத்துவ ஆய்வில் முன்பே நிரூபணமானதாகக் கூறப்படுகிறது.

வாழைப்பழம் குறித்த சில முக்கிய டிப்ஸ்கள்...

  • மேற்கண்ட வழிமுறைகளில் எல்லாம் சிறப்பான விளைவுகள் கிடைக்க புதிதாக வாங்கிய ஃப்ரெஷ்ஷான வாழைப்பழத் தோலையே பயன்படுத்த வேண்டும்.
  • வாழைப்பழம் பிற பழங்களைப் போல வாரம் முழுக்க வைத்திருந்து பயன்படுத்தத் தோதானது இல்லை. சரியான பதத்தில் பழுத்த பழங்களை வாங்கி உடனடியாகச் சாப்பிட்டு விட்டால் அதில் கிடைக்கும் பலன்கள் அதிகம். அதே போல உரித்த வாழைப்பழத்தை நெடுநேரம் சாப்பிடாமலும் வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் உரித்த பழத்தை சாப்பிடாமல் வைத்து நெடுநேரம் கழித்துச் சாப்பிட்டால் அதில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்த்தாக்கம் இருக்கும்.
  • வாழைப்பழங்களை வைத்துப் பராமரிக்க சிறந்த இடம் குளுமையும், உலர்ந்த இடங்களே! மாறாக வீட்டில் சூரிய வெளிச்சத்தின் தாக்கம் அதிகமுள்ள இடங்களிலோ அல்லது வெப்பம் அதிகமுள்ள இடங்களிலோ அவற்றை வைத்துப் பராமரிக்கக் கூடாது.
  • வாழைப்பழங்களை மட்டுமல்ல வாழைப்பழத்தோலையும் கூட குளிர்சாதனப் பெட்டியில் சேமிப்பது கூடாது.
  • எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் வாழைப்பழங்களை வீட்டில் அடுக்கும் போது திறந்த காற்றுப் புக வசதியுள்ள நார்க்கூடைகளையோ அல்லது சில்வர் வலைக்கும்பாக்களையோ பயன்படுத்தலாமே தவிர பாலீத்தீன் பைகளில் போட்டு மூடி வைக்க மட்டும் கூடவே கூடாது. ஏனெனில் வாழைப்பழத்தோலில் இருந்து கசியும் எத்தலீன், பாலித்தீனுடன் வினை புரிந்து வாழைப்பழத்தோலை கருக்கச் செய்து பழம் சாப்பிடும் ஆசையையே கெடுத்து விடும். அதோடு பழமும் சீக்கிரமே அழுகி விடும் வாய்ப்பும் உண்டு.

courtesy: UC WEB

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com