இந்திய தத்தெடுப்பு விதிமுறைகளை கேள்விக்குள்ளாக்கும் அமெரிக்க குழந்தை ‘ஷெரின்’ மரண வழக்கு’!

தகுதியற்ற மனிதர்களிடம் தத்துக் கொடுக்கப்படும் இந்தியக் குழந்தைகளின் நிலையைப் பற்றி அறிந்து கொள்ள இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறை எடுத்தாக வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றியும்
இந்திய தத்தெடுப்பு விதிமுறைகளை கேள்விக்குள்ளாக்கும் அமெரிக்க குழந்தை ‘ஷெரின்’ மரண வழக்கு’!

இன்று காலையில் செய்தித்தாளை திறந்ததுமே கண்ணில் பட்டது அமெரிக்காவில் காணாமல் போன குழந்தை ஷெரின் பற்றிய செய்தி தான். உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிவதற்கான விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும் இதுவரையில் ஊடகங்கள் வழியாக தெரிய வந்த செய்திகளின் அடிப்படையில் சிறுமி காணாமல் போகவில்லை அவளது வளர்ப்புத் தந்தையான வெஸ்லீ மாத்யூஸ் தான் குழந்தையை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்த மாதக் துவக்கத்தில் காணாமல் போன அந்தக் குழந்தை பின்பு கிடைத்தது சடலமாகத் தான். இரு தினங்களுக்கு முன்பு அவளது வீடு இருந்த சுற்றுப்புறத்தில் சில மைல் தொலைவிலேயே சடலமாக ஷெரின் மீட்கப்பட்டிருக்கிறாள்.

அந்தச் சடலம் தன் வளர்ப்பு மகளுடையது தான் என ஒப்புக் கொண்ட வெஸ்லி மாத்யூஸ், குழந்தை ஷெரின் பால் அருந்த மறுத்ததால், தான் கட்டாயப்படுத்தி அவளை பால் அருந்த வைத்ததில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அது கடுமையாகி உடலில் அசைவே இன்றி இறந்து விட்டதால், இறந்த சிறுமியின் உடலை அப்புறப்படுத்த நினைத்து வீட்டிலிருந்து சற்றுத்தொலைவில் இருந்த வாய்க்காலில் போட்டு விட்டதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். 3 வயதுப் பிஞ்சுக் குழந்தையை, அது பால் அருந்த மறுக்கிறது என்பதற்காக எந்தத் தந்தையாவது முரட்டுத்தனமாக அருந்த வைக்க முயற்சிப்பாரா? உண்மையில் அது பரிவான தந்தைமைக்கான செயலா? இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் பிஞ்சுக் குழந்தைகளை தத்தெடுப்பதின் நோக்கம் தான் என்ன?! 

வெஸ்லீ காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தின் படி குழந்தை ஷெரின் அவர்களது சொந்த மகளில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிகாரில் ஷெரினை அவர்கள் தத்தெடுத்திருக்கின்றனர். தத்தெடுக்கும் நல்லெண்ணத்திலோ, அல்லது தத்துக் கொடுக்கும் வழக்கங்களிலோ எந்த ஒரு குறையும் இல்லை. ஆனால் யாருக்கு தத்தெடுக்கக் கூடிய அருகதை உண்டோ அவர்களல்லவா குழந்தைகளைத் தத்தெடுக்க வேண்டும்! வேலைப்பளுவாலோ, பிறவி குணாதிசயங்களாலோ கொஞ்சமும் கருணையற்றுப் போனவர்கள் எல்லாம் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கத் தகுதியானவர்களே இல்லை. அதற்கு அவர்கள் குழந்தைகளற்ற வாழ்வையே சிக்கலின்றி தொடர்ந்து விட்டுப் போனால் யாருக்கும் எந்தவித நஷ்டமுமில்லை. மாறாக, ஒரு குழந்தையை தத்தெடுத்து, ஊரார் முன் நல்லவர்கள் வேடம் போட்டு விட்டு, அந்தக் குழந்தையை இப்படி கண்காணாத தேசத்துக்கு அழைத்துச் சென்று அதன் சிறு சிறு குறும்புத்தனங்களையும், பிடிவாதங்களையும் பொறுத்துக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முயற்சிக்காமல் சகிப்புத் தன்மையே இன்றி கொன்று விட்டு அதை மறைக்க நாடகம் ஆடி இருக்க வேண்டியதில்லை. குழந்தை ஷெரினின் புகைப்படங்களை ஊடகங்களில் காண நேர்ந்த ஒவ்வொருவருக்கும் வெஸ்லீ மாத்யூஸ் குறித்து இப்படித்தான் தோன்றியிருக்கக் கூடும்.

அமெரிக்காவின் ரிச்சர்ட்ஸன் காவல்துறைக்கு இதுவரை வெஸ்லீ அளித்த முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்கள் அவரை கொஞ்சமும் மனசாட்சியோ, மனிதாபிமானமோ இல்லாத சுயநலப் பிறவியாகத் தான் அடையாளம் காட்டுகிறது. குழந்தை வளர்ப்பு என்பது அதிலும் தத்துக் குழந்தைகளை பெற்ற குழந்தையாகக் கருதி வளர்த்து ஆளாக்குவது எல்லாம் மனிதாபிமானிகள் செய்ய வேண்டிய செயல். இங்கே வெஸ்லீ மாதிரியான தகுதியற்ற நபர்கள் எளிதாக ஷெரின் போன்ற குழந்தைகளை இந்தியாவில் தத்தெடுக்க முடிகிறது எனில் தவறு நமது சட்டங்களிலும் தான். இம்மாதிரியான இழப்புகளின் போது இந்திய அரசின் தத்தெடுத்தல் மற்றும் தத்துக் கொடுத்தல் சட்டங்களுக்கான விதிமுறைகள் இன்னும் கடுமையாக்கப் பட வேண்டும் என்ற உணர்வே எழுகிறது. அதுமட்டுமல்ல தகுதியற்ற மனிதர்களிடம் தத்துக் கொடுக்கப்படும் இந்தியக் குழந்தைகளின் நிலையைப் பற்றி அறிந்து கொள்ள இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறை எடுத்தாக வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றியும் இவ்வழக்கு யோசிக்கத் தூண்டுகிறது.

  • இந்தியாவிலிருந்து சொந்த நாட்டினராலோ அல்லது அயல்நாட்டினராலோ தத்தெடுக்கப்பட்டு பிற நாடுகளுக்குச் செல்லும் குழந்தைகளின் நிலை என்ன?
  • அந்நிய தேசங்களில் தத்துக் கொடுக்கப்படும் இந்தியக் குழந்தைகள் பாதுகாப்பாகத்தான் வளர்கின்றனவா? 
  • தத்தெடுக்கும் பெற்றோர் உண்மையான குழந்தை வளர்ப்பு ஆர்வத்திலும். மனிதாபிமான உணர்வாலும் தான் குழந்தைகளைத் தத்தெடுக்கிறார்களா?
  • தத்துக் குழந்தைகளை வளர்க்கும் போது பின்பற்ற வேண்டிய கண்டிப்பான விதிமுறைகள் என்னென்ன? அந்த விதிமுறைகளை எல்லாம் தத்துப் பெற்றோர் தவறாது கடைபிடிக்கிறார்கள் என்பதற்கான ஆவணங்களை இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறையின் கீழ் இயங்கும் தத்தெடுத்தலுக்கான அமைப்பு முறையாகப் பராமரிக்கிறதா?
  • கனடா போன்ற நாடுகளில் சொந்தக் குழந்தைகளாகவே இருந்தாலும், பெற்றோர் தம்மை மிரட்டுவதாகவோ, பயமுறுத்தி பணிய வைக்க முயற்சிப்பதாகவோ குழந்தையே நேரடியாகக் காவல்துறையில் புகார் அளித்தாலோ அல்லது குழந்தையை அறிந்தவர்கள் குழந்தைக்காக புகார் அளித்தாலோ அந்நாட்டு காவல்துறை விரைந்து செயலாற்றி குழந்தையை அதன் பெற்றோரிடத்திலிருந்து பிரித்து அரசு ஹோம்களில் வைத்துப் பராமரிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் குழந்தைகளுக்கெதிரான பெற்றோர்களின் வன்முறைகள் அல்லது அலட்சிய மனப்பான்மைக்கு என்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?
  • சில மனிதாபிமானமற்ற நச்சு மனிதர்கள், குழந்தைகளைத் தத்தெடுக்கிறோம் என்ற போர்வையில் இந்தியாவில் கைவிடப்பட்டு அனாதை ஆசிரமங்கள் மற்றும் அரசுக் காப்பகங்களில் வளரும் குழந்தைகளை தத்தெடுத்து வளைகுடா நாடுகளிலும் இன்னும் பிற உலக நாடுகளிலும் இயங்கும் பாலியல் தொழில் ஏஜண்டுகளுக்கு விற்று விடுகிறார்கள் என்று வரும் செய்திகளின் முகாந்திரங்கள் என்ன? அவை நிஜமென்றால் அவ்விவகாரங்களில் இந்திய அரசின் நடவடிக்கை என்ன?

ஷெரின் வழக்கு தொடர்பாக இப்படி கேள்விகள் விரிந்து கொண்டே செல்கின்றன.

முடிவாக குழந்தைகளைத் தத்தெடுக்க நினைக்கும் பெற்றோருக்கு ஒரே ஒரு வேண்டுகோள்... ‘உங்களால் ஒரு குழந்தையை அதன் குழந்தைமையோடு ஏற்றுக் கொண்டு மிகுந்த பொறுமை, சகிப்புத் தன்மை எல்லாவற்றுக்கும் மேலாக பரிவும், அன்புமாக ஒரு குழந்தையை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே கை விடப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் முடிவை எடுங்கள். உங்களுக்கே உங்களது பொறுமையின் மீதும், சகிப்புத் தன்மையின் மீதும், குழந்தையின் பாலான அர்ப்பணிப்பு உணர்வின் மீதும், மனிதாபிமான உணர்வின் மீதும் நம்பிக்கை இல்லாத பட்சத்தில் பெருமைக்காகவோ, நிர்பந்தத்துக்காகவோ அல்லது இன்னபிற உப்புச் சப்பில்லாத காரணங்களுக்காகவோ எந்தக் குழந்தைகளையும் தத்தெடுக்கிறேன் பேர்வழியென்று எந்த விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு விடாதீர்கள். உங்களுக்கு கோடி புண்ணியங்களாய் போகட்டும்!

Image courtesy: asianet newable.com.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com