பெற்றோரது சீரற்ற நடத்தையால் சிக்கலுக்கு உள்ளாகும், மகள்களின் தாம்பத்ய வாழ்க்கை?

தவறாகப் புரிந்து கொள்ளப் படும் பாலியல் நடவடிக்கைகள் திருத்தவோ, மாற்றவோ எவருமில்லாத சூழலில் அப்படியே குழந்தைகள் மனதில் நீடித்து நிலைத்து வளர்ந்து பெரியவர்களாகும் போது சிலருக்கு தாம்பத்யத்தைப் பற்றிய 
பெற்றோரது சீரற்ற நடத்தையால் சிக்கலுக்கு உள்ளாகும், மகள்களின் தாம்பத்ய வாழ்க்கை?

'நூலைப் போல சேலை... தாயைப் போல பிள்ளை', என்பது தமிழின் மிகப் பிரசித்தி பெற்ற பழமொழி. இதில் தாயை மட்டும் சேர்ப்பானேன். தகப்பனுக்குப் பங்கில்லையா என்ன? அப்படியல்ல பல சந்தர்பங்களில் தாய், தந்தை வேறுபாடுகளின்றி இருவருக்குமே இந்தப் பழமொழி பொருந்தித் தான் போகிறது. குறிப்பாக ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமண பேச்சு வார்த்தைகள் நிகழும் சமயத்தில் தான் இந்தப் பழமொழியை நாம் அதிகம் கேட்டிருக்கக் கூடும். எதற்காக அப்படிச் சொல்ல வேண்டும் என்றால்; திருமண பந்தத்தின் அடி வேரான தாம்பத்தியமும், அதன் மூலம் உருவாகும் வாரிசுகளும் மட்டுமே இந்தப் பழமொழியை நிர்ணயிக்கின்றன என்பதாலே தான். பொதுவாக பெண் பிள்ளைகளுக்கு முதல் ஹீரோ அவரவர் அப்பாக்களே! அதே போல ஆண்களுக்கு... எதிர்கால மனைவி எனும் விசயத்தில் அவர்களது ஆதர்ஷம் என்றென்றும் அவரவர் அம்மாக்கள் தான்.

இன்றைக்கும், என் அம்மாவைப் போல நீ ருசியாகச் சமைக்கவில்லை, என் அம்மாவைப் போல நீ வீட்டை நறுவிசாக நிர்வகிக்கவில்லை, என் அம்மாவைப் போல உனக்கு சாமர்த்தியமாக, புத்திசாலித்தனமாகப் பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லை என்று கூறி மனைவியை இம்சிக்கும் கணவர்கள் நிறைய உண்டு. அதே போல; என் அப்பாவைப் போல நீங்கள் பொறுப்பாக இல்லையென்றோ, என் அப்பாவைப் போல நீங்கள் பாசமாக இல்லையென்றோ கணவனைக் குறை கூறும் பெண்களும் கூட நிறைய உண்டு. இதை எதற்காகச் சொல்ல வேண்டுமெனில், இப்படித்தான் தொன்று தொட்டு மனித வாழ்க்கை முறை இருந்து வருகிறது. நாம் நமக்கான வாழ்க்கையின் நியதிகளை நமது பெற்றோர்களிடமிருந்தே கற்றுக் கொள்ள முயல்கிறோம். அப்படி இருக்கும் போது பெற்றொரிடமிருந்து நல்ல தனங்கள் மட்டுமல்ல கெட்ட தனங்களும் கூட எந்தத் தடையுமின்றி நம்மை வந்து அடைவது எளிதாகி விடுகிறது. அதிலும் நாம் வாழும் இந்தச் சமூகத்தில் ஆண்களை விட பெண்களே இவற்றால் அதிகமும் பாதிக்கப் பட்டு வருகிறார்கள் என்பதும் கண்கூடான உண்மை. 

அவ்வகையில் இந்த தலைமுறை இளம்பெண்களின் இல்லற வாழ்வில் அவர்களது பெற்றோரது தாக்கம் பலவகையிலும் எதிரொலிக்கிறது என்று சமீபத்தில் அமெரிக்காவில் மனநல ஆய்வுப் பத்திரிகையொன்று ஆய்வுக்கட்டுரை சமர்பித்திருக்கிறது. அந்தக் கட்டுரை மூலமாகத் தான் நாம் இதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. தம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை முறைகளை சற்று நேரம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு சிந்தித்தாலே போதும் ஒவ்வொருவருமே இதை வெகு எளிதாக உணர்ந்து கொள்ளலாம்.

ஜோ.டி. குரூஸின் ‘கொற்கை’ நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்களில் ஒன்று ஓரினச் சேர்க்கையாளராக சித்தரிக்கப் பட்டிருக்கும். அந்தப் பெண்ணின் அவ்விதமான நடத்தைக்கு காரணம் இளம் பிராயத்தில் அவளது தாய், அவளது தந்தையால் மிக மோசமாக வல்லுறவுக்கு உள்ளாக்கப் படும் செயலே என்று நாவல் சொல்கிறது. தன் மனைவி மாதவிடாய் காலத்து ஒதுக்கத்தில் இருக்கிறாள், என்பதைக் கூட உணர மறுக்கும் பாலியல் வெறி பிடித்த கணவர்கள் பலர் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த நாவலில் வரும் சம்பவம் ஒரு சாட்சி. இது உண்மைச் சம்பவத்தை தழுவி எழுதப் பட்டதாகக் கூட இருக்கலாம். நடு இரவில் குழந்தைகள் தூங்குகிறார்கள் எனும் அசட்டையான நம்பிக்கையாலோ, அல்லது அலட்சியத்தாலோ தகப்பனான ஒரு ஆண் செய்யும் இப்படியான காரியங்கள் நிச்சயமாக மகள்களின் தாம்பத்ய வாழ்வை அல்லது முறையான பாலியல் ஆர்வத்தை திசை மாறச் செய்து விடுகின்றன என்கின்றன மனநலம் சார்ந்த மருத்துவ ஆய்வுகள். 

அது மட்டுமல்ல குழந்தைப் பருவத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப் படும் பாலியல் நடவடிக்கைகள் திருத்தவோ, மாற்றவோ எவருமில்லாத சூழலில் அப்படியே குழந்தைகள் மனதில் நீடித்து நிலைத்து வளர்ந்து பெரியவர்களாகும் போது சிலருக்கு தாம்பத்யத்தைப் பற்றிய ஒவ்வாமையை அல்லது விருப்பமின்மையை ஏற்படுத்தி விடுகிறது. அதற்கொரு உதாரணம் மானஸாவின் கதை.

மானஸாவின் அப்பாவுக்கு ஆங்கில போர்னோ பத்திரிகைகள் வாசிப்பது மனைவி தவிர யாருமறியாத அந்தரங்கப் பொழுது போக்காக இருந்திருக்கிறது. அப்பாவின் பீரோவை யாருமே திறக்கக் கூடாது என்பது அவளது வீட்டில் அறிவிக்கப் படாத ஒரு உத்தரவு. இதெல்லாம் ஊரிலிருந்து மானஸாவின் அத்தை பெண் ஜானவி வரும் வரையில் தான். விடுமுறையில் வீட்டில் பெரியவர்கள் யாருமற்ற நேரங்களில் ஒரே வயதுப் பெண்கள் சேர்ந்தால் உண்டாகும் குறும்புத் தனங்களில் ஒன்றாக இருவரும் சேர்ந்து அப்பாவின் ரகசிய பீரோவை குடைய உடைபட்டது குட்டு. குட்டால் உடைபட்டது அப்பாவின் ரகசியம் மட்டுமல்ல அது வரை தன் அப்பா குறித்து மானஸா கொண்டிருந்த ஹீரோ பிம்பமும் தான். அம்மாவிடம் சொன்னால் திட்டுவார்களோ என்றொரு அச்சம், கூடவே அத்தை மகளின் குறு, குறுக்க வைக்கும் எள்ளலான பார்வை. அதையெல்லாம் தாண்டி... என் அப்பாவா இப்படியெல்லாம் மோசமான படங்களுள்ள புத்தகங்களை எல்லாம் சேகரித்து வாசித்துக் கொண்டிருக்கிறார்.. ச்சே எவ்வளவு கேவலம்.. இதைப் போய் இந்த ஜானவி வேறு பார்த்து விட்டாளே! இனி இவள் என்னை எப்படி மதிப்பாள்? ஊருக்குப் போய் தன் வீட்டில், என் அப்பாவைப் பற்றி என்னவெல்லாம் சொல்வாளோ? என்ற கலக்கம் எல்லாமும் சேர்ந்து பிறகு வந்த நாட்களில் மானஸா வீட்டில் எவருடனும் அதிகம் பேசாத பெண்ணாகிப் போனாள். அவளால் தான் கண்ட புத்தகங்களைப் பற்றி வீட்டில் அம்மா உட்பட எவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அதோடு 10 நாட்களாவது விடுமுறையை தன் மாமா வீட்டில் கழிக்க வேண்டும் என ஓடோடி வந்த ஜானவி இதைப் பார்த்த மறுநாளே, ச்சீ...ச்சீ என்னடி வீடு இது! என்று முகத்தை சுளித்துக் கொண்டு மறுநாளே காரணமே சொல்லாமல் அழுது, அடம் பிடித்து தன் ஊருக்கே திரும்பிச் சென்று விட ஒரு அழகான ஸ்னேகமும் அன்றோடு பட்டுப் போனது. இந்த பகிர முடியாத உறுத்தலுடன் தான் மானஸா வளர்ந்து, படித்தும் முடித்தாள். தொடர்ந்து வந்த நாட்களில் அப்பா தன்னிடம் பாசமாக நெருங்கும் போதெல்லாம் ஒதுங்கும் பெண்ணாகவே மானஸாவால் இருக்க முடிந்திருக்கிறது. அந்தப் புத்தகங்களில் இருந்த பாலியல் உறவைச் சித்தரிக்கும் அப்பட்டமான படங்களால் அவள் தனது அப்பாவைப் பற்றி மட்டுமல்ல, அதன் பிறகு தான் எதிர் கொண்ட அத்தனை ஆண்களின் மீதான மரியாதையையும்  ஒட்டுமொத்தமாக இழந்தாள். எல்லா ஆண்களும் இப்படித் தான் இருப்பார்கள் எனும் பிம்பத்தை உள்ளே வைத்துக் கொண்டிருந்த அவளுக்கு காலக்கிரமப் படி திருமணமும் ஆனது. ஆனால் ஆறே மாதங்களில் பெற்றோரிடம் கூட கலந்தாலோசிக்காமல் மானஸா விவாகரத்துக்கு விண்ணப்பித்து விட்டாள். காரணம் கேட்டு மாப்பிள்ளையைத் தொடர்பு கொண்ட மாமியாருக்கு கிடைத்த பதில்; தாலி கட்டிய நாள் முதலே உங்கள் மகள் என்னை அவளிடம் நெருங்கவே விட்டதில்லை. நானும் எத்தனையோ விதமாகக் காரணம் கேட்டுப் பார்த்து விட்டேன். மகா அழுத்தமாகப் பதிலே சொன்னதில்லை அவள். நாங்கள் சந்தோசமாக இருந்ததே இல்லை. எப்படி இந்த பந்தத்திலிருந்து வெளிவருவது என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன்... அவளாக விவாகரத்து கேட்டு விட்டாள். எனக்கு ஆட்சேபணையே இல்லை. எங்களைப் பிரித்து விடுங்கள் என முகத்தில் அடித்தாற் போலப் பதில் வந்தது.

அனிதாவின் கதை மேற்சொன்ன இரண்டையும் விட வித்யாசமானது;

அனிதா, தன் பெற்றோர்களின் ஒரே செல்ல மகள். அவளது பெற்றோருக்கு அளவற்ற செல்வம் இருந்தது. கூடவே அளவற்ற மூடநம்பிக்கையும் இருந்தது. யாரோ ஒரு ஜோசியர்... மகளுக்குத் திருமணம் ஆனால் அப்பாவுக்கு மரண யோகம் என்று புரளியைக் கிளப்பி விட்டு வகை, தொகையின்றி பரிகாரங்களைச் செய்யச் சொல்லி பணம் பிடுங்குவதை வழக்கமாக்கி இருந்தார். இதை அறியாத அளவுக்கு அனிதாவின் பெற்றோர்கள் முட்டாள்கள் அல்ல. ஆனாலும் மரண பயம் பிடித்து ஆட்டுவித்ததில் அப்பா, மகளுக்குத் திருமணப் பேச்சு எடுத்தாலே... ஏதோ ஒரு காரணம் சொல்லி மருத்துவமனையில் அட்மிட் ஆக ஆரம்பித்தார். அழகான அனிதாவுக்கு அவளது இளமையெல்லாம் திருமணமானால் அப்பா, உயிரோடு இருப்பாரா? இல்லையோ? என்ற பதட்டத்திலேயே கழிந்தது. வரும் வரன்களை எல்லாம் அவளது அப்பா வீட்டினரே தட்டி விட அழகிருந்தும், படிப்பிருந்தும், அளவற்ற நகைகளும், பணமும் இருந்தும் அனிதாவுக்கு திருமணமே ஆகவில்லை. 41 வயதிலும் திருமணமாகாத அனிதா, ஒரு பியூட்டி பார்லரில் தன் நரை முடிக்கு டை அடித்துக் கொள்ள வந்திருக்கையில் பக்கத்து இருக்கையிலிருந்து எதேச்சையாக அவளைத் திரும்பிப் பார்த்த பால்யகாலத் தோழி ஒருத்தி உனக்கென்ன குறை என்று இப்படி ஆனாய்?! என மனமுடைந்து அழுதாள். அப்போது அனிதாவின் அப்பா இயல்பான வயோதிகத்தால் உடல் நலமின்றி இறந்து போய் 3 ஆண்டுகள் ஆகியிருந்தன. தொடர்ந்து அம்மாவும் அடுத்த வருடத்தில் காலமாகி விட... இப்போது அனிதாவுக்குத் திருமணம் செய்து கொள்ள எந்தத் தடையும் இல்லை. ஆனால் திருமணம் செய்து வைக்கத் தான் யாரும் இல்லை. விரக்தியில் அனிதாவுக்கு திருமண வாழ்வில் நாட்டமின்றி, லிவிங் டுகெதர் கலாச்சாரத்தை ஆதரித்து அலுவலக நண்பர் ஒருவருடன் வாழத் தொடங்கி விட்டாள்.

அப்பாக்களை மட்டுமே குறை கூற வேண்டும் என்பதில்லை.

மேற்சொன்னது போல சீரற்ற நடத்தைகள் கொண்ட அம்மாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களது சீரற்ற நடத்தைகளுக்கான பலா பலன்கள் அவர்களை மட்டுமே பாதிப்பதில்லை. அவர்களது வாரிசுகளை, குறிப்பாக மகள்களை, அவர்களது தாம்பத்திய வாழ்க்கையைத் தான் பெருமளவில் பாதிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com