மாமியார் மருமகள் ஈகோ பிரச்னைகளை இத்தனை எளிதாக தீர்த்து விட முடியுமா?!

ஒரு சின்ன சாக்லேட் துண்டைப் பகிர்ந்து கொள்ளும் போதே மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே இத்தனை அருமையான புரிதல் ஏற்பட்டு இருவரும் சந்தோசமாக இருக்க முடியுமென்றால் பிறகு இந்த உறவு முறைகளுக்குள் வேறு என்
மாமியார் மருமகள் ஈகோ பிரச்னைகளை இத்தனை எளிதாக தீர்த்து விட முடியுமா?!

டெய்ரி மில்க் விளம்பரம் ஒன்றில் மாடி பால்கனியில் நின்று டெய்ரி மில்க் சாக்லேட் சாப்பிட்டவாறு தெருவில் செல்லும் கல்யாண ஊர்வலத்தை ரசித்துக் கொண்டிருக்கும் மருமகள் தன் மாமியாரும் ஊர்வலம் பார்க்க அங்கே வந்து நிற்கக் கண்டதும் மரியாதை பொங்க மிகப் பணிவுடன் தன் மாமியாருக்கு ஒரு சாக்லேட் துண்டை பகிர்ந்து அளிப்பார். அதை உண்டதும் இருவருக்கும் குதூகலம் ஏற்பட கீழே இறங்கி அந்தக் கல்யாண ஊர்வலத்தின் முன் டான்ஸ் ஆடுவார்கள்.

ஒரு சின்ன சாக்லேட் துண்டைப் பகிர்ந்து கொள்ளும் போதே மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே இத்தனை அருமையான புரிதல் ஏற்பட்டு இருவரும் சந்தோசமாக இருக்க முடியுமென்றால் பிறகு இந்த உறவு முறைகளுக்குள் வேறு என்ன தான் பிரச்னை வந்து விட முடியும்? பிறகெதற்கு நாளிதழ்களில் மருமகள் ஸ்டவ் வெடித்து இறக்க வேண்டும், வரதட்சிணை போதவில்லை என்று மருமகளை அம்மா வீட்டுக்கு விரட்டிய மாமியார் சிறையில் கம்பியெண்ண  வேண்டும்? இந்தப் பிரச்னைகளை இப்படியும் தீர்க்கலாம் எனும் போது மகாஜனங்களே நாம் ஏன் யோசிக்கக் கூடாது!

மாமியார் மருமகள் ஈகோவைக் களைந்தெறியும் சாக்லேட் விளம்பர வீடியோ...

இன்னொரு விளம்பரமும் கூட அது அடிக்கடி தொலைக்காட்சிகளில் வலம் வந்த காலத்தில் சேனல் மாற்ற விடாமல் கியூட்டாக பார்வையாளர்களைக் கவர்ந்தது. அது பிரிட்டானியா மேரி கோல்ட் பிஸ்கட் விளம்பரம்; பொங்கல் திருநாளை முன்னிட்டு மருமகள் காலை முதலே பரபரப்பாக கோலம் போடுவது, குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, தோரணம் கட்டுவது, சமைப்பது, பூஜைக்கு தேவையானவற்றை எடுத்து வைப்பது என படு பிஸியாக வீட்டுக்குள் நடமாடிக் கொண்டிருக்க, அவளது பரபரப்பை கவனித்த மாமியார்; இங்கே வா என அழைத்து டீயும், பிஸ்கட்டும் அளித்துப் புன்னகைப்பார். மனதறிந்து, தேவையறிந்து உறவுகளைக் கையாளுதல் என்றால் இது தான். இப்படி ஒரு மாமியார் இருந்தால் மருமகள் முகத்தில் கலகலப்பான சிரிப்பை பார்க்க முடியும் தானே?! விளம்பரத்தின் வெற்றிக்கு காரணம் பிரிட்டானியா மேரி கோல்ட் பிஸ்கட்டுகள் மாத்திரமல்ல. அதன் வெற்றியில் பெரும் பங்கு வகிப்பது இந்த அருமையான மாமியார், மருமகள் செண்டிமெண்ட் காட்சிகள் தான்.

அந்த விளம்பரத்துக்கான வீடியோ....

இதே விதமாக மாமியார் மருமகள் ஈகோவை கியூட்டான ஐடியாவால் எளிதில் களையும் ஒரு குறும்பட வீடியோ இது...

யூ டியூபில் குறும்படங்களாகத் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு தமாஷான படம் கண்ணில் பட்டது. அது வெளிப்படுத்திய செய்தி சமூகப் பிரச்னைகளில் ஒன்றாக மாறி விட்ட மாமியார், மருமகள் ஈகோ எண்ண மோதல்களை வெகு எளிதாக தவிர்ப்பது எப்படி என்று ஒரு வழியையும் காட்டும் போது அதைப் பகிர்வது தானே முறை. அந்தக் குறும்படத்தின் பெயர் ‘மிட்டாய் வீடு’ ஆணோ, பெண்ணோ ஒரு குழந்தை இந்த பூமியில் பிறந்து விழும் போது அதன் மீதான பெற்றோரின் கற்பனைகள், அதன் எதிர்காலம் குறித்த அவர்களது கனவுகள், குழந்தை மீதான அவர்களது பொஸஸிவ்னெஸ் என்று எல்லாமே எல்லா பெற்றோர்களுக்கும் பொதுவானவை தான். இதில் சிலர் மட்டும் விதி விலக்குகள் என்று கூறி தப்பி விட முடியாது. சொல்லப்போனால் எல்லாப் பெற்றோர்களுமே அவரவர் குழந்தைகளின்பால் பொஸஸிவாகத் தான் இருக்கிறார்கள். அதைத் தான் நாம் பாசம் என்கிறோம். ஆனால் அதன் எல்லை எதுவரையில் செல்லுபடியாகும் என்பதைப் பொறுத்து தான் இருக்கிறது மாமியார், மருமகள் ஈகோ கருத்து மோதல்கள். திருமண வயதில் இருக்கும் மகன் தான் ஒரு பெண்ணை விரும்புவதாக தன் பெற்றோரிடம் தெரியப்படுத்துகிறான். அவர்களும் சின்னச் சின்ன தயக்கங்கள் மனதுக்குள் முரண்டினாலும் அதையெல்லாம் புறம் தள்ளி மகனது சந்தோசமே முக்கியமென்று எண்ணி அந்தப்பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து தங்களுக்கு அறிமுகப்படுத்துமாறு கேட்கிறார்கள். அவனும் அழைத்து வருவதாக ஒப்புக் கொள்கிறான். வீட்டிற்கு வந்ததும் அந்தப் பெண்ணுக்கும், இளைஞனின் தாயுக்குமான உள சம்பாஷனைகள் தான் இந்தக் குறும்படத்தின் கதை. படத்தின் முடிவில் இளைஞனின் தாய்க்கும், அவன் காதலிக்கும் பெண்ணுக்கும் இடையில் தோன்றுவதாக இருந்த சின்னஞ்சிறு பொஸஸிவ்னெஸ் சஞ்சலத்தை இருவருக்குமான ஒரே விருப்பங்களின் மூலம் எளிதாகத் தீர்க்க முடியும் என்று காட்டியிருப்பது நல்ல முயற்சி.

இதோ அந்தக் குறும்படம்...

கலைஞர் தொலைக்காட்சியின் ‘நாளைய இயக்குனர்’ எனும் போட்டி நிகழ்ச்சிக்காக இந்தக் குறும்படம் 2011 ஆம் ஆண்டில் திரையிடப்பட்டதாகக் காட்டுகிறது அதன் விவரப் பட்டியல்.

படத்தை பார்த்து முடிக்கும் போது மெல்லிய புன்னகை ஓடி மறைகிறது. மனித வாழ்வின் எல்லா விதமான கருத்து மோதல்கள், எண்ண மோதல்களையும் தூசி போல ஊதிப் பறக்க விடத் தேவையான அத்தனை சாய்ஸ்களும் நம் கை மேல் இருக்கின்றன எனும் நம்பிக்கையைத் தருகின்றன இத்தகைய குறும்படங்கள். அந்த சாய்ஸ்களைப் பயன்படுத்திக் கொண்டு பிரச்னைகளைத் தூர விலக்குவது என்றுமே நம் சாய்ஸ் தான். அதை சரியாக உணர்ந்து கொண்டால் போதும் மாமியார், மருமகள் பிரச்னை மட்டுமல்ல, மாமனார், மருமகன் பிரச்சினை, நாத்தனார், ஓரக்கத்திப் பிரச்சினை முதலிய உள்வீட்டுக் குழப்பங்கள் முதல் நிறப் பாகுபாடு, இனப்பாகுபாடு, ஜாதி, மதம் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டுக் குழப்பங்கள் வரை எல்லாவற்றையும் கடந்து இந்த பரந்த உலகில் சிறகடித்துப் பறப்பது எளிது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com