‘அதிதி தேவோ பவ’  கலாச்சாரத்துக்கும் ‘பேயிங் கெஸ்ட்’ மற்றும் ‘ரிஸார்ட்’ கலாச்சாரத்துக்குமான இடைவெளியை அளப்போமா?

முன்பொரு தலைமுறையினர் விடுமுறைகள் தோறும் தாத்தா பாட்டி வீடுகளுக்குச் சென்று திரும்பினார்கள். சொல்வதற்கு அவர்களிடம் ஆற்றில் குளித்த கதைகளும், ஆற்றங்கரை புளியமரத்தில் புளியங்காய் அடித்துத் தின்ற கதை
‘அதிதி தேவோ பவ’  கலாச்சாரத்துக்கும் ‘பேயிங் கெஸ்ட்’ மற்றும் ‘ரிஸார்ட்’ கலாச்சாரத்துக்குமான இடைவெளியை அளப்போமா?

‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தில் ஒரு காட்சி ரோட் ட்ரிப் செல்லும் நாயகனும் நாயகியும் தூத்துக்குடியிலோ, கன்யாகுமரியிலோ ஏதோ ஓரிடத்தில் ஒரு கிராமத்து வீட்டில் இரவில் தங்கிச் செல்வார்கள். அந்த வீட்டினர் இவர்களை இன்முகத்துடன் வரவேற்று, உணவளித்து உபசரித்து இரவில் தங்க இடமளித்து மறுநாள் வழி அனுப்பி வைப்பார்கள். இந்தக் காட்சியைப் பார்த்ததும் ஒரே சந்தோசமாகி விட்டது எனக்கு. இன்றும் நம்மிடையே இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் இருக்கிறார்களா? என்று ஒரே ஆச்சரியமாகி விட்டது எனக்கு! ரிசார்ட்டுகளிலும், ஹோட்டல்களிலும் தங்கும் பழக்கமுள்ள இன்றைய தலைமுறையினருக்கு இப்படி யாரென்று தெரியாத அறிமுகமற்ற நபர்களின் வீடுகளில் தங்கிச் செல்வது பற்றி என்னென்ன விதமான விமரிசனங்கள் இருக்கக் கூடுமெனத் தெரியவில்லை. ஆனால் நமது பழந்தமிழர் பண்பாட்டில் மட்டுமல்ல ஒருங்கிணைந்த இந்தியப் பண்பாட்டிலும் இப்படி ஒரு விருதோம்பல் வழக்கம் இருந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா?! ‘அதிதி தேவோ பவ’ இதுவே நமது இந்தியப் பண்பாடு. வீட்டுக்கு வரும் விருந்தினர்களை தெய்வமே நம்மைத் தேடி வந்ததாக நினைத்து  மதித்துக் கொண்டாடி உபசரித்து அனுப்பி வைப்பது என்பதே இதன் பொருள். வேத காலத்திலிருந்தே இந்தப் பழக்கம் நம்மவர்களிடையே இருந்திருக்கிறது. 

ஜெயமோகனின் வெண்முரசு நாவலில் பீஷ்மர் இமாச்சல பிரதேசத்துக்கு தேசாந்திரம் செல்கையில் அங்கிருந்த கிராமத்து வீடுகளில் இரவு தங்கி உணவுண்டு உறங்கி மறுநாள் காலையிலும் உணவருந்திச் செல்வதாக ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தக் கிராமத்து வீட்டில் அவருக்கு இளம்பெண்ணொருத்தி  களிமண்ணால் கவசமிடப்பட்டு நெருப்பில் சுட்டுச் சமைத்த நீர்க்கோழி சாப்பிடத் தருவதாக குறிப்பிட்டிருப்பார். வாசிக்கும் போது நாமும் பீஷ்மருடன் அமர்ந்து அந்த நீர்க்கோழியை ருசிப்பது போல ஒரு கற்பனை வந்து போகும். அப்படி ஒரு அருமையான அத்தியாயம் அது!

ஏன் இதைச் சொல்கிறேன் எனில் இன்றைய பேயிங் கெஸ்ட் விவகாரம் போன்றதல்ல இது. அப்போது விருந்தினர்களை மதிக்கும் பண்பு மக்களிடையே எல்லா தரப்பினரிடையேயும் ஒரு பழக்கமாகவே பரவி இருந்திருக்கிறது. இப்போதைப் போல விருந்தினர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு சமைத்துப் போடும் ‘பேயிங் கெஸ்ட்’ கலாச்சாரம் ஆங்கிலேய வருகைக்குப் பின்னானதாக இருக்கலாம். அதற்கு முற்பட்ட காலம் பண்டமாற்று காலம். பணமே இல்லாமல் பொருளுக்குப் பொருளை பண்டம் மாற்றிக் கொண்டார்கள். இன்று அண்ணாச்சி கடையில் மளிகைச் சாமான் வாங்கும் போது மட்டுமல்ல மிகப்பெரிய ரெஸ்டாரெண்டுகளில் குடும்பத்தோடு உணவுண்ட பின்  ரூ1005. 45 காசுகளுக்கு பில் வந்தால் 1006 ரூபாயை நீங்கள் தந்தாக வேண்டும். அப்போது பார்த்து துரதிருஷ்டவசமாக உங்களது பர்ஸில் 1000 ரூ மட்டுமே இருக்கிறது மீதம் ரூ 5.45 இல்லையெனில் பில் கவுண்டரில் எப்படிச் சமாளிப்பது என நீங்கள் மூளையைக் கசக்கிக் கொண்டதில் பிளட் பிரஸர் எகிறவும் கூடும். சிலர் வெகு எளிதாக சூழலைச் சமாளிப்பார்கள், சிலருக்கு பிரஸ்டீஜ் தடுக்கும், சிலருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் கூனிக் குறுகிப்  போவார்கள். இன்று பல பொது இடங்களில் பணம் மட்டுமே மனித மரியாதைகளைத் தீர்மானிக்கிறது எனும்படியான அனுபவங்களைச் சந்தித்தவர்களுக்கு நான் சொல்வது புரியக்கூடும்.

கடந்த வாரம் குழந்தைகளின் விருப்பத்துக்காக சென்னையை அடுத்த மகாபலிபுரத்துக்கு அருகில் இருக்கும் ரிஸார்ட் ஒன்றில் தங்க நேர்ந்தது. ரிஸார்ட்டுகளைப் பொறுத்தவரை எப்போதுமே வசதிகள் அனைத்தும் சொர்க்க லோக தரத்தில் இருந்தாலும் கடைசியில் பில்லைப் பார்க்கும் போது நமக்கு நரக வேதனை தான் என்பது அப்பட்டமான நிஜம். பில்லைப் பார்த்து உங்களுக்கு மயக்கம் வரவில்லை என்றால் நிச்சயமாக நீங்கள் அம்பானி பேரனாகத் தான் இருந்தாக வேண்டும். முதல் நாள் காலை 10 மணிக்கு செக் இன் செய்து மறுநாள் மாலை 4 மணிக்கு செக் அவுட் செய்தோம். 3 அடல்ட் + 1 சில்ட்ரென் கேட்டகிரியில் எங்களுக்கு வந்த பில் தொகை 16 ஆயிரம். மறுநாள் காலைக்கான சிற்றுண்டி மட்டுமே காம்ப்ளிமெண்டரி மற்றபடி மதியச் சாப்பாட்டையும், இரவுச் சாப்பாட்டையும் நாமே தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ரிஸார்ட்டின் உள்ளே ரெஸ்டாரெண்டுகள் உண்டு. அங்கே மதிய உணவும், இரவு உணவும் சாப்பிட வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் சொத்துக்களில் எதையாவது விற்று எடுத்துக்கொண்டு போனால் தான் உண்டு. அதையும் அங்கேயே முடித்துக் கொண்டிருந்தால் நிச்சயம் உங்களுக்கு பில் 25,000 ஐ தாண்டி ஓடும்.

விடுமுறையில் ரிஸார்ட்டுகளுக்குச் சென்றால் பணம் தண்ணீராய்ச் செலவழியும் என்று தெரிந்தும் நம்மால் அவற்றைத் தவிர்க்க முடிவதில்லை. ஏனெனில் குழந்தைகள் விரும்புகிறார்கள். அல்லது குழந்தைகளிடம் அவற்றைப் பற்றிப் பேசிப் பேசியே அப்படியான ஆசையை நாமே உருவாக்குகிறோம் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.. எப்படியோ ஒரு வழியில் இப்படியான செலவுகளுக்கு நம்மை நாமே ஆற்றுப்படுத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை.

முன்பொரு தலைமுறையினர் விடுமுறைகள் தோறும் தாத்தா பாட்டி வீடுகளுக்குச் சென்று திரும்பினார்கள். சொல்வதற்கு அவர்களிடம் ஆற்றில் குளித்த கதைகளும், ஆற்றங்கரை புளியமரத்தில் புளியங்காய் அடித்துது தின்ற கதைகளும் அனேகம் இருந்தன. அதற்குப் பின்னான தலைமுறையினரில் பலர் விடுமுறைக் காலங்கள் தோறும் சம்மர் பயிற்சி வகுப்புகளுக்கும், சம்மர் கேம்புகளுக்கும் சென்று திரும்பினர் அவர்களிடமும் சொல்வதற்கு கேம்ப் கதைகள் அனேகமும் இருக்கவே செய்தன. இப்போது அனேகம் குடும்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் தவறாது ரிஸார்ட்டுகளுக்குச் செல்கிறார்கள். இவர்களிடமும் சொல்லிக் கொள்ள சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமில்லை.

ஆனால் செலவினங்கள் என்று பார்க்கும் போது பின்னது 5 ஸ்டார் ஹோட்டல். முன்னது நிலா முற்றத்துடன் கூடிய கிராமத்துப் பாட்டி வீடு. 5 ஸ்டார் ஹோட்டலில் என்ன தான் முயன்றாலும் பாட்டி வீட்டின் எளிமையயும், அந்நியோன்யத்தையும், பிரியத்தையும் கொண்டு வந்து விடவே முடியாது. ஆகவே மக்களே விடுமுறைக்காலத்தில்  5 ஸ்டார் ஹோட்டல்களிலோ, ரிஸார்ட்டுகளிலோ எங்கே வேண்டுமானாலும் தங்கிச் செல்லுங்கள் ஆனால் பாட்டி வீடுகளுக்கும் ஒருமுறை சென்று வந்தால் பிரியத்தின் வாசம் சுமந்தவர்களாவீர்கள். என கவித்துவமாக கட்டுரையை முடிக்கலாம் தான். ஆனால் இதில் ஒரு சின்ன டிவிஸ்ட் இருக்கிறதே அதையும் சொல்லி முடித்தால் தான் கட்டுரை நிறைவாக இருக்கும். 

சில குழந்தைகள் கேட்கிறார்களாம்... நாங்கள் பாட்டி வீட்டுக்குச் செல்லத் தயார் தான். ஆனால் அவர்கள் அங்கிருந்தால் தானே? சில பாட்டி, தாத்தாக்கள் விடுமுறைக் காலங்கள் தோறும் மூன்று மாதங்கள், ஆறு மாதங்களென மகன் அல்லது மகளைப் பார்க்க வெளிநாடுகளுக்குப் பறந்து விடுகிறார்களே அப்போது நாங்கள் என்ன செய்வது? கிராமத்துப் பாட்டி, தாத்தா வீடுகளில் யார் இருக்கிறார்கள் இப்போது? வெறிச்சோடிய ஊரைக் கண்டு மொட்டு மொட்டென்று உட்கார்ந்திருக்க முடியுமா? கிராமத்தில் இருப்பவர்களுக்கோ விடுமுறைகள் தோறும் நகரத்தில் பொழுதைக் கழிக்க ஆசை. நகரத்தில் இருப்பவர்களோ பெரு நகரங்கள், மாநகரங்களில் இருக்கும் ரிஸார்ட்டுகளைத் தேடிக்கொண்டு டூர் போய் விடுகிறார்கள். பிறகெப்படி பாட்டி வீடுகளுக்குப் போய்ச் சீராடுவதாம்? என்று; அவர்கள் கேட்பது சரி தான். காலம் அப்படி மாறி விட்டது. இப்போது சொல்லுங்கள் பார்க்கலாம் ஆரம்பம் முதல் இதுவரை அளந்ததில் அதிதி தேவோ பவா கலாச்சாரத்துக்கும் பேயிங் கெஸ்ட்,  ரிஸார்ட் கலாச்சாரத்துக்குமான இடைவெளி என்னவென்று தெரிந்ததா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com